Pages

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இனியவை இனிஎவை!

இனியவை இனிஎவை!
------------------------------------
நிவேதிதா தமிழ்

வெள்ளி மாலை, பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். தங்கை கயலிடம் இருந்து போன். அவர் அமெரிக்காவில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறாராம். ஞாயிறன்று மதிய உணவுக்கு அவரை குடும்பத்துடன் வீட்டுக்கு அழைத்திருக்கிறேன் என்றாள். சென்னைக்கு வர முடியுமா என்றாள். என்னை பார்க்க முடியுமா என்று கேட்டாராம். கண்டிப்பாக வர விருப்பம்தான். இரவு மாமாவிடமும் விமலிடமும் கேட்டுவிட்டு உறுதி செய்வதாக சொன்னேன்.
அவர் அந்த காலத்தில் ரசித்து கேட்ட "சிப்பி இருக்குது முத்தும்  இருக்குது" பாட்டு தெருவில் கேட்க, மனம் அந்த இனிய பொழுதுகளை வருடி பார்த்தது.
இருபத்தாறு வருடம். கடைசியாக அவர் பெங்களுரு செல்லும்போது பைபை சொன்னதுதான். ௦01-01-1985  காலை 9 மணி. அதன் பின் பார்க்க கூடவில்லை. அவ்வப்போது கயல் சொல்லுவாள். அதுவும் இந்த 2 வருடமாகத்தான். இ மெயில் அனுப்புவார் என்று. அது உப்பு சப்பில்லாமல் இருக்கும் என்றும் சொல்வாள். ஒரு வேளை காலம் அவரிடம் இருந்த அந்த இனிய சிரிப்பையும் கலகலப்பையும் பிடுங்கி இருக்குமோ. சே இருக்காது. இருக்கக் கூடாது. அவராவது அந்த இயல்பான இனிமையுடன் இருக்க வேண்டும்.
அவர் பேச எந்தனை மணி நேரமும் கேட்கலாம். சிரித்துக்கொண்டே இருக்கலாம். அவர் கண்கள் ஒரு காந்தம் - இல்லை - அதை விட அதிக ஈர்ப்புத் தன்மை கொண்ட அழகிய பூக்கள். அப்போது 12 ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். எனது இரண்டாவது மகள் விமலாவின் வயது இருக்கும். ஒரு நாள் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சாம்பார் வைக்க தடுமாறிக்கொண்டு. அவர் அப்பா எனது பள்ளி  ஆசிரியர். அவரை பார்க்க - இல்லை - அப்படி சொல்லிக்கொண்டு - அவர் வீட்டுக்கு போனேன்.
அவரை பிடித்து இழுத்து உட்கார சொல்லிவிட்டு - இரண்டு மணி நேரத்தில் சமைத்தேன். அந்த இரண்டு மணிகளும் மறக்க கூடியதா?
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என யார் சொன்னது? அவரை பேச சொல்லி கேட்டுக் கொண்டு வேலை செய்தால் நிச்சயம் அலுப்பு இல்லாதது மட்டும் இல்லை - அந்த சந்தோஷத்திற்கு இணை? அவர் குடும்பம் கொடுத்து வைத்தது.
ஆஹா ஒஹோ என பாராட்டினார் எனது சமையலை. என் செத்துப்போன பாட்டி சமையலை மூணாம் வகுப்பு படிச்சப்போ சாப்பிட்ட  மாதிரியே இருக்கிறது - அவர்களுக்கு நான் தருவதை உனக்கும் தரட்டுமா என்றார். நான் யோசித்து தலையை பாதி ஆட்டும்போதே தந்துவிட்டார்.
பாட்டி செத்ததை அவர் சொன்னது நினைவுக்கு வந்ததும், எங்கள் பாட்டி செத்தது நினைவுக்கு வருகிறது. அவர் அந்த தெரு வானரம் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தார். பாட்டி செத்த மூன்றாம் நாள்.அவர் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது. அவர் எங்களை பார்த்துவிட்டார். வானரம் நாங்கள் வந்ததை அறியவில்லை. அவன் முதுகு பக்கம் நாங்கள் இருந்தோம்.
