Pages

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கடவுளும் கந்தசாமியும். - நிவேதிதா தமிழ் - உயிர்மெய் - உயிரோசையில் வெளிவந்த சிறுகதை.

கடவுளும் கந்தசாமியும்.
நிவேதிதா தமிழ்

(புதுமை பித்தனின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் சிறுகதையின் தழுவல். பிள்ளை - இல்லை! - கடைசி வரியில் புரியும்)
உயிர்மெய் - உயிரோசையில் வெளிவந்த சிறுகதை.
கந்தசாமி கிழற்கு கடற்கரை சாலையின் அந்த பெரிய பங்களாவிலிருந்து பெருமிதத்தோடு வெளியில் வந்தார். ஹவாய் செருப்பில் போட்டிருந்த ஊக்கு - திரும்ப கழண்டுவிட - கையில் எடுத்து பொருத்தினார். கந்தசாமி போக்குவரத்து துறை அலுவலகத்தில் கடை நிலை ஊழியர். தன் மகனுக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் 4 லட்சம் தந்து இடம் உறுதி செய்து விட்டு வெளியில் வந்திருக்கிறார். தெய்வானைக்கு ஒரு போன் செய்து சொல்லலாமா என எண்ணினார். வேண்டாம் - நீ ஒழுங்கா பேசியிருந்தா இன்னும் அம்பதாயிரம் கம்மி பண்ணியிருக்கலாம் என்பாள் - அவளுக்கு நம்மேல் அவ்வளவுதான். டாஸ்மாக் போய்விட்டு வீட்டுக்கு போகும்போது சொல்லலாம். கொஞ்சம் வாடை வந்தால் அவ்வளவு பேச மாட்டாள் என எண்ணிக்கொண்டார். இங்கிருந்து மூணு பஸ் மாறினால்தான் - அவர் அண்ணா நகர் சென்று சேர முடியும். இந்த பஸ் டிக்கெட்ட எப்படியெல்லாம் ஏத்திட்டாங்க - சாதா பஸ் கிடைக்குமா என எண்ணமிட்டார். கந்தசாமி ஒன்றும் வசதி இல்லாத ஆள் இல்லை. அவரின் காக்கி பேன்ட் பழுப்பேறிய வெள்ளை சட்டை - காதறுந்த ஹவாய் செருப்பை பார்த்து அப்படி நினைக்காதீர்கள். அவரின் இன்னோவா காரை எடுத்துக்கொண்டுதான் தெய்வானை அவள் அம்மா வீட்டுக்கு - போய் இருக்கிறாள். டாடா சுமோவை விஜய் பட சூட்டிங்கிற்கு வாடகைக்கு அனுப்பி இருக்கிறார்.

பஸ் வருகிறதா என பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் அந்த சபாரி சூட் போட்ட ஆசாமி அவரை நோக்கி வருவதை பார்த்தார். யாராவது சி பி ஆசாமியாக இருக்கும் என நினைத்துக்கொண்டார். அவர்கள்தான் இப்போதெல்லாம் சபாரி சூட் போடுகிறார்கள்.
இந்த சி பி - ரெய்டு என தினம் படிப்பது அவருள் ஒரு உறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் என்ன? அவர் நீதியாக நேர்மையாகத்தானே நடந்து கொள்கிறார். காசு வாங்கி ஒருதடைவையாவது அவரே வைத்துக்கொண்டிருப்பாரா? எல்லோருக்கும் அவரவர் பங்கை சரியாக கொடுத்துவிடுவார். அதேபோல் அது லைசென்சோ - புதிப்பித்தலோ - வாங்கிய காசுக்கு சரியாக முடித்து கொடுத்துவிடுவார். அது மட்டும் இல்லாமல் - ஆடம்பரம் துளியும் கிடையாது. நம்மகிட்ட எல்லாம் அவங்க - சி பி - ஏன் வருகிறார்கள் - வந்தாலும் இப்ப சீட் வாங்கி தந்தாரே - அமைச்சரின் மைத்துனரின் உதவியாளர் அவர் பாத்துக்க மாட்டாரா?
அந்த சபாரி சூட் ஆசாமி அருகில் வந்து நின்று இவரையே பார்த்தார். ஒருவேளை - வண்டி ரொம்ப ஓட்டையா இருக்கும் - அதான் லைசென்ஸ் புதுப்பிக்க நம்மளை இங்க வந்து மடக்கராரோ என நினைத்தார். அந்த ஆள் சிரித்தார் - இவர் எண்ணத்தை புரிந்து சிரித்ததைப்போல் இருந்தது இவருக்கு, "இங்கிருந்து அண்ணா நகர் செல்ல வேண்டும் - எப்படி செல்வது", என தூய தமிழில் அவர் கேட்டது கந்தசாமிக்கு வேடிக்கையாய் இருந்தது.

"நானும் அங்கதானுங்க போணும். பஸ்சுக்கு பாக்கிறேன்", என்றார்.
"வாடகை சிற்றுந்துகள் இங்கு கிடைக்காதா?" - மறுபடியும் அவரின் தமிழ் உறுத்தியது.
"டாக்ஸி கேக்கறிங்களா? கிடைக்கும். அந்த ரோடு முக்குல ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு பாருங்க - அதும் வாசல்ல நிறைய நிக்கும்". சொன்னவர் - இந்த ஆள் கூட ஒட்டிகிட்டா - பஸ் காசு மிச்சம் - சீக்கிரமும் போய்விடலாம் என எண்ணமிட்டவராக - "அண்ணா நகர்ல எங்க போவணும்" - என்றார்.
சபாரி ஆசாமி, "நீங்களும் அங்கு போவதாகதானே சொன்னீர்கள் - என்னோடு வரலாமே", என்றார்.

ஒருவேளை - கட்டிங்குக்கு ஆள் சேர்க்கிற மாதிரி நம்மை பாதி காசு கொடுக்க சொல்வாரோ என்ற எண்ணத்தை தவிர்க்க இயவில்லை.
"இல்லை இல்லை - நீங்கள் காசு எதுவும் தரவேண்டாம்" - என சபாரி ஆசாமி சொன்னதும், திடுக்கிட்டார். "என்னங்க இது நா மனசுல நினைக்கறதுக்கு பதில் சொல்றிங்க - நீங்க யாரு?" என்றார்.

"கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்", என்றார் கடவுள்.
யாராவது சாமியாராக இருக்கும் என எண்ணினார் கந்தசாமி.
"அப்படியும் இருக்கலாம்" என்றார் கடவுள்.
கொஞ்சம் திகிலாக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு - "சரி வாங்க போலாம்" - என்றார் கந்தசாமி.
"இது எந்த மாதிரியான உணவகம்".
"பணக்காரங்க வார இடமுங்க. டாஸ்மாக் போனா நூறு ரூபாயில முடிச்சிகிறது இங்க ஆயிரம் ஆவுங்க. நமக்கெல்லாம் கட்டுப்படி ஆகாதுங்க. போவணும்னு ஆசை - நாம் போட்டிருக்க சட்டையை பாத்தாலே உட மாட்டனுங்க உள்ள".
"ஆசை இருந்தால் போகலாமே."
"உடமாட்டானுங்க" என ஏக்கத்தோடு சொன்னார் கந்தசாமி.
"நான் பார்த்துக்கொள்கிறேன். வாரும்", என சொல்லி அவர் கை பிடித்து அழைத்து சென்றது - ஏனோ திருவிளையாடல் தருமியை நினைவுக்கு கொண்டுவந்தது கந்தசாமிக்கு.
வணக்கம் சொல்லி கதவு திறந்த காவலாளியும் - மரியாதையாக அழைத்து சென்று நாற்காலியை சரிசெய்து அமர வைத்த பணியாளும் - புது அனுபவமாக இருந்தது கந்தசாமிக்கு.
"என்ன பானம் அருந்தப்போகிறீர்கள்", என சபாரி ஆசாமி கேட்டது - சற்று எரிச்சலை தந்தாலும். "இந்த இடத்துல எல்லாம் - ரெட் லேபில் பிளாக் லேபில் - சாப்பிட்டாதான் மரியாதை. ஆனா ரொம்ப வெலைங்க - எதுனா சாதாரணமா சொல்லுங்க" என்றார்.

"பரவாயில்லை நான் பணம் தருகிறேன் - சொல்லுங்கள்" என்றார் கடவுள்.
பணியாள் கொண்டுவந்த பிளாக் லேபில் கடவுளிடமும் - கடவுள் கேட்ட பழ ரசம் - கந்தசாமியிடமும், இடம் மாற்றி வைக்கப்பட, கடவுள் மாற்றி வைக்க சொன்னார். அப்போது, பழ ரசத்தின் சில துளிகள் கந்தசாமியின் உடை மீது பட, பணியாள் பதறி துடைத்தான். அப்போதுதான் தனது உடை - சபாரியாக மாறி இருப்பதை கந்தசாமி கவனித்தார்.
இந்த ஆள் எதுக்கு இப்ப நம்மகிட்ட வந்து வித்தை காட்டறான். ஒருவேளை வாயிலிருந்து லிங்கம் எடுத்து காட்டி தெய்வானைகிட்ட 2 லட்சம் சுருட்டினானே புளியாங்கோட்டை சாமியார் - அதுமாதிரி ஏதாவது பிளான் பன்றாரோ?
கந்தசாமிக்கு குழப்பமாக இருந்தது.
இரண்டு பெக்குகள் உள்ளே போனதும் - கொஞ்சம் தைரியம் வந்தது.
"கொஞ்சம் சித்து வேலை தெரியும் போலிருக்கு" "நிறையவே தெரியும். அதனால்தான் என்னை ஆதி சித்தன் என்றும் சொல்வார்கள்", என்றார் கடவுள்.

ரெண்டு பெக்குக்கு - ஏறி இருக்கணுமே - ஒருவேளை - உசந்த சரக்குன்றதாலையா இல்லை - இந்த ஆள் பேசறது இறக்கி விட்டுடுதா - சந்தேகமாயிருந்தது கந்தசாமிக்கு.
"இன்னும் கொஞ்சம் ஆர்டர் பண்ணலாமா", என்று கந்தசாமியின் பதிலுக்கு காத்திருக்காமல் பணியாளை அழைத்தார் கடவுள்.
நான்கு இளைஞர்கள் - இரண்டு மேஜைகள் தள்ளி - இன்னொரு பணியாளை - ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தார்கள். வார்த்தைகள் தடித்து இருந்தன. இருவரும் அங்கு கண்களை ஒட்டினர். "சிறுவர்கள் - இவர்கள் கூடவா மது அருந்துகிறார்கள்", கேட்டார் கடவுள்.

"கிரகம் சார். அதுல ஒருத்தன் எம் மவன். அவன் அம்மா கொடுக்கற செல்லம்க. அவனுக்காவதான் நான் இங்க வந்து கண்டவன் கால்ல உழுந்து 4 லட்சம் அழுது இஞ்சினீரிங் சீட் வாங்கினேன். இது அடிக்கிற கூத்த பாருங்க. ஒரு வார்த்தை கேக்க முடியாதுங்க. அவன் அம்மா பத்ர காளியாட்டம் ஆடுவா. தலை எழுத்துங்க", மிகவும் நொந்துகொண்டார் கந்தசாமி. "பரிதாபம்தான்" -என்றார் கடவுள்.

ஆறு பெக் உள்ளே போயிருக்க, இதுக்கு மேல் இந்த ஆளுக்கு செலவு வச்சா நல்லாயிருக்காது என நினைத்த கந்தசாமி, "சரிங்க சார். போலாமா?" என்றார்.
சபாரி ஆசாமி பையிலிருந்து வந்த ஆயிரம் ரூபாய் நோட்டு கற்றை பிரமிப்பாயிருந்தது கந்தசாமிக்கு, இன்னிக்கு நமக்கு நல்ல நேரந்தான், என எண்ணிக்கொண்டார்.
"அண்ணா நகர்ல எந்த தெருவுங்க", என்றார் வெளியில் நடந்துகொண்டு.
"அங்கு கந்தசாமி என்பவரை பார்க்க வேண்டும். போக்குவரத்து துறையில் வேலை செய்கிறார். விலாசம் தேடி கண்டுபிடிக்க வேண்டும்", என்றார் கடவுள்.
"அட - அது நாந்தாங்க" என்றார் கந்தசாமி. ஜானி வாக்கர் அவரின் சிந்தனை வேகத்தை குறைத்திருந்தது போலும்.
"சரி - எதுக்கு பாக்கணும்?" "இந்த உலகத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்கள் வீட்டில் தங்கி ஒருசில நாட்கள் இருந்து - உலகம் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது என தெரிந்துகொள்ள ஆசை. அதுக்கும் மேல .. உங்களுக்கு இன்று நேர இருக்கும் ஒரு பெரிய இழப்பிலிருந்து உங்களை காப்பாற்றவும் சித்தம். நீங்கள் என் பேச்சை கேட்கும் பட்சத்தில்" என்றார் கடவுள்.

