Pages

செவ்வாய், 18 மே, 2010

கண்கள் : சிறுகதை - யூத்ஃபுல் விகடனில் வெளியான படைப்பு.n

கண்கள் : சிறுகதை - நிவேதிதா தமிழ்

- நிவேதிதா தமிழ்


ன்றைய 'தினரவுசு' பத்தாயிரம் பிரதிகள் அதிகம் விற்றது.

செய்தி இதுதான்...


சென்னை, வெள்ளி 10.04.20 : CPL - சென்னை பிரீமியர் லீக் - கமிட்டியில் குப்புசாமி கலாட்டா!

இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதும் தற்போது '11 இடியட்ஸ்' அணியின் பங்குதாரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மகன் 'ராம்' எனும் ராமசாமியை ஏல லிஸ்டில் சேர்க்கவில்லை என இன்று தகராறு செய்ததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இவர் மகன் இதுவரை ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடி இருக்கிறார்.

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனது மகனுக்கு அத்தனை தகுதிகளும் இருப்பதாக கூறினார். இதுவரை ஒரே போட்டியில்தானே விளையாடி இருக்கிறார் என நிருபர்கள் கேட்டதற்கு, "கந்தசாமி எத்தனை தடவை விளையாடி இருக்கிறார்? அவரை எப்படி சேர்த்தார்கள்? அவர் கடைசியாக விளையாடியது திருநெல்வேலியில்தான். அதன் பிறகு எல்லாம் பூஜ்ஜியம்தான். சமீபமாக மெக்சிகோவில் - அந்த சுப்பு லட்சிமியோடு அடித்த கூத்துதான் பேசப்பட்டது. லாங் டிரைவ் போனதும் காபி குடித்ததும் டாங்கோ ஆடியதும். அங்கும் 30 ரன் கூட தேறவில்லை. 150 ரன் கொடுத்து ஒரு விக்கட் கூட எடுக்கவில்லை. பேருக்குதான் ஆல் ரவுண்டர். அவரை எடுக்கும்போது என் மகனை எடுக்க கூடாதா?" என்றார்.

அதற்கு இரண்டு அணி சொந்தக்காரர்களாவது அவரை சேர்க்க ஒட்டு அளித்து இருக்கவேண்டும் அல்லவா? என்ற நிருபர் கேள்விக்கு, "அளிப்பார்கள். அளிக்க வைப்பேன்" என்றார்.

போட்டிகள் இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்க உள்ளன. குப்புசாமி 90 களில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.

*

2018-ல் நோபல் பரிசு வாங்கிய கண் நரம்பியல் நிபுணர் கௌதமி. அவரின் கண் பற்றிய ஆராய்ச்சி உலகை புரட்டி போட்டிருந்தது. நீங்கள் கடவுளின் படைப்பு மனிதன் என நினைத்தால் கடவுளின் படைப்பில் குறை இருக்கிறது. பரிணாம வளர்ச்சியை நம்புவீர்களானால் அதிலும் குறை இருக்கிறது. விழித்திரையில் காட்சிகளை சேகரிக்கும் ரிசெப்டேர்ஸ் - உள் வாங்கிகள் - கேங்கிலியன் எனப்படும் செய்தி அனுப்பும் செல்களுக்கு பின்னால் இருக்கிறது.

இதனால் ஒளி கேங்கிலியன் செல்களை ஊடுருவி பின்னர்தான் ரிசெப்டர்களை அடைகிறது. அந்த ஊடுருவலில் மிகுந்திருக்கும் ஒளியைத்தான் நாம் உணர்கிறோம். ஆனால் விலங்குகளுக்கு அது மாறுபட்டு ரிசெப்டேர்ஸ் முன்னாலும் கேங்கிலியன் செல்கள் பின்னாலும் இருக்கும். இதனால் விலங்குகளால் துல்லியமாக பார்க்க முடியும் விஷயங்கள் மனிதர்களுக்கு பகுதிதான் தெரியும்.கேங்கிலியன் செல்களில் இருந்து வரும் நரம்புகள் கண்ணின் குழி மத்தியில் குவிந்து மூளைக்கு செல்வதால் அங்கு ஒரு குருட்டு வெளி - பிளைன்ட் ஸ்பாட் - இருக்கிறது. இது சில விலங்குகளுக்கு இல்லை.

மனிதன் பார்ப்பது நான்கு சதம் மட்டுமே. அதை நிச்சயமாக மேம்படுத்த முடியும். இந்த வழியில் கௌதமியின் ஆராய்ச்சிக்குத் தான் நோபல் பரிசு கிடைத்திருந்தது.