"அண்ணா - நேத்து அருமையான சான்ஸ் - மிஸ் பண்ணிட்டன். கயலோட பாட்டி செத்து போச்சி அண்ணா. போயிருந்தா கட்டி பிடிச்சி அழுதிருக்கலாம்" என்றான்.
கயல் செருப்பை கழட்ட எத்தனித்தாள்.
அவர், "போடா - உயிரோட இருக்கும்போது உட்டுட்டு செத்த பின்னாடி கட்டி புடிக்கிரானாம்" என்றார். "அண்ணா நான் கயலை..." என அவன் முடிக்கும் முன்,
கயல் செருப்பை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இந்த இருபத்தாறு வருடத்தில் - ஒரே ஒரு பாராட்டாவது கிடைத்திருந்தால் - அவரின் பாராட்டு மறந்திருக்குமோ? எங்கே சிரிப்பையே  மறந்துவிட்ட மனிதர்களை மட்டுமே  எனக்காக படைத்திருக்கிறானே.
ஏனோ இரவு முழுதும் கனவுகள். தூங்கியது போலவே  இல்லை. குண்டாக வழுக்கை தலையுடன் அவர் - பார்க்கவே சகிக்கவில்லை. அப்படி ஒருவேளை ஆகி இருப்பாரோ?
சனிக்கிழமை காலையிலேயே கிளம்பி விட்டேன். முடிந்தால் மாலையில் அவரை மட்டும் தனியாக பார்க்க வேண்டும். முடியுமா? பஸ் மிக மெதுவாக செல்வதுபோல் தெரிந்தது.
மதியம் ஒரு மணிக்கு தங்கை வீட்டுக்கு போய் விட்டேன். மூன்று மணிக்குள் அவள் அலுவலகத்துக்கு பத்து முறை போன் செய்திருப்பேன். மூன்று மணிக்குத்தான் அவரிடம் பேச முடிந்ததாம். அவர் நண்பர் ஒருவரை பார்க்க தங்கை வீட்டு அருகில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு 4 மணிக்கு வருவதாகவும் அங்கு போய் அவரை  பார்க்கலாம் என்றும் சொன்னாள். சொன்னவள் உடனே வர வேண்டியதுதானே. 4:30 ௦க்கு  வந்தாள். அவர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். கயல் வாயாடி - அவர் பேசி முடித்து வரட்டும் என நான் சொல்ல - இவள் நேராக சென்று பேச ஆரம்பித்து விட்டாள். அவர் நண்பரும் நன்றாக பேசினார் - இருபத்தாறு வருடம் கழித்து அக்கா இவரை பார்க்கிறாள் என்று அந்த நண்பரிடம் இவள் சொல்ல - அவர் புரிந்து கொண்டாரோ என்னமோ.
உடனே வாழ்த்து சொல்லி கிளம்பிவிட்டார்.
"நல்லா இருக்கிறீங்களா?" என நான் கேட்டு முடிக்கும் முன் அதே பழைய துள்ளலுடன் ஆரம்பித்து விட்டார். "என்ன நீலு கிழவியாயிட்டியே" என்று.  காரின் பின்னிருக்கையில் அவரும் நானும் அமர, கயல் முன் சீட்டில் அமர்ந்து ஓட்டுனருக்கு வழி சொன்னாள். அவரின் உடல் அளவிலோ மனதின் தூய்மையிலோ ஒரு அணுவும் மாற்றமில்லை. தலை மட்டும் நரைத்திருந்தது. அதே புத்திசாலி குழந்தை பேச்சு. அந்த ஷாபிங் காம்ளெக்ஸ் முழுதும் கை பிடித்து கூட்டி சென்றார். எனக்கு நகரும் படிக்கட்டுகளில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. முதல் தடவை தடுமாறியதும் பிடித்துக்கொண்டார். பின்னர் ஒவ்வொரு முறை அவைகள் அருகில் வரும்போதும். இந்த அக்கறை எத்தனை பேரிடம் இருக்கிறது?