"என்னமோ நீங்க சொல்றது புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.", என்றபடி தான் கொண்டுவந்த பணத்தில் மீதி வைத்திருந்த 25,௦௦௦ ரூபாய் சரியாக இருக்கிறதா என பார்க்க கால்சட்டை பையில் கைவிட்டார். அப்போதுதான் - தனது உடை மீண்டும் பழைய உடையாக மாறி இருப்பதை கவனித்தார். இழப்புன்னு சொல்றாரே .. இதுதான் சாமியாருங்க விரிக்கிற மாதிரி வலையா?
இந்த ஆள நம்பலாமா கூடாதா - என எண்ணியபடி, டாக்ஸி இல் அமர்ந்தார்.
ஏற்கனவே நம்ம அக்கா, பொண்டாட்டி தெய்வானை பத்தி தப்பா சொல்லிக்கினு இருக்குது. செக்ரடேரைட்ல வேலை பாக்குற அவ தங்கச்சி புருசன பாக்கத்தான் அப்பப்ப அவ அம்மா வீட்டுக்கு போறான்னு. நாம நம்பலைதான். இருந்தாலும் - இந்த ஆளு ஷோக்கா வேற இருக்கான். இவனை கொண்டுபோய் வீட்டுல வச்சா? சரி... இன்னும் ரெண்டு நாள் லீவுதான். நாம வீட்டுலதான் இருப்போம். சிவா வந்திருக்கான்னு சொல்லிடுவோம். அவன்தான் நானுன்னு சொல்லி வேலைல சேந்தோம் - அதனால அவளால ஒன்னும் சொல்ல முடியாது. இந்தாளுகிட்ட எப்படி சொல்றது!
இப்படி எண்ணமிட்ட கந்தசாமி, "சரிங்க வாங்க. ஆனா ஒரு கண்டிசன் - இந்த சித்து வேலை எல்லாம் பண்ணக்கூடாது. ரெண்டு நாள் இருக்கலாம். ஏன்னா அடுத்த ரெண்டு நாள் லீவு. நாளைக்கு அரசாங்கமும் எதிர் கட்சியும் வேற வேற காரணங்களுக்காக பந்த். அடுத்த நாள் ஞாயிறு. நீங்க இருக்கலாம். தெய்வானைக்கு எங்க வூட்டு மனுஷாள புடிக்காது. ஆனா - பத்தாவது முடிச்சதும் வீட்டை விட்டு ஓடிப்போன எங்க சித்தப்பா மவன் சிவா நீங்கன்னு சொல்லிடறேன். அவன் பேர சொன்னா அவளால ஒன்னும் சொல்ல முடியாது. திங்கக்கிழமை காலைல கிளம்பிடணும் - சரியா?" என்றார் கந்தசாமி.
கடவுள் சரி என்று சொல்லி முடிப்பதற்குள், "இன்னொரு விஷயம் - இந்த ரெண்டு நாளைக்கி டாஸ்மாக் செலவு உங்களது - கே வா?" அந்த காரின் டிரைவர்க்கு கேட்காத தொனியில் பேசினார்.
"சரி", என்றார் கடவுள். ஆனால் தொடர்ந்தார். "அது எப்படி ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் பந்த் பண்றாங்க?" என்றார்.
கந்தசாமிக்கு அரசியல் பிடிக்கும்.அதிலும் அவர் சார்ந்திருக்கும் கட்சி தலைவரை மிக பிடிக்கும். "எதிர் கட்சிங்க பண்றது அக்கிரமுங்க. டாஸ்மாக் எல்லாம் மூடணுமாம். என்ன மாதிரி நாள்முழுக்க உழைக்கிற ஏழைங்களுக்கு இத்த உட்டா என்னங்க இருக்கு. அதுக்காவ பந்த் பண்றாங்க. நம்ம தலைவரு ராஜ தந்திரங்க. அரசியல் சாணக்யன்னு சும்மாவா சொல்றாங்க. இன்னிக்கி எம் பையனுக்கு 14 லட்ச ரூபா இன்ஜினியரிங் சீட்ட நாலு லட்சத்துக்கு வங்கி இருக்கேன்னா - தலைவருதாங்க. இப்ப நான் பாத்துட்டு வந்த மினிஸ்தரு... "

கடவுள் சிரிப்பது மாதிரி தெரிய சற்று நிறுத்தினார் கந்தசாமி. ஆனால் கார் டிரைவர் கவனிப்பதை அறிந்து தொடர்ந்தார்.
சத்தம் கொஞ்சம் அதிகம் இருந்தது. "தங்கமானவருங்க. இந்த பந்துக்கு நம்ம தலிவரு எப்படி பதிலடி கொடுத்தாரு தெரியுமாங்க?எதிர்கட்சிகளின் அராஜக போக்கை எதிர்த்து அதே நாளில் பந்தனு அறிவிச்சுட்டாறு. பள்ளி கல்லூரி அரசு அலுவகங்கள் இயங்காதுன்னு அறிவிச்சதுகூட வித்தியாசம் இல்லீங்க. அரசு நடத்தும் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்களும், டாஸ்மாக்கும் போலிஸ் பாதுகாப்புடன் இயங்கும்னு அறிவிச்சு பட்டய கிளப்பிட்டாருங்க."
அவரின் பேச்சில் தெறித்த வேகம் கடவுளை கொஞ்சம் கலவரப்படுத்தியது.
வீட்டின் கேட்டை பார்த்து கடவுள் கொஞ்சம் அசந்துதான் போனார். இத்தனை பெரிய வீடா.
"எம்மா நேரம்யா?" என்று ஆரம்பித்த தெய்வானை, உடனிருந்த சபாரி ஆசாமியை கண்டு அடங்கினாள்.
கடவுள் ஓட்டுனரிடம் காசு கொடுக்க .. "இது எங்க சித்தப்பா மவன் சிவா... தெய்வானை" என்று மென்று முழுங்கிக்கொண்டிருந்தார் கந்தசாமி.
"மதினிக்கு வாங்கி வந்த வைர அட்டிகை காரிலேயே இருக்கு கந்தசாமி", என கடவுள் சொல்ல, தேவானையின் முகம் மலர தொடங்கியது. அதை பார்த்ததும் ... முழுதாக மலர்ந்து இருந்தது.
சபாரி ஆசாமியின் கையில் பெட்டி ஒன்றும் இல்லாததால் .. சரி ஒரு வேளை சாப்பாடுதானே .. ஒழியட்டும் என நினைத்தவளாய் .. "எங்கம்மா வீட்டுல இருந்து வறுத்த கருவாடு கொண்டாந்தேன். ரசம் மட்டும்தான் வச்சேன். தம்பி வந்துருக்காரு.. பத்து நிமிஷம் இருய்யா. ஒரு கொழம்பு வச்சிடறேன்". என்றாள்.
"சித்து வேலையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன் இல்ல.. " என்று மெதுவாக முனகிவிட்டு .. "தெய்வானைக்கி விருந்தாளிங்களை புடிக்கும்க ... " என்று சத்தம்மாக சொன்னார்.
அடுத்து உண்டு முடித்து வெளியே வந்து கந்தசாமி சார்ம்ஸ் சிகரெட்டை பற்றவைக்கும் வரை.. அவர் பேசிய அரசியல் சித்தாந்தங்கள் .. அவர் விளக்கிய 2 G விவகாரங்கள் எதுவும் கடவுளுக்கு விளங்கியதா என கந்தசாமிக்கு சந்தேகமாகவே இருந்தது. இன்னோவா காரின் டிரைவர் இன்னும் காரை துடைத்துக்கொண்டிருந்தான்.பதினோரு மணிக்கு மேல் ஆகி இருந்தது. "தெய்வானை .. டிரைவரை அனுப்பிடலாமா?" என கந்தசாமி கேட்கும்போது அவரின் கைபேசி அழைத்தது.
தெய்வானை வெளியே வர ... "ஐயோ .. என்னா ஆச்சு எம் புள்ளைக்கி", என போனில் அலறினார் கந்தசாமி.
தெய்வானையின் கூப்பாடு அதிகமாக .. "தே .. சும்மா இரு. அண்ணாசாலையில பைக் ஆக்சிடேண்டாம்.. அவனுக்கு இஷ்டத்துக்கு காச குடுக்காதேன்னா கேக்கிறையா.. நல்லா குடிச்சிட்டு வந்திருப்பான். வா போலாம் .. டிரைவர் வண்டிய எடுப்பா". என்றார். வீட்டுக்கு போகும் நினைப்பில் இருந்த டிரைவர் .. வெறுப்பாக காரை எடுத்தான்.
கடவுள் முன் இருக்கையில் அமர .. கந்தசாமியின் பக்கத்தில் அமர்ந்தபடி புலம்பிக்கொண்டு வந்தாள் தெய்வானை.
நிறைய ரத்தம் சேதமாகி இருக்க.. அவர் பிள்ளையின் இரு நண்பர்கள் அவனுக்கு தங்கள் கைத்துண்டில் கட்டு போட்டு இருந்தார்கள். "தூக்குங்கபா .. இந்த ஆஸ்பத்திரிக்கி போலாம் .." என்றார் கந்தசாமி.
"இந்த மருத்தவமனை போலி.. இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருக்கும் அந்த பெரிய மருத்துவமனைக்கு சென்றால்தான் குழந்தையை காப்பாற்ற முடியும்" என்றார் கடவுள்.
"
சும்மா இருய்யா.. இப்பத்தான் நாலு லட்சம் குடுத்து சீட் வாங்கினேன்.. அந்த ஆஸ்பத்திரியில அநியாய காசு புடுங்குவானுங்க.." என்று சொன்ன கந்தசாமி .. மனைவியை பார்த்தார். தெய்வானை ஆமோதித்து .. இங்கியே போலாங்க என்றாள்.
பையனை அட்மிட் செய்து .. தெய்வானையை உடன் இருக்க செய்து.. கட்டச்சொன்ன பதினாயிரத்துக்கு அந்த சபாரி ஆசாமியிடம் இருந்து ஏதாவது பெயருமா என பார்க்க கந்தசாமி வெளியில் வந்தார். அந்த ஆளை காணவில்லை.
பின்னாடியே வந்த தெய்வானை.. "பாத்தீங்களா ... ஒரு கஷ்டம்னு வந்தவுடனே .. உங்க வீட்டு ஆளுங்க என்ன பண்றாங்கன்னு..." என்றாள்.
நாம் படைத்த மனிதர்களுக்கு சக மனிதர்களை விட அது பிள்ளையாய் இருந்தாலும் ...அவர்கள் படைத்த பணத்தின்மீதுதான் அக்கறை .. என்ன கொடுமை இது. என்று எண்ணியபடி .. கடவுள் நடந்துகொண்டிருந்தார்.

 உயிர்மெய்யில் படிக்க.
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3808

வெள்ளி, 24 டிசம்பர், 2010

எந்திரன்- தெளியவச்சி - தெளியவச்சி - அடிச்சாங்கப்பா

எந்திரன்- தெளியவச்சி - தெளியவச்சி - அடிச்சாங்கப்பா
2010 - நடந்தது நடந்துபோச்சின்னு விட்டுட முடியுங்களா?


சினிமா  - அடாவடி வியாபாரம் - பொய் விளம்பரங்கள் - அதிகார துஷ்பிரயோகம் 

இந்த படத்துக்கு விமர்சனம் எழுதாதவங்களே இல்லை .. பேசாதவங்களே இல்லைன்னு சொல்லலாம். அப்படி என்னதான் பேச(த்த)னாங்கன்னு  பாக்கலாம்.

முதலில் தயாரிப்பு மற்றும் விளம்பரங்கள் பற்றி - எழுதி கிழிக்காதவர்களே இல்லை. சன் டிவியில போட்டு விளம்பரமா தாக்கினார்களாம்.  தினகரன்ல விளம்பரமா வருதாம். அதெல்லாம் சரி - ஏனுங்கோ அந்த டிவியத்தான் பாப்பேன் அந்த பேப்பரைத்தான் வாங்குவேன்னு ஒத்த கால்ல நிக்கறீங்க? அப்புறம் ஐயோ விளம்பரம் வருதேன்னு அழுவறீங்க. தேசம் விட்டு வந்தாலும் - டிஷ்ல பாக்கறீங்களே அப்பு - அப்ப அவன் காட்டார அல்லாத்தையும்தான் பாக்கோணும்.
அந்த ச(ன்)னியனை எல்லாம் உட்டவுங்க யாரும் இந்த அளவு பேத்தமாட்டாங்க.
டிக்கட்டு விலை - என்னவா இருந்தாலும் கொடுத்துட்டு அப்புறம் எதுக்கு புலம்பல்? அந்த அட்டு படத்த நானும் ஆயிரம் கொடுத்து பாத்தேன்னு. பொறுமையா போயிருக்கலாமில்ல. படம் எடுத்த இவனுங்க எம்படம் நல்லா இல்லா போயி கண்டிப்பா பாருங்கன்னா சொல்வான்? 
அத்த உடுங்க, சோப்புல இருந்து பைக்கு கார்னு எத்தன விளம்பரம் வருது? 
அதுக்கெல்லாம் உடனே காசு கொடுத்துடரிங்களா? இல்லை இல்ல? ரஜினி ஐஸ் - பாக்க தானே போனீங்க?
பாத்துட்டு அப்புறம் எதுக்குங்க?
அடுத்து எதிர்மறை விமர்சனங்களில் சில. கதை இல்லையாம்! இல்லையா .. அல்லது .. உங்களுக்கு புரியலையா? புரியலைன்னுதான் நினைக்கிறேன். அபத்தமான சில கேள்விகளுக்கு பதில்  சொன்னோம்னா புரியுமா?
ரோபோ வேகமா சார்ஜ் ஏத்திக்குதாம்  - இப்ப இருக்கிற டெக்னாலஜி ல அது சாத்தியம் இல்லையாம். ஆஹா! மத்த டெக்னாலஜி எல்லாம் இருக்குதாங்க? அதான் சண்டை போடறது பாட்டு பாடறது, லவ் பண்றது எல்லாம்?
 மிஷ்கின்னோட வேகமா சண்டை போடுற கேப்புல - இந்த படத்த ஒரு அடி அடிக்கிறாருங்க சாரு!
சாரு,
தமிழர்களை ஷங்கர் மாட்டு சாணி திங்கவைத்த காட்சிகள்…
http://www.youtube.com/watch?v=8NGh9MewnyY&feature=player_embedded