*

அடுத்தநாள் பத்திரிகைகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். குப்புசாமி சாதித்து இருந்தார். 11 இடியட்ஸ் அணியை மொத்தமாக வாங்கியதுடன், நான்கு அணி சொந்தக்காரர்கள் ராமை சேர்க்க ஓட்டு அளித்தார்கள்.

முதல் நாள் ஆட்டம் அ பிரிவில் 11 இடியட்ஸ் அணியும் வேட்டைக்காரர்கள் அணியும் மோதின. இருபது ஓவர்களில் 128 ரன் எடுத்து, 4 விக்கட்டுகளை இழந்து வெளியேறியது வேட்டைக்காரர்கள் அணி. எல்லோர் கண்களும் ராமின் மீதே இருந்தன. அவன் எல்லைக்கு வந்த 3 கேட்சுகளை பிடித்த லாவகம் பலத்த கைத்தட்டுகளை பெற்றது.

அடுத்து 11 இடியட்ஸ் அணி பேட் செய்ய இறங்கியதும் துவக்க ஆட்டகாரனாக ராம் இறங்கியது ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. 'ராகுல் வேண்டும்' - என்ற கோஷம் ஒரு பக்கம் ஒலித்தது. முதல் ஓவரில் 6 பந்துகளையும் ராம் விளாசியது - 4 சிக்ஸ் 2 பவுண்டரி. அரங்கத்தை உலுக்கியது. ஆறும் நாலும் இல்லாத ஒரு அடிகூட ராமின் ஆட்டத்தில் இல்லை. ஒரே நாளில் ராம் ஹீரோ.

ஆ பிரிவில் கந்தசாமியின் கிளாசிக் ஆட்டம் ரசிகர்களை மிகவும் இழுத்தாலும், ராமின் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு கேட்சையும் தவற விடாத வீரர். இதுவரை அவுட் ஆகாத வீரர். ஒரு பந்தையும் விடாமல் அடிக்கும் வீரர் என - பல பல வர்ணனைகள்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸ் இதழில், அரையிறுதிக்கு முந்தின வெள்ளியன்று வந்த ரிப்போர்ட் அனைவரையும் யோசிக்க வைத்திருந்தது.

அது...

"ரிங் மாஸ்டர் வரும்போதே சூடாக வந்தார். கொத்து மல்லி போட்ட நீர் மோர் கொடுத்து அமரவைத்தோம். இது வரை நடந்த CPL போட்டிகளுக்கும் இந்த அரை இறுதிக்கும் வித்தியாசம் தெரியுமா? என்றார். தெரியுமே. அரையிறுதியில் வெல்பவர் இறுதி போட்டிக்கு போவார் என அப்பாவியாக சொன்னோம். ரிங் மாஸ்டர் சூடானார். மண்ணாங்கட்டி. இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் பகலில் நடந்தன. அரையிறுதி, இரவில் நடக்க இருக்கிறது. ராமின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் பாரும் என்றார். நாம் விழிக்க அவரே தொடர்ந்தார். ராமுக்கு மாலைக்கண் நோய் தெரியுமோ? அவரால் இந்தப் போட்டியில் பிரகாசிக்க முடியுமோ? - நமக்கு தலை சுற்றியது!"

ரசிகர்களுக்கும்தான். டிக்கெட்டின் விலை தாறுமாறாக எகிறியது. ராமின் ஆட்டம் ஒரு சதம் கூட குறையவில்லை. 11 இடியட்ஸ் அணி வழக்கம்போல் மகமகத்தான வெற்றி பெற்றது. ராம் வழக்கம் போல நிருபர்களிடம் சிக்கவில்லை. குப்புசாமி முன்பு கேள்விகேட்ட நிருபரை - இப்ப என்னடா சொல்ற? என்றார். ஆ பிரிவில் கந்தசாமியின் அணி வென்றிருந்தது. இவர்கள் இடையேதான் இறுதி போட்டி எனும்போது, எதிர்பார்ப்பு கூடிப்போனது.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸில் அந்த வார ரிங் மாஸ்டரின் செயதிக்காக அனைவரும் காத்திருக்க, அவர் - "லேட்டாக வந்தார். ரசிகர்கள் காய்ச்சி எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்டர்நெட்டில் உங்க இமேஜை டேமேஜ் பண்ணிட்டங்களே என்று - வடிவேலு ஸ்டைலில் ஒப்பாரி வைத்தோம். அவர் கொஞ்சமும் அசரவில்லை. கௌதமி தெரியுமா என்றார். நோபல் பரிசு வாங்கிய டாக்டர் தானே? என்றோம். ஆமாம், அங்கு இருக்கிறது சூட்சுமம். இந்த இதழ் ரசிகர்கள் கைக்கு கிடைக்கும் நாளில் இறுதி போட்டி. அதற்கு பின்னர் வரும் இதழில், நான் பேசுகிறேன். என்றபடி ஜூட் விட்டார்."