அவர் உலகம் சுற்றுவதை - அவர் பார்த்த சீன பெண்களை பற்றி, வாழ்க்கையில் ஒவ்வொரு தேவைகளுக்கும் அளிக்க வேண்டிய அளவான முக்கியத்துவம் பற்றி - பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் மட்டும் எப்படி பேச அத்தனை விஷயங்கள் இருக்கிறது?
எப்போதும் மெதுவாக போகும் நேரம் அவர் அருகில் இருக்கும்போது மட்டும் எப்படி ராக்கெட் வேகம் எடுக்கிறதோ?
கார் வீட்டருகில் நின்றதும், "ஓ இறங்க வேண்டுமா?" என்று நான் கேட்டபோது - எனது ஏக்கம் எனக்கே தெரியாமல் வெளிப்பட்டது.
அடுத்த நாள் அவர் மனைவியையும் கல்லுரியில் படிக்கும் மகன் மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்கும் மகளையும் பார்த்தேன்.
அவரைப்போலவே குழந்தைத்தனம் மாறாத மனைவி. புத்திசாலி குழந்தைகள். இரண்டு எழுத்துக்கு சொந்தக்காரர் (ஆமாம் இல்லை!) - என நாங்கள் கேலி பேசும் என் தங்கையின் கணவர் கூட அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் வழக்கம்போல் எல்லோரையும் கலாய்த்துக்கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் "நீலு நீ தானே சமைச்சே",  என்றார் என்னிடம். எப்படி இருந்தது  என்றேன்.   
ஸுப்பர் அருமை என்றார். உடனே - உனது முந்தைய சமையலுக்கு தந்த முழு பாராட்டை இப்போ தர இயலாது - என்று சொல்லி அவர் பார்த்த பார்வை - என்னை எங்கோ ஒரு உலகுக்கு சில மணித்துளிகள் அழைத்து சென்றது.
அவர்கள் விடை பெற்று செல்ல - அவர்களின் நலன் வேண்டி எனது  செல்ல கணபதியை பிரார்த்தித்தேன்.
மதியம் கிளம்பி வீட்டுக்கு வர - ஒரு மன நிறைவு இருந்தது. அடுத்தவர் மட்டும் நம்மை பாராட்ட வேண்டும் என நினைக்கிறோமே நாம் எத்தனை முறை எத்தனை பேரை பாராட்டி இருக்கிறோம் - என அவர் கேட்டது இனி மறக்காது.
வீட்டில் நுழைந்ததும் - போன் அடித்தது. "ஹலோ" என்றேன்.
"ஹேய் ஸ்வீட்டி - நீ நேத்து என் அம்மாகிட்ட கொடுத்து அனுப்பின பிரியாணி சூப்பர்டா" என்றது மறுமுனை. யார் பேசறது என்றேன்.
"சாரி ஆன்டி - உங்க குரல் - விமலா குரலும் உங்கள் குரலும் ஒரே மாதிரி இருக்கு - நான் கிருஷ் பேசறேன்" என்றான்.
"ஓ - பரவாயில்லை. எப்போது நீ காலேஜில் இருந்து வந்தே" என்றேன்.
"நேற்று" என்றான். என் மகளின் நண்பன். எதிர் வீட்டு பையன். நண்பன் மட்டுமா? தெரியவில்லை.
இந்த குழந்தைகளுக்காவது - நல்ல தேவைகளை அறியும் திறமையும் - அதை போராடி  பெறும் துணிவையும் கொடு இறைவா என்று - செல்ல கணபதியை வேண்டிக்கொண்டேன்.