இப்படி ஒரு லிங்க் கொடுத்து. இதுல வேடிக்கை என்னன்னா - இந்த காண் ஒளியில் இருக்கும் அத்தனை படமும் ஒன்னு மாதியே இருக்கு. ஏனுங்க Ms.Doubt Fire ல இருந்து I Robot கரு வந்துச்சி இல்ல பைசெண்டினியல் மென் - அதுக்கு முன்ன வந்தத கொஞ்சம் improvise பண்ணி எடுத்திருக்கான்னு சொல்ல மாட்டேங்கிறிங்க? ஏன்னா அது வெள்ளக்காரனது?
Inception எத்தன அமெரிக்கன் பாத்திருப்பன்னு நினைக்கறீங்க?  1 சதம் தானுங்க. அது ஒரு 21 மில்லியன் தந்திருக்கும். அது போதுமா? நிச்சயமா இல்ல. அந்த படம் உலகம் மொத்தம் இருக்கும் ஒரு சதம் மக்களுக்காக எடுத்தது. அதனால அது வியாபார சாத்தியமாச்சி.  அது மாதிரி இந்திரன எடுத்து தமிழ் தெலுங்கு இந்தி ரசிகர் பட்டாளத்த நம்பினா? ஒரு சதம் இல்ல - 0.0001 சதம் மக்கள் கூட பாக்க மாட்டாங்க. அதனாலதான் கொஞ்சம் சாதா சிந்தனையும் கொஞ்சம் ரஜனியும் கலந்து வச்சிருக்காங்க. கொஞ்ச நேரம் புத்திசாலித்தனத்த ஒதுக்கி வச்சிட்டு பாக்கத்தான் இந்த படம் (புத்திசாலிகளை பொறுத்தவரை).ஏன்னா நம்ம மக்கள்ல - ஒரு சதத்துக்கும் குறைஞ்சவங்கதான் அதீத கலை ரசனையோட இருக்காங்க.
இன்னிக்கி - இதன் வியாபார நுணுக்கம் - MBA ல பாடமா வச்சிருக்கவன் முட்டாளா?
கொசுவோட பேசினத எத்தனை குழந்தைங்க ரசிச்சது தெரியுமா? 
60 - 37 வயசுன்னு எழுதறிங்களே - அவங்களோட ஒரு நளினமாவது இப்ப இருக்க -  25 - 20 வயசுங்களுக்கு இருக்கா? காதல் அணுக்கள் பாட்டுல - ஐஸ் ஆட்டத்துல ஒரு சதமாவது இப்ப இருக்க எவளாவது பண்ணி இருக்காளா? 
ரெண்டு பேத்தையும் - +2 படிக்கிறாங்கன்னு காட்டலியே! சந்தோஷப்பட்டுக்கோங்க.
எல்லாத்தையும் பாத்துட்டு எம் பொண்ணு ஒரு கேள்வி கேட்டா -
"Daddy - he should have made one more Robot like Aiyshvaryaa and given to the Rajini Robot - the problem would have been solved. I do not know why a scientist cannot think of it".
எனக்கு தலை கொஞ்சம் சுத்திச்சி!























திங்கள், 27 செப்டம்பர், 2010

கேரளாவில் ஒரு நயாகரா

கேரளாவில் ஒரு நயாகரா

This breath taking natural picturesque splendor located at a road distance
of 65 Kms from Trichur (Kerala) & 60 Kms from Cochin International airport.
Try to chalk out a holiday in September just after the monsoons.
The waterfalls will be in full force then.
A tranquil & much needed escape from the troubles & stress of life!








 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இனியவை இனிஎவை!

இனியவை இனிஎவை!
------------------------------------
நிவேதிதா தமிழ்

வெள்ளி மாலை, பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். தங்கை கயலிடம் இருந்து போன். அவர் அமெரிக்காவில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறாராம். ஞாயிறன்று மதிய உணவுக்கு அவரை குடும்பத்துடன் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன் என்றாள். சென்னைக்கு வர முடியுமா என்றாள். என்னை பார்க்க முடியுமா என்று கேட்டாராம். கண்டிப்பாக வர விருப்பம்தான். இரவு மாமாவிடமும் விமலிடமும் கேட்டுவிட்டு உறுதி செய்வதாக சொன்னேன்.
அவர் அந்த காலத்தில் ரசித்து கேட்ட "சிப்பி இருக்குது முத்தும்  இருக்குது" பாட்டு தெருவில் கேட்க, மனம் அந்த இனிய பொழுதுகளை வருடி பார்த்தது.
இருபத்தாறு வருடம். கடைசியாக அவர் பெங்களுரு செல்லும்போது பைபை சொன்னதுதான். ௦01-01-1985  காலை 9 மணி. அதன் பின் பார்க்க கூடவில்லை. அவ்வப்போது கயல் சொல்லுவாள். அதுவும் இந்த 2 வருடமாகத்தான். இ மெயில் அனுப்புவார் என்று. அது உப்பு சப்பில்லாமல் இருக்கும் என்றும் சொல்வாள். ஒரு வேளை காலம் அவரிடம் இருந்த அந்த இனிய சிரிப்பையும் கலகலப்பையும் பிடுங்கி இருக்குமோ. சே இருக்காது. இருக்கக் கூடாது. அவராவது அந்த இயல்பான இனிமையுடன் இருக்க வேண்டும்.
அவர் பேச எந்தனை மணி நேரமும் கேட்கலாம். சிரித்துக்கொண்டே இருக்கலாம். அவர் கண்கள் ஒரு காந்தம் - இல்லை - அதை விட அதிக ஈர்ப்புத் தன்மை கொண்ட அழகிய பூக்கள். அப்போது 12 ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எனது இரண்டாவது மகள் விமலாவின் வயது இருக்கும். ஒரு நாள் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சாம்பார் வைக்க தடுமாறிக்கொண்டு. அவர் அப்பா எனது பள்ளி  ஆசிரியர். அவரை பார்க்க - இல்லை - அப்படி சொல்லிக்கொண்டு - அவர் வீட்டுக்கு போனேன்.
அவரை பிடித்து இழுத்து உட்கார சொல்லிவிட்டு - இரண்டு மணி நேரத்தில் சமைத்தேன். அந்த இரண்டு மணிகளும் மறக்க கூடியதா?
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என யார் சொன்னது? அவரை பேச சொல்லி கேட்டுக் கொண்டு வேலை செய்தால் நிச்சயம் அலுப்பு இல்லாதது மட்டும் இல்லை - அந்த சந்தோஷத்திற்கு இணை? அவர் குடும்பம் கொடுத்து வைத்தது.
ஆஹா ஒஹோ என பாராட்டினார் எனது சமையலை. என் செத்துப்போன பாட்டி சமையலை மூணாம் வகுப்பு படிச்சப்போ சாப்பிட்ட  மாதிரியே இருக்கிறது - அவர்களுக்கு நான் தருவதை உனக்கும் தரட்டுமா என்றார். நான் யோசித்து தலையை பாதி ஆட்டும்போதே தந்துவிட்டார்.
பாட்டி செத்ததை அவர் சொன்னது நினைவுக்கு வந்ததும், எங்கள் பாட்டி செத்தது நினைவுக்கு வருகிறது. அவர் அந்த தெரு வானரம் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி செத்த மூன்றாம் நாள்.அவர் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது. அவர் எங்களை பார்த்துவிட்டார். வானரம் நாங்கள் வந்ததை அறியவில்லை. அவன் முதுகு பக்கம் நாங்கள் இருந்தோம்.
"அண்ணா - நேத்து அருமையான சான்ஸ் - மிஸ் பண்ணிட்டன். கயலோட பாட்டி செத்து போச்சி அண்ணா. போயிருந்தா கட்டி பிடிச்சி அழுதிருக்கலாம்" என்றான்.
கயல் செருப்பை கழட்ட எத்தனித்தாள்.
அவர், "போடா - உயிரோட இருக்கும்போது உட்டுட்டு செத்த பின்னாடி கட்டி புடிக்கிரானாம்" என்றார். "அண்ணா நான் கயலை..." என அவன் முடிக்கும் முன்,
கயல் செருப்பை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இந்த இருபத்தாறு வருடத்தில் - ஒரே ஒரு பாராட்டாவது கிடைத்திருந்தால் - அவரின் பாராட்டு மறந்திருக்குமோ? எங்கே சிரிப்பையே  மறந்துவிட்ட மனிதர்களை மட்டுமே  எனக்காக படைத்திருக்கிறானே.
ஏனோ இரவு முழுதும் கனவுகள். தூங்கியது போலவே  இல்லை. குண்டாக வழுக்கை தலையுடன் அவர் - பார்க்கவே சகிக்கவில்லை. அப்படி ஒருவேளை ஆகி இருப்பாரோ?
சனிக்கிழமை காலையிலேயே கிளம்பி விட்டேன். முடிந்தால் மாலையில் அவரை மட்டும் தனியாக பார்க்க வேண்டும். முடியுமா? பஸ் மிக மெதுவாக செல்வதுபோல் தெரிந்தது.
மதியம் ஒரு மணிக்கு தங்கை வீட்டுக்கு போய் விட்டேன். மூன்று மணிக்குள் அவள் அலுவலகத்துக்கு பத்து முறை போன் செய்திருப்பேன். மூன்று மணிக்குத்தான் அவரிடம் பேச முடிந்ததாம். அவர் நண்பர் ஒருவரை பார்க்க தங்கை வீட்டு அருகில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு 4 மணிக்கு வருவதாகவும் அங்கு போய் அவரை  பார்க்கலாம் என்றும் சொன்னாள். சொன்னவள் உடனே வர வேண்டியதுதானே. 4:30 ௦க்கு  வந்தாள். அவர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். கயல் வாயாடி - அவர் பேசி முடித்து வரட்டும் என நான் சொல்ல - இவள் நேராக சென்று பேச ஆரம்பித்து விட்டாள். அவர் நண்பரும் நன்றாக பேசினார் - இருபத்தாறு வருடம் கழித்து அக்கா இவரை பார்க்கிறாள் என்று அந்த நண்பரிடம் இவள் சொல்ல - அவர் புரிந்து கொண்டாரோ என்னமோ.
உடனே வாழ்த்து சொல்லி கிளம்பிவிட்டார்.
"நல்லா இருக்கிறீங்களா?" என நான் கேட்டு முடிக்கும் முன் அதே பழைய துள்ளலுடன் ஆரம்பித்து விட்டார். "என்ன நீலு கிழவியாயிட்டியே" என்று.  காரின் பின்னிருக்கையில் அவரும் நானும் அமர, கயல் முன் சீட்டில் அமர்ந்து ஓட்டுனருக்கு வழி சொன்னாள். அவரின் உடல் அளவிலோ மனதின் தூய்மையிலோ ஒரு அணுவும் மாற்றமில்லை. தலை மட்டும் நரைத்திருந்தது. அதே புத்திசாலி குழந்தை பேச்சு. அந்த ஷாபிங் காம்ளெக்ஸ் முழுதும் கை பிடித்து கூட்டி சென்றார். எனக்கு நகரும் படிக்கட்டுகளில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. முதல் தடவை தடுமாறியதும் பிடித்துக்கொண்டார். பின்னர் ஒவ்வொரு முறை அவைகள் அருகில் வரும்போதும். இந்த அக்கறை எத்தனை பேரிடம் இருக்கிறது?
அவர் உலகம் சுற்றுவதை - அவர் பார்த்த சீன பெண்களை பற்றி, வாழ்க்கையில் ஒவ்வொரு தேவைகளுக்கும் அளிக்க வேண்டிய அளவான முக்கியத்துவம் பற்றி - பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் மட்டும் எப்படி பேச அத்தனை விஷயங்கள் இருக்கிறது?
எப்போதும் மெதுவாக போகும் நேரம் அவர் அருகில் இருக்கும்போது மட்டும் எப்படி ராக்கெட் வேகம் எடுக்கிறதோ?
கார் வீட்டருகில் நின்றதும், "ஓ இறங்க வேண்டுமா?" என்று நான் கேட்டபோது - எனது ஏக்கம் எனக்கே தெரியாமல் வெளிப்பட்டது.
அடுத்த நாள் அவர் மனைவியையும் கல்லுரியில் படிக்கும் மகன் மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும் மகளையும் பார்த்தேன்.
அவரைப்போலவே குழந்தைத்தனம் மாறாத மனைவி. புத்திசாலி குழந்தைகள். இரண்டு எழுத்துக்கு சொந்தக்காரர் (ஆமாம் இல்லை!) - என நாங்கள் கேலி பேசும் என் தங்கையின் கணவர் கூட அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் வழக்கம்போல் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் "நீலு நீ தானே சமைச்சே",  என்றார் என்னிடம். எப்படி இருந்தது  என்றேன்.   
ஸுப்பர் அருமை என்றார். உடனே - உனது முந்தைய சமையலுக்கு தந்த முழு பாராட்டை இப்போ தர இயலாது - என்று சொல்லி அவர் பார்த்த பார்வை - என்னை எங்கோ ஒரு உலகுக்கு சில மணித்துளிகள் அழைத்து சென்றது.
அவர்கள் விடை பெற்று செல்ல - அவர்களின் நலன் வேண்டி எனது  செல்ல கணபதியை பிரார்த்தித்தேன்.
மதியம் கிளம்பி வீட்டுக்கு வர - ஒரு மன நிறைவு இருந்தது. அடுத்தவர் மட்டும் நம்மை பாராட்ட வேண்டும் என நினைக்கிறோமே நாம் எத்தனை முறை எத்தனை பேரை பாராட்டி இருக்கிறோம் - என அவர் கேட்டது இனி மறக்காது.
வீட்டில் நுழைந்ததும் - போன் அடித்தது. "ஹலோ" என்றேன்.
"ஹேய் ஸ்வீட்டி - நீ நேத்து என் அம்மாகிட்ட கொடுத்து அனுப்பின பிரியாணி சூப்பர்டா" என்றது மறுமுனை. யார் பேசறது என்றேன்.
"சாரி ஆன்டி - உங்க குரல் - விமலா குரலும் உங்கள் குரலும் ஒரே மாதிரி இருக்கு - நான் கிருஷ் பேசறேன்" என்றான்.
"ஓ - பரவாயில்லை. எப்போது நீ காலேஜில் இருந்து வந்தே" என்றேன்.
"நேற்று" என்றான். என் மகளின் நண்பன். எதிர் வீட்டு பையன். நண்பன் மட்டுமா? தெரியவில்லை.
இந்த குழந்தைகளுக்காவது - நல்ல தேவைகளை அறியும் திறமையும் - அதை போராடி  பெறும் துணிவையும் கொடு இறைவா என்று - செல்ல கணபதியை வேண்டிக்கொண்டேன்.