ரிங் மாஸ்டர் கொளுத்தி போட்ட திரி, பற்றி எரிய, கௌதமியை தேடி அலைந்தன மீடியாக்கள். அவர், அமிரிக்காவில் இருந்தார் - தொடர்பு எல்லைக்கு அப்பால்!

சுப்புலட்சுமி VIP வரிசையில் அமர்ந்திருந்தாள். கந்தசாமியின் அணி முதலில் பேட் செய்தது. கந்தசாமி திறமையாக விளையாடி 89 ரன் எடுத்தார். அணி 212 ரன்கள் எடுத்திருந்தது. சுப்புலட்சுமி முகத்தில் பிரகாசம். அடுத்து ராம் பேட் செய்ய இறங்க, கர கோஷம். முதல் ஓவரை, கந்தசாமி வீச, ஆறு பந்துகளும், ஆறு? சிக்ஸர். சுப்புலட்சுமி முகம் தொங்கிபோனது. எந்த பௌலர் போட்டாலும் இரண்டு நான்கு என்று அடித்த ராம் தவறாது கந்தசாமியின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் ஆக்கினான்.

1 இடியட்ஸ் அணி வென்றதாக அறிவித்தபின் - கந்தசாமியின் இரத்த அழுத்தம் 180 ஐ தொட்டிருந்தது. தமிழக முதல்வர் வெற்றிக் கோப்பையை ராமிடம் அளித்தார்.

ராம் கோப்பையை உயர்த்தி, ரசிகர்களிடம் காட்டும் நேரம், சுப்புலட்சுமி வெளியேறினாள். கந்தசாமியின் இரத்த அழுத்தம் 200க்கும் மேல் எகிற, கையில் இருந்த பந்தை ராமின் பின் மண்டை நோக்கி துப்பாக்கி ரவை வேகத்தில் எறிந்தான். ஒரு TV கேமிரா மட்டும் அதை பின் தொடர்ந்தது. அரங்கில் ரசிகர்கள் ஸ்தம்பிக்க, பின்மண்டையை நோக்கி வந்த பந்தை லாவகமாக, கையை பின் நீட்டி ராம் பிடித்தபோது, அரங்கம் அதிர்ந்தது.

மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் இதை தலைப்பு செய்தியாக்கி இருந்தாலும் - பின்னால் வரும் பொருளை ராம் எப்படி கண்டுபிடித்தான் என்று வினவின.

பந்தின் நிழல் ராம் பிடித்திருந்த கோப்பையில் தெரிந்தது என ஒரு டிவி விளக்கம் கொடுத்தது.

ரசிகர்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸுக்காக காத்திருந்தார்கள்.

இரு மடங்கு அதிகமாக அச்சிட்டு இருந்தும், ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸைத் தேடி அலைந்தவர்கள் அனேகம்.

ஸ்போர்ட்ஸ் ஸ்பேஸின் ரிங் மாஸ்டர் பகுதி...

"நேராக செய்திக்கு வருகிறேன் - அத்தனை புகழும் கௌதமிகே. மாலைக்கண் நோயாளியான ராமை அவர்தான் குணப்படுத்தினார். அதில் ஒரு சிறு புதுமை. அவருக்கு மனிதக் கண் அமைக்கவில்லை. ஆக்டோபஸ் கண் அமைப்பை அளித்துள்ளார். அதனால் அவரால் சாதாரண மனிதர்கள் பார்ப்பதை விட 4 மடங்கு துல்லியமாக பார்க்க முடியும்.

உதாரணமாக நம்மால் பந்து வருவதை பார்க்க முடியும். அவரால் அந்த பந்து நகர்த்தி விடும் காற்றின் சூழலையும் பார்க்க முடியும். அதுதான் ரகசியம். ஊக்க மருந்து உட்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தகுதி அற்றவர்கள் ஆகிறார்கள். இது?"
ரிங் மாஸ்டர் சிம்பிளாக முடித்திருந்தாலும் - இது?

*