செவ்வாய், 8 ஜூன், 2010

ஷிவ் நவீன்

ஷிவ் நவீன்

அந்த கிரகம் சுய ஒளியுடன் இருந்தது. பால்வெளியின் விளிம்பில். சிறிய குடிலில் இருந்து திருச்சடையன் வெளியில் வந்தார். அவர் நடையில் வயது காரணமான சிறு தள்ளாட்டம் இருந்தது. அவர் மனைவி அபிராமி கோபமாக எதிரில் வந்தாள். தெருவில் மழலைகள் விளையாடிக்கொண்டிருந்தன.
"என்ன காலையிலேயே கிளம்பிவிட்டீர்கள். எத்தனை வயதானாலும் விளையாடல்தானா?"
"என்ன செய்வது தேவி? பதினான்கு உலகுகள் படைத்துவிட்டேன். பதினாலாம் உலகில் இன்று செண்பக பாண்டியனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற வழமையான சந்தேகம் வந்து விட்டது. அவனுடன் சிறிது விளையாடி செம்மொழி வளர்க்க வேண்டும். கீரனை மீண்டும் எரிக்க வேண்டும்."
"இரண்டு பிள்ளைகள் பதினாறு பேரக் குட்டிகள். இன்னும் நாடகம் நடத்த நீங்கள் செல்ல வேண்டுமா?"
"என்ன தேவி இப்படி கேட்கிறாய். அவர்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா? நீ கேட்ட இந்த கேள்வியை அவர்கள் யாராவது இதுவரை கேட்டார்களா?"
"உங்களிடம் கேள்வி கேட்பவரை நெற்றி கண்ணால் பார்ப்பதை நிறுத்தினால் கேட்பார்கள்."
"என்ன உளறுகிறாய்?"
"கோபம் விடுங்கள். நேற்று கூட ஷிவ் கேட்டான். தாத்தா எப்போது ரிடையர் ஆவார் என்று. அவன் புத்திசாலித்தனத்தில் உங்களை உரித்து வைத்திருக்கிறான். அவனிடம் இந்த பதினாலாவது பூமியை தாருங்கள். வருங்காலம் பிள்ளைகளுடையது. பொறுப்பை அளித்தால்தானே அவர்கள் திறமை புரியும்"
"சரி அவனை வரச்சொல்"
அபிராமி ஷிவ் நவீனை அழைத்தாள்.
"நவீன்... தாத்தா உன்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்". அபி முகத்தில் பெருமிதம் இருந்தது.
"சொல்லுங்கள் தலைவரே" - தாத்தாவுக்கு தலைவர் என்று அழைப்பதுதான் பிடிக்கும்.
"ஷிவ் - பதினான்காம் பூவுலகில் செண்பக பாண்டியனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற சந்தேகம் வழமைபோல் வந்திருக்கிறது. இன்று தருமியுடன் கீரனுடன் பாண்டியனுடன் விளையாட அங்கு செல்ல கிளம்பினேன். உனது பாட்டி எனை தடுத்து உன்னை அனுப்ப சொல்கிறாள். உனது எண்ணம் என்ன?"
"இதற்கு மட்டுமா...... அல்ல?"
"இதை நீ சரியாக செய்து முடித்தால் - அந்த பூமி உனது."
"அப்படியானால் சரி"
"இந்தா எனது செய்யுள் - பொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி..."
"தாத்தா நான் செல்ல வில்லை. நீங்களே செல்லுங்கள்."
"தேவி .. நான் சொல்லவில்லை. இவர்களுக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை என்று."
"பக்தர்களின் குறையை எந்நேரமும் கேட்கும் நீங்கள், ஷிவ் சொல்வதையும் கேட்கலாமே."
"வயதானேலே மரியாதை குறைகிறது. சொல்லப்பா."
"தாத்தா மன்னிக்க - தலைவரே - என்னிடம் பொறுப்பு தருவதானால் நான்தான் முடிவு எடுப்பேன். நீங்கள் யுகம் யுகமாக செய்வதை நானும் செய்ய வேண்டுமானால் - நான் எதற்கு?"
"சரி அப்பா - உனது விருப்பம்போல் செய்"
ஷிவ் பொது தேர்தலில் ஜெயித்த கட்சி தலைவனின் நடையில் சென்றான்.
"ஒரு உலகை பாழ் படுத்தி விட்டாய் தேவி" என்றார் சடையன்.
"பார்க்கலாம்" என்றாள் அபி.
அந்த கோவிலில் தருமி புலம்பிக்கொண்டிருந்தான்.
"ஆயிரம் பொண்ணாச்சே ஆயிரம் பொண்ணாச்சே"
ஷிவ் பிரசன்னமானார்.
"தருமியே மன்னரின் சந்தேகம் தீர்க்கும் பாட்டு வேண்டுமா? அதை நான் உனக்கு தருகிறேன்." என்றார்.
தருமியின் புலம்பல் நிற்கவில்லை. தர்கங்கள் முடிந்து பாட்டோடு தருமி அரசவை சென்றான்.
செண்பக பாண்டியன் அரியணையில்.
"எனது செந்தமிழ் சங்கம் தீர்த்து வைக்காத சிக்கலை தீர்க்க வந்த தருமியே - சொல்லுங்கள்" என்றான்.
"மன்னா ... நானே இயற்றி வந்த பாடல். படிக்கிறேன் கேளுங்கள் ...
செந்தமிழ் வளர்க்க சங்கம் போதாது
பைந்தமிழ் வளர பல்கலை போற்று
முடிமணம் அறிய மருத்துவம் வளர்த்து
கணிதம் இருந்தாலும் கலைக்கலாம் உன்மயக்கம்."
செண்பக பாண்டியன் துடித்து எழுந்தான்.
"தருமியே உனது பாட்டு ஒரு தெளிவை தந்தது. கொண்டுவாருங்கள் பொற்கிழியை"
கீரன் எழுந்தார். "நிறுத்துங்கள் மன்னா." என்றார்.
"இந்த பாட்டை நீர்தான் இயற்றிநீரா?"
தருமி உளற .... அனைவரும் சிரிக்க. அவன் மீண்டும் கோவிலில் .....
"புறப்பட்டு என்னோடு", என இறையனார் முன் செல்ல ....
"எவன் என் பாட்டில் குற்றம் கண்டவன்?", நவீனின் சீற்றம் சிவாஜியின் நடிப்பைவிட அதிகம் இருந்தது.
"நான் கீரன். மரியாதையாக பேசுங்கள்."
"என்ன குற்றம் கீரனே... சொல்லிலா பொருளிலா?"
"சொல்லில் இல்லை. பொருளிலும் இல்லை"
"பின்னர்?"
"மன்னரின் சந்தேகத்திற்கு பதில் இல்லையே?"
"பின்னர் எப்படி பொருளில் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டீர்?"
"மீன் கேட்பவனுக்கு ... மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது உமது செய்யுள்."
"அது தவறா?"
"நிச்சயமாக. வர்ணங்கள் இருக்க வேண்டும். சாதிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னன் கூந்தலை முகர்ந்துகொண்டு நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு நல்லாட்சி செய்வான்."
"நக்கீரா நன்றாக என்னை பார்." - நவீனின் நெற்றிக்கண் திறக்க - கீரன் மன்னன் மன்னனின் தேவி அனைவரும் எரிந்தனர்.
அமைச்சர் குழு ஆலையம் நோக்கி விரைந்தது. தொழுதது.
நவீன் பாண்டியனையும் கீரனையும் தேவியையும் பதின்மூன்று லோக சுற்றுலா அழைத்து சென்றான். சாதி சங்க பிரச்சினைகளையும் அது இல்லாத மேல் நாட்டு தொழில் புரட்சிகளையும் காட்டினான்.
மெய்ஞானம் சுடர்விடும் நாட்டில் - ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவாது - என்று அறிவியல் சுடர்விட்ட நாட்டில் - கருமேகம் வரல் ஆகாது.
அந்த பதினான்காவது உலகில் - தமிழ் உலக மொழி ஆக அறிவியல் உறுதுணை ஆனது.
"பார்த்தீர்களா? நம் பேரனை?" எனறாள் அபி.
"உம்ம்ம்ம்" - என்ற கிழவனின் கண்களில் தெரிந்தது பெருமிதம்.

திங்கள், 7 ஜூன், 2010

இந்தியன் உயிர் இந்தியனால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியன் உயிர் இந்தியனால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------
1984 இல் நீங்கள் இந்த சோகத்தை பார்த்திருந்தால் இதன் பாதிப்பு முழுமையாக தெரியும். இருபதாயிரம் பேருக்கு மேல் அப்படியே மாண்டார்கள். தெருவெங்கும் மரண ஓலம். அது ஒரு கோர சம்பவம். புது தில்லியில் ஒரு இன்டர்வியுவிற்கு சென்று திரும்பியிருந்தேன். போபாலை தாண்டி எனது ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த செய்தி. யுனியன் கார்பைட் ஆலையின் விஷ வாயு போபாலை நாசம் செய்து இருந்தது.
இப்போது அமெரிக்காவில் இது போன்ற ஒரு சோகம். BP யின் கடல் சார் ஆழ் துளை கிணற்றில் - ஒரு விபத்து. பதினோரு உயிர்கள் பலி. இன்னும் எண்ணை கடலில் கலந்துகொண்டிருக்கிறது. பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பல மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒபாமா மூன்று முறை பார்வை இட்டார்.
BP யின் இதுவரையான செலவு மட்டும் 1.5 பில்லியன் டாலர்கள். 7000 கோடி ரூபாய்.
அதாவது 11 உயிர் மற்றும் 200000 பேர் வாழ்க்கை பகுதியாக பாதிப்பட்டதிற்கு மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கும் சேர்த்து.
ஆனால் - 20000 (இது அரசு கணக்கு இறந்தவர்கள் லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பது அப்போது நான் தினசரிகளில் படித்தது) - உயிர் மற்றும் லட்சத்திற்கும் மேல் பாதிப்படைந்ததற்கு - இரண்டு வருட சிறை - 25000 ரூபாய் - 500 டாலர் பெறுமான ஜாமீன். ரத்தம் கொதிக்கிறது.
அயோக்கியர்களின் அரசு இயந்திரம் - கொஞ்சமும் நியாய சிந்தனை இல்லாத காட்டு மிராண்டிகள் சுரண்டிக்கொண்டிருக்கும் - இந்தியா. சத்தமாக குரல் கொடுப்போம். ஊதும் சங்கை ஊதுவோம் - விடியும்போது விடியட்டும்.

செவ்வாய், 18 மே, 2010

கண்கள் : சிறுகதை - யூத்ஃபுல் விகடனில் வெளியான படைப்பு.n

கண்கள் : சிறுகதை - நிவேதிதா தமிழ்

- நிவேதிதா தமிழ்


ன்றைய 'தினரவுசு' பத்தாயிரம் பிரதிகள் அதிகம் விற்றது.

செய்தி இதுதான்...


சென்னை, வெள்ளி 10.04.20 : CPL - சென்னை பிரீமியர் லீக் - கமிட்டியில் குப்புசாமி கலாட்டா!

இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதும் தற்போது '11 இடியட்ஸ்' அணியின் பங்குதாரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மகன் 'ராம்' எனும் ராமசாமியை ஏல லிஸ்டில் சேர்க்கவில்லை என இன்று தகராறு செய்ததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இவர் மகன் இதுவரை ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடி இருக்கிறார்.

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனது மகனுக்கு அத்தனை தகுதிகளும் இருப்பதாக கூறினார். இதுவரை ஒரே போட்டியில்தானே விளையாடி இருக்கிறார் என நிருபர்கள் கேட்டதற்கு, "கந்தசாமி எத்தனை தடவை விளையாடி இருக்கிறார்? அவரை எப்படி சேர்த்தார்கள்? அவர் கடைசியாக விளையாடியது திருநெல்வேலியில்தான். அதன் பிறகு எல்லாம் பூஜ்ஜியம்தான். சமீபமாக மெக்சிகோவில் - அந்த சுப்பு லட்சிமியோடு அடித்த கூத்துதான் பேசப்பட்டது. லாங் டிரைவ் போனதும் காபி குடித்ததும் டாங்கோ ஆடியதும். அங்கும் 30 ரன் கூட தேறவில்லை. 150 ரன் கொடுத்து ஒரு விக்கட் கூட எடுக்கவில்லை. பேருக்குதான் ஆல் ரவுண்டர். அவரை எடுக்கும்போது என் மகனை எடுக்க கூடாதா?" என்றார்.

அதற்கு இரண்டு அணி சொந்தக்காரர்களாவது அவரை சேர்க்க ஒட்டு அளித்து இருக்கவேண்டும் அல்லவா? என்ற நிருபர் கேள்விக்கு, "அளிப்பார்கள். அளிக்க வைப்பேன்" என்றார்.

போட்டிகள் இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்க உள்ளன. குப்புசாமி 90 களில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.

*

2018-ல் நோபல் பரிசு வாங்கிய கண் நரம்பியல் நிபுணர் கௌதமி. அவரின் கண் பற்றிய ஆராய்ச்சி உலகை புரட்டி போட்டிருந்தது. நீங்கள் கடவுளின் படைப்பு மனிதன் என நினைத்தால் கடவுளின் படைப்பில் குறை இருக்கிறது. பரிணாம வளர்ச்சியை நம்புவீர்களானால் அதிலும் குறை இருக்கிறது. விழித்திரையில் காட்சிகளை சேகரிக்கும் ரிசெப்டேர்ஸ் - உள் வாங்கிகள் - கேங்கிலியன் எனப்படும் செய்தி அனுப்பும் செல்களுக்கு பின்னால் இருக்கிறது.

இதனால் ஒளி கேங்கிலியன் செல்களை ஊடுருவி பின்னர்தான் ரிசெப்டர்களை அடைகிறது. அந்த ஊடுருவலில் மிகுந்திருக்கும் ஒளியைத்தான் நாம் உணர்கிறோம். ஆனால் விலங்குகளுக்கு அது மாறுபட்டு ரிசெப்டேர்ஸ் முன்னாலும் கேங்கிலியன் செல்கள் பின்னாலும் இருக்கும். இதனால் விலங்குகளால் துல்லியமாக பார்க்க முடியும் விஷயங்கள் மனிதர்களுக்கு பகுதிதான் தெரியும்.கேங்கிலியன் செல்களில் இருந்து வரும் நரம்புகள் கண்ணின் குழி மத்தியில் குவிந்து மூளைக்கு செல்வதால் அங்கு ஒரு குருட்டு வெளி - பிளைன்ட் ஸ்பாட் - இருக்கிறது. இது சில விலங்குகளுக்கு இல்லை.

மனிதன் பார்ப்பது நான்கு சதம் மட்டுமே. அதை நிச்சயமாக மேம்படுத்த முடியும். இந்த வழியில் கௌதமியின் ஆராய்ச்சிக்குத் தான் நோபல் பரிசு கிடைத்திருந்தது.

*

அடுத்தநாள் பத்திரிகைகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். குப்புசாமி சாதித்து இருந்தார். 11 இடியட்ஸ் அணியை மொத்தமாக வாங்கியதுடன், நான்கு அணி சொந்தக்காரர்கள் ராமை சேர்க்க ஓட்டு அளித்தார்கள்.

முதல் நாள் ஆட்டம் அ பிரிவில் 11 இடியட்ஸ் அணியும் வேட்டைக்காரர்கள் அணியும் மோதின. இருபது ஓவர்களில் 128 ரன் எடுத்து, 4 விக்கட்டுகளை இழந்து வெளியேறியது வேட்டைக்காரர்கள் அணி. எல்லோர் கண்களும் ராமின் மீதே இருந்தன. அவன் எல்லைக்கு வந்த 3 கேட்சுகளை பிடித்த லாவகம் பலத்த கைத்தட்டுகளை பெற்றது.

அடுத்து 11 இடியட்ஸ் அணி பேட் செய்ய இறங்கியதும் துவக்க ஆட்டகாரனாக ராம் இறங்கியது ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. 'ராகுல் வேண்டும்' - என்ற கோஷம் ஒரு பக்கம் ஒலித்தது. முதல் ஓவரில் 6 பந்துகளையும் ராம் விளாசியது - 4 சிக்ஸ் 2 பவுண்டரி. அரங்கத்தை உலுக்கியது. ஆறும் நாலும் இல்லாத ஒரு அடிகூட ராமின் ஆட்டத்தில் இல்லை. ஒரே நாளில் ராம் ஹீரோ.

ஆ பிரிவில் கந்தசாமியின் கிளாசிக் ஆட்டம் ரசிகர்களை மிகவும் இழுத்தாலும், ராமின் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு கேட்சையும் தவற விடாத வீரர். இதுவரை அவுட் ஆகாத வீரர். ஒரு பந்தையும் விடாமல் அடிக்கும் வீரர் என - பல பல வர்ணனைகள்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸ் இதழில், அரையிறுதிக்கு முந்தின வெள்ளியன்று வந்த ரிப்போர்ட் அனைவரையும் யோசிக்க வைத்திருந்தது.

அது...

"ரிங் மாஸ்டர் வரும்போதே சூடாக வந்தார். கொத்து மல்லி போட்ட நீர் மோர் கொடுத்து அமரவைத்தோம். இது வரை நடந்த CPL போட்டிகளுக்கும் இந்த அரை இறுதிக்கும் வித்தியாசம் தெரியுமா? என்றார். தெரியுமே. அரையிறுதியில் வெல்பவர் இறுதி போட்டிக்கு போவார் என அப்பாவியாக சொன்னோம். ரிங் மாஸ்டர் சூடானார். மண்ணாங்கட்டி. இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் பகலில் நடந்தன. அரையிறுதி, இரவில் நடக்க இருக்கிறது. ராமின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் பாரும் என்றார். நாம் விழிக்க அவரே தொடர்ந்தார். ராமுக்கு மாலைக்கண் நோய் தெரியுமோ? அவரால் இந்தப் போட்டியில் பிரகாசிக்க முடியுமோ? - நமக்கு தலை சுற்றியது!"

ரசிகர்களுக்கும்தான். டிக்கெட்டின் விலை தாறுமாறாக எகிறியது. ராமின் ஆட்டம் ஒரு சதம் கூட குறையவில்லை. 11 இடியட்ஸ் அணி வழக்கம்போல் மகமகத்தான வெற்றி பெற்றது. ராம் வழக்கம் போல நிருபர்களிடம் சிக்கவில்லை. குப்புசாமி முன்பு கேள்விகேட்ட நிருபரை - இப்ப என்னடா சொல்ற? என்றார். ஆ பிரிவில் கந்தசாமியின் அணி வென்றிருந்தது. இவர்கள் இடையேதான் இறுதி போட்டி எனும்போது, எதிர்பார்ப்பு கூடிப்போனது.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸில் அந்த வார ரிங் மாஸ்டரின் செயதிக்காக அனைவரும் காத்திருக்க, அவர் - "லேட்டாக வந்தார். ரசிகர்கள் காய்ச்சி எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்டர்நெட்டில் உங்க இமேஜை டேமேஜ் பண்ணிட்டங்களே என்று - வடிவேலு ஸ்டைலில் ஒப்பாரி வைத்தோம். அவர் கொஞ்சமும் அசரவில்லை. கௌதமி தெரியுமா என்றார். நோபல் பரிசு வாங்கிய டாக்டர் தானே? என்றோம். ஆமாம், அங்கு இருக்கிறது சூட்சுமம். இந்த இதழ் ரசிகர்கள் கைக்கு கிடைக்கும் நாளில் இறுதி போட்டி. அதற்கு பின்னர் வரும் இதழில், நான் பேசுகிறேன். என்றபடி ஜூட் விட்டார்."

ரிங் மாஸ்டர் கொளுத்தி போட்ட திரி, பற்றி எரிய, கௌதமியை தேடி அலைந்தன மீடியாக்கள். அவர், அமிரிக்காவில் இருந்தார் - தொடர்பு எல்லைக்கு அப்பால்!

சுப்புலட்சுமி VIP வரிசையில் அமர்ந்திருந்தாள். கந்தசாமியின் அணி முதலில் பேட் செய்தது. கந்தசாமி திறமையாக விளையாடி 89 ரன் எடுத்தார். அணி 212 ரன்கள் எடுத்திருந்தது. சுப்புலட்சுமி முகத்தில் பிரகாசம். அடுத்து ராம் பேட் செய்ய இறங்க, கர கோஷம். முதல் ஓவரை, கந்தசாமி வீச, ஆறு பந்துகளும், ஆறு? சிக்ஸர். சுப்புலட்சுமி முகம் தொங்கிபோனது. எந்த பௌலர் போட்டாலும் இரண்டு நான்கு என்று அடித்த ராம் தவறாது கந்தசாமியின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் ஆக்கினான்.

1 இடியட்ஸ் அணி வென்றதாக அறிவித்தபின் - கந்தசாமியின் இரத்த அழுத்தம் 180 ஐ தொட்டிருந்தது. தமிழக முதல்வர் வெற்றிக் கோப்பையை ராமிடம் அளித்தார்.

ராம் கோப்பையை உயர்த்தி, ரசிகர்களிடம் காட்டும் நேரம், சுப்புலட்சுமி வெளியேறினாள். கந்தசாமியின் இரத்த அழுத்தம் 200க்கும் மேல் எகிற, கையில் இருந்த பந்தை ராமின் பின் மண்டை நோக்கி துப்பாக்கி ரவை வேகத்தில் எறிந்தான். ஒரு TV கேமிரா மட்டும் அதை பின் தொடர்ந்தது. அரங்கில் ரசிகர்கள் ஸ்தம்பிக்க, பின்மண்டையை நோக்கி வந்த பந்தை லாவகமாக, கையை பின் நீட்டி ராம் பிடித்தபோது, அரங்கம் அதிர்ந்தது.

மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் இதை தலைப்பு செய்தியாக்கி இருந்தாலும் - பின்னால் வரும் பொருளை ராம் எப்படி கண்டுபிடித்தான் என்று வினவின.

பந்தின் நிழல் ராம் பிடித்திருந்த கோப்பையில் தெரிந்தது என ஒரு டிவி விளக்கம் கொடுத்தது.

ரசிகர்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸுக்காக காத்திருந்தார்கள்.

இரு மடங்கு அதிகமாக அச்சிட்டு இருந்தும், ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸைத் தேடி அலைந்தவர்கள் அனேகம்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸின் ரிங் மாஸ்டர் பகுதி...

"நேராக செய்திக்கு வருகிறேன் - அத்தனை புகழும் கௌதமிகே. மாலைக்கண் நோயாளியான ராமை அவர்தான் குணப்படுத்தினார். அதில் ஒரு சிறு புதுமை. அவருக்கு மனிதக் கண் அமைக்கவில்லை. ஆக்டோபஸ் கண் அமைப்பை அளித்துள்ளார். அதனால் அவரால் சாதாரண மனிதர்கள் பார்ப்பதை விட 4 மடங்கு துல்லியமாக பார்க்க முடியும்.

உதாரணமாக நம்மால் பந்து வருவதை பார்க்க முடியும். அவரால் அந்த பந்து நகர்த்தி விடும் காற்றின் சூழலையும் பார்க்க முடியும். அதுதான் ரகசியம். ஊக்க மருந்து உட்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தகுதி அற்றவர்கள் ஆகிறார்கள். இது?"
ரிங் மாஸ்டர் சிம்பிளாக முடித்திருந்தாலும் - இது?

*




திங்கள், 22 மார்ச், 2010

ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?)

ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?).
*********************************
சாமியார்கள் வரமா சாபமா? இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? சமீபத்தில் பிரபலமான நித்யானந்தா விவகாரத்தில் கவனித்தீர்களானால் - ஒன்று தெரிய வரும் - மெத்த படித்த அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறவரும் சொல்கிறார் - அவரால் குணமானேன் என. உலக இலக்கியத்தை கரைத்து குடித்த சாருவும் சொன்னார் அவரால் அவர் பாரியாள் குணமானதாக. எத்தனையோ அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் அவரிடம் சென்றதாக எழுதுகிறார்கள். இவரிடம் மட்டுமா? சாமியார்கள் - தெளிந்தவர்களும் இருக்கிறார்கள், தில்லு முள்ளுகளும் இருக்கிறார்கள். இவர்களை இனம் காணுவது எப்படி?
ஒரு கதை கேளுங்கள். பின்னர் இனம்காணும் விதம் பார்ப்போம்.
*********
அவன் பிறந்தது ஒரு சிறு கிராமம். திருவண்ணாமலை அருகில். படிப்பு சரியாக ஏறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, "தினமும் இரட்டை சடையில் ஒத்தை ரோஜாவோடு வருகிறாயே? நான் படிக்க உன் அப்பனா பணம் காட்டுகிறான்?" - என கவிதை எழுதினான்.
பதினெட்டு வயதில் அனைத்து விவரமும் கைவந்தது. சாராயம், இரவு ராணிகள், சின்ன திருட்டுகள் அவ்வப்போது போலீஸ் நிலையம். ஒருநாள் அவன் ஒத்தை ரோஜா அழுதாள்.
அவளை உதாசீனப்படுத்திய அடுத்த நாள், இறந்தாள். அது அவனை நேரடியாக பாதிக்கவிட்டாலும், அவன் நட்பு கூட்டத்தின் பேச்சுக்கள் அவனை பாதித்தன. சில நாட்கள் காணாமல் போனான். அவன் திரும்பி வந்தபோது, பேசியவைகள் முதலில் அவன் நண்பர்களை கேலி பேச வைத்தது. "சாத்தானின் வேதம்" என்றார்கள்..
திரும்பவும் காணாமல் போனான். அடுத்த முறை அவன் வந்தபோது, மிகவும் மாறி இருந்தான். புரியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொன்னான். அவன் பேசுவது மிகவும் நியாயமாக இருந்தது. அது எல்லாவற்றையும் விட - அவன் உடன் அழைத்து வந்து இருந்தவர், அவனை விட வயதில் மூத்தவராக இருந்தார். அவனை மிகவும் மரியாதையுடன் அழைத்தார். மூன்று ஏக்கர் நிலத்துடன் ஓரளவு வசதியுடன் இருந்த அவன் பெற்றோருக்கு, இவர்கள் இருவருக்கும் சாப்பாடு போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை. திரும்பவும் அவன் காணாமல் போய் விடுவானோ என்ற பயமும் இருந்தது. அவனின் நண்பன் ஒருமுறை
அவர்கள் நிலத்திற்கு அழைத்து சென்றான். கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள்
ஜமா - அந்த காலை வேளையில் நல்ல சுதியுடன். "வாடா மொடாகுடிகாரா" - என ஒரு நண்பன் இவனை அழைக்க, அவனுடன் வந்திருந்த பெரியவர் - அந்த போதையுடன் ஆக்ரோஷமானார். "என்னடா - சுவாமிஜியை அப்படியா சொன்னாய்? விளங்க மாட்டே. அவர் கால் என் தலையில் பட்டதால்தான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன் தெரியுமா?" - என்று ஆரம்பித்தவர் "உங்க ஊரைவிட்டு போன வெறும் இந்த்ரன் இல்லைடா அவர். அந்த ஆதி சித்தன் சிவனோட மறு அவதாரமடா!" என அடுக்கிக்கொண்டு போக, கூட்டம் ஸ்தம்பித்தது. போதை எல்லாம் சர சரவென இறங்க, அவன் அந்த பெரியவரை அடக்கிக்கொண்டு இருந்தான். "அறியா பிறவிகள் - அவர்களிடம் உண்மை சொல்லவேண்டாம்" என்றான். திருவண்ணாமலை தாண்டாத அவர்கள் - காசி பற்றியும், மானசரோவர் பற்றியும் அவர் விட்ட கதைகள் கேட்டு ஆடிவிட்டார்கள்.
கள்ளுப்பானையில் தடவ வைத்திருந்த சுண்ணாம்பில் அவன் கை சென்றுவர, அந்த பெரியவர், "மொடா குடியன்" என அழைத்தவனிடம், அவர் கையால் திருநீறு வாங்கி வாயில் போடுடா என்றார். அவனும், வேறு வழி இன்றி, அவனருகில் செல்ல, அவன் வாயை திறக்க சொன்னான். அவன் திறக்க, இவன் அவன் வாயில் இட்டான்.
அவனோ அலறி அடித்து எரியுதே என அலற, அந்த பெரியவர், இப்போ தெரியுதா அவர் மகிமை என்றார்.
ஒரு பயம் கலந்த மரியாதை அவனைப்பற்றி வேருன்ற ஆரம்பித்தது.
அவனை அழைத்து சென்ற நண்பன் அங்கிருந்த சிறிய கொட்டாயை - சுத்தம் செய்து அவனை அமர்த்தி, மதிய சாப்பாடு தான் கொண்டு வருவதாக சொல்லி போனான்.
மாலை சிறு கும்பல் வந்து, அவன் சென்ற இடங்கள் அவன் அறிந்து வந்த விஷயங்கள் பற்றி ஆர்வமாக கேட்டது.
அறிந்ததும் அறியாததும், தெரிந்ததும் தெரியாததும், புரிந்ததும் புரியாததும் - வெள்ளமாக அவன் வாய் வர - எல்லாம் தெரிந்தவன் இவன் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் மெல்ல உருவானது. கேள்வி கேட்ட சிலரை, ஸ்வாமிகிட்ட அனர்த்தமா கேட்ககூடாது குழந்தை என அந்த பெரியவர் தனியாக சென்று எடுத்து விளக்கினார். அவருடைய இடது கை சரியாக விளங்காததற்கு அவர் இதுமாதிரி ஒருதடவை கேட்டது காரணம் என்றும் சொன்னார். அதன் பிறகும் யாராவது கேட்பார்களா?

*******
அடுத்த நாள் மதியம், இவனது - இல்லை - இவரது பெருமை கேட்டு பக்கத்து ஊர் பெரியவர் வந்தார். தான் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விரும்புவதாகவும், ஆனால், தனது எதிரி "அவரை" நினைத்து பயமாக இருப்பதாகவும் சொன்னார். சுவாமிஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது தான் செய்த எதற்கும் தான் பயந்ததே இல்லை என நினைக்கும்போது தன்னை பற்றி பெருமையாக இருந்தது.
பைசா இல்லாது திருட்டு ரயில் ஏறி பாஷை தெரியா காசி போகவே பயப்படவில்லை. இலட்சக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு எலக்ஷனில் நிற்க பயப்படுவதா?
"தைரியம் புருஷ லக்ஷணம் - உங்களுக்கு சித்தன் சிவனின் அருள்தான் இல்லை. அதை மட்டும் சரி செய்துவிட்டால் ஜெயம்தான்." என்றார் சுவாமிஜி. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றார் பெரியவர். "சிவன் சித்தம் பணத்தை வைத்தா?", ஒன்று கொடு பத்தாக திரும்பி கிடைக்கும் என்றார்.
தைரியம் வந்த பிறகு அனைத்து லட்சுமிகளும் அடுத்து வருவார்கள் தானே. வந்தார்கள்.
அவர் தேர்தலில் வென்றார். சுவாமிஜி - பேச்சிலேயே வெல்ல ஆரம்பித்தார். ஒன்றை பலதாக்கி சொல்ல சீடர்கள் இருந்தார்கள்.

அதன் பிறகு வருபவர்கள் தாங்களாகவே தந்தார்கள். தருவது குறையும்போது, சிவனுக்கு கேட்கிறேன். இந்த கட்டைக்கு இது போதும் என்றார். அந்த அதிகாரி, தனது மனைவிக்கு கால் வலி என்று அழைத்து வந்த போது, சுவாமிஜிக்கு இரட்டை ஜடை ஒத்தை ரோஜா ஞாபகம் வந்தது. அந்த பௌர்ணமி இரவில் செஞ்சி மலை உச்சியில், பாறையின் நிழலில் அவள் கால் விரல் பின்னி இழுக்கிறது என அமர்ந்ததும், அவள் கணுக்கால் இறுக்கி பிடித்து, உள்ளங்கால் நீவி விட அந்த வலி போய், இருவருக்கும், காம நோய் கண்டதும். பின் அவளை அது காவு கொண்டதும் - நினைவில் வர, வானம் பார்த்து ஷக்தி என்றார். அவள் பெயர்.
முழு நிலா - வானம் ஏறி மூன்று நாழிகை ஆகி இருந்தது.
இந்த இளம் பெண்ணின் கணுக்கால் தொட்டு, உள்ளங்கால் தடவியதும், உணர முடிந்தது. அவள் காதில் முணுமுணுத்தார் - நீ அறியப்படாத ஆராதிக்கப்படாத அழகு என்று. அந்த அதிகாரி அருகில் வர, லேசான சீமைச் சாராய வாடை. அதன் பிறகு, பௌர்ணமி பூஜைகள் பிரமாதமாக நடந்தன. பலரின் கால் கை வலிகள் குணமாக, பலருக்கு அது சொல்லப்பட, பலருக்கு அது மாதிரி வலிகள் வர ஆரம்பித்தது. (நீங்கள் யாரையாவது யாராவது கூட்டிப்போனத்தை நினைத்துகொண்டால் - நான் என்ன செய்ய - இது கதை )
எதாவது சொன்னால்தான் - நமக்கும் சாமியின் அருள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இல்லையானால், நம்மை மட்டமாக நினைப்பார்கள் என நினைத்தே சொன்னவர்களும் உண்டு.
அடுத்தவன் நம்மை பற்றி என்ன நினைப்பான் என்று நினைத்து - அவன் நம்மை பெருமையாக நினைக்கவேண்டும் என்றே காரியம் செய்பவர்கள் - நமது நாட்டில்தான் உண்டு.
************

இவர்களை இனம் காணுவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நம்மை பார்த்ததும் இனம் கண்டு கொள்வார்கள். அவர்களின் வார்த்தைகள் பொதுவானதாக இருக்கும்.
"உங்களுக்கு மனம் சஞ்சலப்பட்டு இருக்கிறது"
"என்னை நம்பாமல் - எதற்கும் பார்ப்போமே என்று வந்திருக்கிறீர்கள்"
"உங்கள் சந்தேகம் தீர வேண்டும் - அதுதானே?"
"பயம் என்பது பிடித்து ஆட்டுகிறது. சிவனின் அல்லது அம்மனின் அருள் இல்லை"
"ஒரு தெய்வ குற்றம் நடந்திருக்கிறது"
இது மாதிரி இருக்கும். நினைத்து பாருங்கள் - வருபவரின் முக குறிப்பை வைத்து இதை நீங்கள் சொல்ல முடியாதா?
உதாரணமாக, திருநீறு அணிந்து, கலவரமான முகத்துடன் இருந்தால் என்ன சொல்வீர்கள். - "தெய்வ குற்றம் என்றுதானே?"
இதில் பாதிக்கும் மேல், அவர்களை அழைத்து வருபவர்கள் முன்பே சொலி இருப்பார்கள். அடுத்ததாக பணம் - பணம் வாங்கும் எவனும் சாமியார் அல்ல. உங்கள் மன சஞ்சலத்தை காசாக்கும் வித்தை செய்பவர்கள், சாமி அல்ல.
உங்களிடம் பயம் இல்லையானால், அதை விதைக்க பார்ப்பார்கள். "நிச்சயமாக ஒரு
துர் தேவதையின் நிழல் உங்கள் மேல் விழுந்திருக்கிறது.அதற்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது என்பார்கள். வற்புறுத்தவில்லை என்பர்கள். அந்த சொல் உங்கள் மனதில் இருக்கும் என்பது தெரியும். அடுத்து - நல்லது கெட்டது - கலந்து வரும் வாழ்வில், கெட்டது நடக்கும் வரை உங்கள் மனம் காத்திருக்கும். வந்ததும், பார்த்தாயா என சிரிக்கும்.
நீங்கள் அதை உண்மை என நம்புவீர்கள். எதற்கும், ஸ்வாமிஜியிடம் கேட்டு விடுவோமே என்று செல்வீர்கள். அம்புட்டுகினாண்ட துமிட்டிகா பத்தை என அவர் நினைப்பார். இதற்கு காரணம், எதையும் பாதுகாப்பாக, safe side - செய்துவிட நினைக்கும் நம் மனநிலைதான்.
அடுத்த முறை சாமியாரிடம் செல்லும் முன் - ஒருமுறை நினைத்து பாருங்கள். "இது தேவையா?" என்று.













.































ஞாயிறு, 21 மார்ச், 2010

ழி என்றோருதேசம்

இருக்கிறது. MD என்று எல்லோராலும் அன்புடன் (!!!???) அழைக்கப்படும் எம். தர்மா சர்வாதிகாரியாக கோலோச்சும் தேசம். அன்று அவனுக்கு அதிர்ச்சி. அவன் தேசத்தில் அரசிடம் இல்லாத 8G தொழில் நுட்பத்துடன் புரட்சி வர இருக்கிறதாம். உளவுத்துறையின் செய்தி இது. MD ஐ உலுக்கி எடுக்கிறது. அந்த தொழில் நுட்பத்தில் அனுப்பப்படும் செய்திகள் உளவுத்துறையால் தொடக்கூட முடியவில்லை. உளவுத்துறை தலைவன் நிஜமாகவே ஆடிப்போய் இருந்தான். யாழினி என்ற பெண்தான் இந்த புரட்சிக்காரர்களுக்கு தலைவி என்றும், அவள் கையில் இருக்கும் நூதன தொலைபேசி அளவிலான கம்ப்யூட்டர் சகல சக்தி வாய்ந்தது என்றும் - அவள் அதில் பிறப்பிக்கும் ஆணைகளை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் தயாராக இருப்பதாவும் MD இடம் சொன்னான்.அவன் தேசத்தில் உழைப்பாளிகள் வெறும் பொம்மைகள்தான் - சரியல்ல - ரோபோக்கள்தான். இந்த காலத்தை போல பல தலைவர்கள் இல்லை. ஒரு சிறு குழு அதிகார வர்க்கம். மற்றவர்கள் சொன்னதை செய்யும் வேலைக்காரர்கள். பிரான்சு தேச புரட்சியின்போது மூன்று எஸ்டேட்டுகள் - மக்கட்பிரிவுகள் இருந்ததாக படித்திருப்பீர்கள். அவர்கள் செல்வந்தர்களான ஆளும் வர்க்கம், மத ஆச்சாரியர்கள் மற்றும் 98 சத சாதாரண மக்கள். ஆனால் இங்கு 2 சத பண முதலைகள் 98 சத சாதாக்கள். இந்த புரட்சி முயற்சியை முறியடிக்க வேண்டும் என முடிவு செய்தான். தனது உயர் மட்ட குழுவை கூட்டினான். தொழில் நுட்ப அதிகாரி அழகு எங்கே என்றான். அவனை இரண்டு நாட்களாக காணவில்லை என உளவுத்துறை செயலர் சொன்னது எங்கோ தவறு நடப்பதை உணர்த்தியது. குழுவில் எத்தனை பேர் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் - என்பது அவன் கேள்வியானது. இந்த புரட்சி மட்டும் வந்துவிட்டால் - அவன் நிலை அழிந்துவிடும். அவன் அந்த குழு கூட்டத்தை முடிக்கும் முன் கொஞ்சம் வரலாறு ---------பதிமூன்றாம் நூற்றாண்டில் வளமையாக இருந்த நாடுதான். அதன் பின்னர் முன்னூறு ஆண்டுகளுக்கு குறுநில மன்னர்களின் சண்டையில் சிறிது பொலிவிழந்தது. அடுத்த முன்னூறு ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமான அந்நிய தேச படையெடுப்புகள். ஒரு அந்நிய நாட்டிடம் பின்னர் முழுமையாக அடிமைப்பட்டது. பிறகு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திர போராட்டம் தீவிரமாகி நூற்றாண்டின் மத்தியில் சுதந்திரம் பெற்றது, பின்னர் பல அரசியல் குழுக்கள் உருவாகின. அந்த அரசியலில் இருந்த ஒவ்வொரு குழுவுக்கும் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே குறிக்கோளானது. சுதந்திரம் பெறும்போது இருந்த தியாக மனப்பான்மை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் மறைந்து போனது. அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுக்கு வந்த வழமையான பள்ளி கல்வியறியா சில அரசியல் வாதிகளுக்கு ஏழை மக்களின் மீது அதீத பாசம் இருந்தது. அவர்களுக்கு கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் வறுமை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் யோசிக்க வைத்ததை உணர்ந்து, பிள்ளைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கினார்கள்.அடுத்து வந்தவர்கள் அந்த இலவச உணவை சீர் செய்து விரிவாக்கினார்கள். திட்டங்கள் நிறையவே பலன் தந்தன. படிப்பறிவு வளர்ந்தது. அதே நேரத்தில் வளர்ந்த - ஆதரவின்றி வளர்ந்த - தொழில் முன்னேற்றம் - இந்த படித்த இளைஞர்களுக்கு உதவியது. பொருளாதார முன்னேற்றம் இந்த இலவசங்கள் தொடர உதவியது. அதன் பிறகு, 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வினை ஆரம்பமானது. தேவைக்காக இலவசங்கள் என்பது போய் - தேர்தலுக்காக இலவசங்கள் என்று ஆனது. மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு உடை இருப்பிடம். முதலில் உணவில் ஆரம்பித்த இலவசம், அடுத்து உடையில் தொடர்ந்தது. பின்னர் இருப்பிடம். அதுவும் முடிந்து, இலவசத்தின் அடுத்த பரிமாணம் ஆரம்பமானது. அது வசதிகளை வாரி வழங்க தொடங்கியது. அடிப்படை கட்டுமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய அரசு, இலவச டி வி செட்டுகளையும் ரேடியோ கணினி எனவும் தர ஆரம்பித்தது. இதற்கு அடிப்படை காரணம் மக்களின் அறியாமை என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருந்தது. இந்த இலவசங்கள் கீழ்த்தட்டு மக்களை அடையும் முன், அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் அதில் வகையான பகுதியை அபகரித்து அனுபவித்தார்கள். இலவசத்தில் திளைத்து உழைப்பை மறந்த ஒரு கூட்டம் உருவானது. அன்றைய பொருளாதார சூழல் அதற்கு ஏதுவாக இருந்தது. நாட்கள் நகர - அடிப்படை கட்டுமான பணிகள் இல்லாததால் தொழில் வளர்ச்சி தேக்கம் உருவானது. அல்லது சூழ்நிலை உருவாக்கியது. அரசே நடத்திய சாராய கடைகளில் வருமானம் குறைந்தது. குடிக்க விருப்பம் இல்லாமல் இல்லை - அதற்கு ஏற்ற வருமானம் இல்லாததால். ஆனால் அடுத்து வந்த அரசுகள் இலவசத்தை தொடரவும் புது இலவசம் அறிவிக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அரசின் கடன் சுமை தாங்க முடியாததாக இருந்தது. திறமையான அதிகாரிகள் அரசு வேலையை விடுத்து - தனியார் வேலைக்கும் அடுத்த நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள். இலவசத்தில் திளைத்தவ்ர்களுக்கும் - இயந்திரத்தில் பணி செய்வோருக்குமான பொருளாதார இடைவெளி மிக அதிகமானது. ********சரி நமது ழி தேசத்தில் என்னமோ நடக்கிறது. அதை பார்த்துவிட்டு வரலாற்றுக்கு திரும்புவோம். யாழினியின் மின் அறிக்கை அனைத்து பொலிட் பீரோ அங்கத்தினர்களையும் உடனே தலை நகர் வர அழைத்திருந்தது. அவளின் அன்பு காதலன் அழகு உடன் இருந்தான். 3.1.31 இல் மாற்றம் வரவேண்டும். இந்த அரசு இயந்திரத்தை செயல் இழக்க செய்கிறோம். இது பதினைந்து நிமிடங்களில் நடக்க வேண்டும். அனைத்து கம்ப்யுட்டர்களும் செயல் மாறி நமது கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அரசின் வானொலி தொலைகாட்சி அத்தனையும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இராணுவ தலைவர்கள் ஒருமணி நேரத்த்தில் மாற்றப்படுவார்கள். புதிய குடியரசை நாம் அமைக்கிறோம் எனறாள். அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அனைவரையும் ஒரு மந்திரத்தில் கட்டுப்பட்ட நிலையில் வைத்திருந்தது. மக்கள் அனைவரும் ஒருசேர ஆமோதித்தார்கள். அழகு யாழினியை முத்தமிட்டான் - அதை அனுமதித்த யாழினி - அடுத்த நிமிடம் அவனை சிறைப்படுத்த சொன்ன போது - அரங்கம் அதிர்ந்தது. அவளின் காரியதரிசி கார்த்திக் உடனே செயல்பட்டார். வரலாறு அங்கேயே நிற்கிறதே. அதை பார்ப்போம்.*******இருபத்தோராம் நூற்றாண்டின் மூன்றாம் பத்தாண்டுகள் அந்த தேசத்தில் பதற்றமானதாக இருந்தது. புதிதாக வந்த அரசு இலவசங்களை தொடர முடியாது திண்டாடியது. அவை ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன. அரசு இலவசத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட கும்பல் அது கிடைக்காத போது வேலை தேட தொடங்கியது. கிடைக்காததால் திருடத்தொடங்கியது. உழைக்கும் நடுத்தர வர்க்கம் அடிமட்ட நிலைக்கு போனது. தடி எடுத்தவன் பிழைத்தான். ஒரு பெரிய சிக்கலான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டது. முதலீடாக போடவேண்டிய பணம் பதுக்கப்பட்டது. எதிர்காலம் குறித்த பயம் என்பது போய், நாளை உயிரோடு இருப்போமா என்றே தெரியாத நிலை வந்தது.கலவரங்கள் தொடர்கதையாக, இராணுவம் அழைக்கப்பட்டது. மேஜர் எம். தர்மா இரும்புக் கரம் எடுத்து வலம் வந்தான். கொன்று குவிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2009/10 இல் சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலையை விஞ்சி இருந்தது. அரசு தலைவர்களையும் அவன் கூண்டோடு அழித்தான். கலகக்காரர்கள் மீது பழி போட்டான். அரசை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ஒரு பய சூழல் உருவானது. MD வணங்க வேண்டியவனான். பண முதலைகள் அவன் பக்கம் விழுந்தார்கள் அவர்களையும் அவர்கள் பணத்தையும் காக்க, பெருக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. அனைத்து சொத்துக்களும் ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது. 98 சத சாதாரண மக்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள். உணவுக்காக அதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது சிறு குழுவாக உருவானதுதான் யாழினியின் சுதந்திர படை.******MD யின் உயர்மட்ட குழு அடுத்து நடக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆணைகள் பிறப்பித்தது. அரசு ஊடகங்களில் ஒவ்வொரு நிமிடமும் பயங்கரவாதிகள் பற்றி எச்சரிக்கை வந்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டிருந்த மக்களுக்கு அது வெறி ஊட்டியது. யாழினியின் 8 G தொழில் நுட்ப கை பேசிகள் ரகசியமாக அனைவருக்கும் கிடைத்தது. 3.1.31 அன்று MD யின் பிறந்தநாளை அரசு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது. MD குடிப்பதில்லை போதை மருந்துகள் உபயோகிப்பதில்லை. புகையிலை வஸ்துக்கள் தொட்டதுகூட இல்லை. அவனுக்கு போதை என்பது - பாராட்டாக மட்டும் இருந்தது. எல்லோரும் அவனை தெய்வம் என்று, தலைவன் என்று ரட்சகன் என்று - பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் . அவன் அதை அமர்ந்து ரசிக்க வேண்டும். அவன் காதில் இருக்கும் மைக்ரோ ஹெட் போனில், காரில் இருக்கும் வீடியோ திரையில் - எப்போதும் பழைய புதிய பாராட்டு விழாக்கள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அன்று அதிகாலையில் விழா ஆரம்பம் ஆகி விட்டது. பாராட்ட புதுப்புது வார்த்தைகளை தேடி அலைந்த களைப்பு அத்தனை முகங்களிலும் தெரிந்தது. மதிய விருந்து முடித்து ஒரு சிறு இடைவேளை. MD சிறிது கண் அயர்ந்து எழுந்ததும் அவனை பாராட்டி கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது. நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அந்த மண்டபத்தில். உச்ச கட்ட நடனங்கள் ஆரம்பிக்கும் போது - மது கோப்பைகள் வலம் வந்தன. நடன மாதுக்கள் கூட்டத்தில் வலம் வந்தனர். ஒரு அதி பரவச உலகை மறந்த உற்சாகம் - சூழலை மந்தகாசம் ஆக்கி இருந்தது. அந்த மண்டபத்தின் கதவுகள் எப்போது தாழிடப்பட்டன என்பது எவரும் அறிந்திருக்கவில்லை.*********இரவு பதினோரு மணிக்கு மண்டபத்தி அகண்ட திரை தானாக ஓளி பெற்றது. கார்த்திக் கம்பீரமாக பேசிக்கொண்டிருந்தார். MD யின் பதவி பறிக்கப்பட்டதாகவும் - புதிய குடியரசு யாழினியின் தலைமையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் அவள் இன்னும் சிறிது நேரத்தில் ஊடகங்களில் தோன்றுவாள் என்றும் அறிவித்தார். யாழினி தோன்றியபோது - மது மாது போதைகள் அனைத்தும் சுத்தமாக இறங்கி இருந்தது. குடியரசு அறிவிப்பை அவள் செய்தபோது - உண்மையான கொண்டாட்டங்கள் தொடங்கின. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும் - நொடியில் திருப்பி அழைக்கவும் திட்டங்களை விவரித்தாள். புதுமை தொழில் நுட்பத்தில் - ஒவ்வொருவரும் அரசை நடத்தும் வழி முறைகளையும் அதற்கான பயிற்சி திட்டங்களையும், அதை ஒவ்வொருவரும் கடை பிடிக்கும் கட்டாயத்தையும் விளக்கினாள்இனி ஒரு முறை அந்த மக்கள் தவறு செய்யமாட்டார்கள்.

ஜித்தன்

ஜித்தன்
-----------
எங்கள் நிறுவனம் கார் கியர்கள் தயாரிக்கிறது. ஜப்பானில் தலைமையகம். இந்தியாவில் இருக்கும் அவர்களின் நான்கு தொழிலகங்களில் எங்களது பெரியது.எங்கள் ஜி. எம் - ராஜ் குமார்.அவனது காரியதரிசி நான். முப்பது வருடங்களாக அவனுக்கு கீழ் வேலை. அவனை விட மூன்று வருடம் மூத்தவன். எங்கள் படிப்பு ஒன்றாக இருந்தாலும் அவன் திறமை எனக்கு வராது.திருட்டு ஜித்தன். சம்பளம் 2 லட்சம் என்றால் அவன் வருமானம் 20 லட்சம் இருக்கும். என்ன செய்ய அவன் உயர உயர - என்னையும் கூட அழைத்து சென்றான். லட்சங்களை விடுங்கள் - நானும்தான் அவனை அண்டி பல லட்சம் பார்த்துவிட்டேன். அவன் திமிர்தான் - சமயத்தில் கத்துவான் பாருங்கள். வேலையை தூக்கி எறிய தோன்றும். சாதக பாதகங்களை பார்த்து பொறுத்துக்கொள்வேன். நான் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஓடாது. அவன் மட்டும் அல்ல அவன் மனைவியும் என்னை படுத்துவாள்.படு பாதகன் என்றாவது மாட்ட வேண்டும் நான் அதை பார்த்து சிரிக்க வேண்டும்.அவன் மகனையும் மகளையும் அமெரிக்காவிலும் லண்டனிலும் படிக்க வைக்கிறான்.ஒன்று சொல்லியாக வேண்டும். உழைப்பு என்பது அவன் உயிராக மூச்சாக இருந்தது.இரவு பத்து மணிக்கு என்னை போனில் அழைத்து அவன் மனைவியை உடனடியாக டாக்டரிடம் அழைத்து போக சொல்லி இருக்கிறான். அவன் அலுவலகத்தில் இருந்துகொண்டு.சில சமயம் நினைத்துக் கொள்வேன். அவன் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அவனாக எடுத்துக்கொள்கிறான் என்ன தவறு என்று.அந்த நாள் வந்தது. ஜப்பானிய தலைமையகம் எல்லா ஜி.எம்மையும் டோக்கியோவுக்கு அழைத்திருந்தது. விவாதத் தலைப்பு - "பணியில் நேர்மை - work ethics". மாட்டினாண்டா - அந்த ஜில் ஜில் நினைவே இனிமையாக இருந்தது.கலவரத்துடன் என்னிடம் கேட்டான். "நமது ஸ்டாப் யாராவது மொட்டை மெயில் அனுப்பி இருப்பார்களோ?"சாகட்டும் பயத்தில் என்று - பட்டும் படாமலும் பதில் தந்தேன்.இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பி சிங்கப்பூர் வழியாக டோக்யோ நரிட விமான நிலையம் அடையும் போது அந்த ஊர் நேரம் மாலை 7 மணி. சுஷி தெரியாகி சிக்கன் ஜானி வாக்கர் - முடித்து 11 மணிக்கு படுக்கையில் விழுந்தேன். இரவு இரண்டு மணிக்கு அடுத்த அறையில் இருந்து போன். இந்த ஒரு வருடத்தில் இறக்குமதி தீர்வை எஞ்சின் வால்வுகளுக்கு எந்தனை சதம் உயர்ந்திருக்கிறது என்று.இவன் மனிதனா இல்லை ஜப்பான் காரனின் ரோபோவா?அடுத்த நாள் உலகின் அனைத்து பகுதி அதிகாரிகளும் பிரசண்டேஷன் கொடுத்தார்கள். ராஜ் மட்டும்தான் அனைவர் கைத்தட்டலையும் பெற்றான். Checks and Balances - தகவறிதலும் சமன்படுத்தலும் - என்று ஆரம்பித்தான். இப்போது இருக்கும் ஆடிட்டிங் சரியில்லை என்றான். அது இறந்தபின் நடத்தும் அறுவை என்றான். ஒவ்வொரு கிளையிலும் ஒரு செயல்திறன் பார்வையாளர் இருக்க வேண்டும் அவர் நேரடியாக தலைமை நிலையத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். இது நேர்மையை நிர்வகிக்கும் என்றான். எல்லோருக்கும் இது பிடிக்கவில்லை - ஆனால் தலை - யோஷிமோ - பரவசம் அடைந்து சரி என்று பாராட்டியதால் - அனைவரும் கை தூக்கினர். என்னடா இது எவனாவது செஞ்சிக்குவானா தனக்கே ஆப்பு - என்று எண்ணிக்கொண்டேன். இந்தியா வந்த ஆறாவது நாள் - இன்டர்வியு செய்தது 10 சார்டட் அக்கௌடன்ட். எல்லோருக்கும் எண்கள் தந்து எழுத்து தேர்வு நடத்தினான். அதே எண்களுடன் நேர்முக தேர்வும். ரங்கராஜன் எல்லாவற்றிலும் முதலாக இருந்தான். வினோத் எல்லாவற்றிலும் கடை. அவர்களின் எண்கள் 4 மற்றும் 8 . வினோத்தின் கண்களில் ராத்திரி குடித்த வோட்கா மிச்சம் இருந்தது. அவன் தந்தைக்கு ஜானி வாக்கர்தான் பிடிக்கும். எத்தனை தடவை எங்களோடு வந்திருப்பார்.அன்று வீடு திரும்பும்போது அவன் காரில் வரச்சொன்னான். அவன் புகழ் பாடுவது பழகிப்போச்சுதானே. பாடினேன். நாலையும் எட்டையும் மாற்றிவிடு என்றான். நான் செய்யாததா - சரி என்று ..... இருங்கள் ... சரி சரி .... அங்கு நல்ல வேடம். அதற்கு பரிகாரம் ஒரு தலையாட்டி ஆடிட்டர். இவன் ஜித்தனா இல்லையா. அவன் வீட்டிற்கு சென்றபின் - நீது அவன் மனைவி - விருந்தோடு காத்திருந்தாள். எங்களின் நட்புக்கு பாராட்டு என்றாள். விருந்து முடிந்தபோது - நீது மட்டும் சிறிது நிதானமாக இருந்தாள்.நான் வீட்டுக்கு போயே ஆகா வேண்டும் என்றேன். நீது கார் ஓட்டினாள். ராஜ் அவன் திறமையை அவனே புகழ்ந்து கொண்டிருந்தான். நான் அவன் அறியாது நீதுவை தீண்டிய நேரம் - அந்த விபத்து. சம்பவ இடம் அம்பு குறியிட்டு தின இதழ்களில் வந்த நேரம் நாங்கள் சொர்க்க/நரக வாசலில்.இருங்கள் கதை முடியவில்லை. மூவரும் ஒருசேர வந்ததால் - ஒரே நேரத்தில் விசாரணை. "ராஜ் நீங்கள் தவறு எதையும் செய்யவில்லை. நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கினீர்கள். உங்கள் மனைவியின் இன்பத்தில் குறுக்கிடவில்லை. மேல் அதிகாரிகளுக்கு உண்மையாய் இல்லை. அது மட்டும் தவறு. அதனால் ஒரு வருட நரகத்திற்கு பின்னர் சுவர்க்கம் செல்லலாம்."அடுத்து நான் - " நேராக நரகம்" -எதிர் பாராததா?அடுத்து நீது - "நீங்கள் ராஜை மணம் மட்டும் செய்தீர்கள் - பின்னர் உங்களின் இரு குழைத்தகளுக்கும் தந்தை இந்த நரன். அதனால் அவனோடு நீங்களும் செல்லுங்கள்." நீது சிரித்தாள். இவன் கொடுத்த தண்டனை வலிக்க வில்லை - நீதுவுடன் எங்கு வேண்டுமானுலும் செல்லலாம்.
ஆனால் - ஒரு கதை முழுக்க நானும் - 30 வருடங்களாக நாங்களும் காத்துவந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டானே - பாவி.
ராஜ் குமாருக்கு சொர்க்கம் சொர்கமாக இருக்குமா?

ஞாயிறு, 7 மார்ச், 2010

யார் கடவுள் -



யார் கடவுள்


எனது மகள் பள்ளியில் இருந்து ஆர்வமாக ஓடி வந்து தனது கட்டுரைக்கு A+ கிடைத்ததை காட்டி, அப்பா மிஸ் கான்லி ("Bra burning feminism is not needed, when we have earth saving motherhood") - இந்த கால அமெரிக்க மகளிர்போல் மார் கச்சை எரித்து பெண்ணியம் நிரூபிக்க வேண்டியதில்லை, தாய்மையை எல்லா இடங்களிலும் காண்பிப்போம் - என எழுதியதை மிகவும் சிலாகித்து எல்லோருக்கும் படித்து காட்டினாள் என்றாள். அவள் பாட்டியின் அபூர்வ தாய்மை அவளுக்கு நானா சொல்லித்தரவேண்டும்?1985 எனது கடைசி தம்பியை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சேர்த்து ஆறு மாதம் ஆகி இருந்தது. எனது பெரிய தம்பியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை - மாயூரத்தில் இருந்து நான் சென்னை வந்து கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது - கிளம்பிவிட்டேன், முன் அறிவிப்பின்றி. மாலை ஆறு மணியிலிருந்து மூன்று தந்தி அடித்திருக்கிறான் என்னை வர சொல்லி. காலை நான் அங்கு சேர்ந்தபோது, பாண்டியன் எனது பெரிய தம்பி அடக்க முடியாத அழுகையோடு இருந்தான். லிம்போ ப்ளாஸ்டிக் லுகேமியா - இரத்த புற்றுநோய் பற்றி நான் நிறைய தேடித்தேடி படித்தேன் அந்த ஆறு மாதங்களில். நினைத்தாலே இனிக்கும் பல முறை பார்த்திருந்தேன். சர்வேஸ் நிச்சயம் பிழைக்க மாட்டான் என முடிவு செய்திருந்தேன். அதற்கு மனதளவில் என்னை தயார் செய்திருந்தேன். அவன் அப்போது ICU வில் இருப்பதை தாங்க முடியவில்லை. சனியன்று சாதாரணமாக இருந்த வயிறு ஞாயிறு மாலை 72 இன்சு வீங்கி இருந்தது. தங்கை அவள் குடும்பம் வந்து பார்த்து சென்றது. அவள்தான் எல்லா உதவிகளும் செய்து கொண்டிருந்தாள். எங்கள் தந்தை ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிழைச்சுக்குவானா என்று மட்டும் நொடிக்கு நூறுதரம் கேட்டுக்கொண்டிருந்தார்.டாக்டர் மைத்ரேயன் (தற்போது அ தி மு க - MP) - நிலைமையின் தீவிரத்தை என்னை அழைத்து சொன்னபோது திங்கள் காலை 8 மணி. டாக்டர் சாகர் (இப்போதும் அங்கு இருக்கிறார் என நினைக்கிறேன்) - தம்பி கவலை படாதே கடவுள் இருக்கிறான் என்றார். டாக்டர் மைத்ரேயன் - இப்போதே வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து செல்லலாம் - தாம்பரத்தில் ஐஸ் ஏற்பாடு செய்கிறோம் என்றபோது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டு அப்பாவிடம் போனேன். அவரிடம் இருந்து அழுகை மட்டுமே வந்தது. பாண்டியன் சர்வேசின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தனியனாய் உணர்ந்தேன் - இல்லை அம்மா இருக்கிறார்கள் - அவர்களிடம் சென்று டாக்டர் இப்படி சொல்கிறார் என்றேன். அவன் அருகிலேயே காலம் கழித்த அம்மா சொன்னார்கள் - "அழாதேடா குழந்தை - அவன் சரியாகிவிடுவான். இப்போ எல்லாம் அவனை கூட்டி செல்ல கூடாது. டாக்டர் கிட்ட சொல். இப்பதான் சாந்தா அம்மா வந்தாங்க - அவன் பிரச்சினை சொன்னங்க. ஒண்ணும் பயப்பட வேண்டாம். " அதை வேத வாக்காக எடுத்து கொண்டேன். எனக்கு தாயிற் சிறந்த கோயில் இல்லை.டாக்டர் மைத்ரேயனிடம் சென்றேன். "அவனுக்கு உயிர் தர முடியாவிட்டாலும் அமைதியான சிரமம் அற்ற மரணம் தாருங்கள். அவன் உயிர் பிரியும் வரை இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது" என்றேன். அவர் புன்னைகைத்தார்.பத்து மணி இருக்கும், ஏதோ கான்பெரென்ஸ் இருக்கும்போல் - அனைத்து டாக்டர்களும் மாயமானார்கள். அம்மா மட்டும் சர்வேசிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். மலம் ஜலம் நின்று ரொம்ப நேரம் ஆகி இருந்தது. நர்ஸ் வந்து அதுவெல்லாம் நின்றுவிட்டால் அவ்வளவுதான் என்று பயமுறித்தி சென்றாள். அம்மா அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.மூன்று மணி இருக்கும் அவன் 100 மில்லி மூத்திரம் போனான். பேசினான்.நான்கு மணி - சாந்தா அம்மா வந்தார்கள் - சர்வேஸ் எப்படி இருக்கே என்றார்கள் - நல்ல இருக்கேன் டாக்டர் நீங்க எப்படி இருக்கீங்க என்றான். அவன் ஜலம் கழித்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அவனுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு வெளியில் சென்றவுடன் - நான் ICU வுக்கு செல்லாமல் அவர்களை பார்த்துகொண்டிருந்தேன். வரவேற்பு அறையில் இருந்த வேங்கடவனுக்கு அவர்கள் நன்றி சொல்லி கை கூப்பி இருந்தார்கள். அம்மா!!!!!அடுத்த இருபது நாட்கள் அவன் ICU வில் இருந்தான். ICU வில் பட்டாசு வெடித்து பார்த்து இருக்கிறீர்களா? தீபாவளி வந்தது. சாந்தா அம்மாவே வாங்கிவந்து தந்தார்கள். சர்வேஸ் மத்தாப்பு கொளுத்தினான் அங்கு. ICU வில்.ஆயிற்று 25 வருடம் - சாந்தா அம்மாவையும் மறக்க முடியாது. மைத்ரேயனையும் சாகரையும் மறக்க முடியாது.ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் - இப்போது 35 வயதில் நலமாக இரண்டு குழந்தைகளோடு இருக்கிறான் சர்வேஸ்.அம்மாவிடம் அன்று கேட்டேன் - அது எப்படி நீ வணங்கும் தெய்வம் மட்டும் உனக்கு பதில் அளிக்கிறது என்று?"புண்ணாக்கு - அன்று எனக்கு தெரிந்ததைத்தான் செய்தேன். சாந்தா அம்மா சொன்னாங்க அவனுக்கு நினைவு தப்பியதும் அழைத்து போங்கள் என்று. நான் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன், நினைவு தப்பாமல் இருக்க. கடவுளை அழைக்க எனக்கு நேரம் எங்கே இருந்தது என்று"நீயே கடவுள் அம்மா உனக்கு எதற்கு இன்னொரு கடவுள்.

யூத்புல் விகடனில் வந்த அனுபவக் கட்டுரை

மகளிர் தின ஸ்பெஷல்
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/nividitatamil050410.asp