Pages

புதன், 24 பிப்ரவரி, 2010

பூகம்பம் - யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை






பூகம்பம் : சிறுகதை - நிவேதிதா தமிழ்

யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை.

அது பூமிகாவின் அலுவலகம்.
பூவுலகின் இயக்கங்களை நிர்ணயிக்கும் உயரிய இனங்கள் வாழும் நகரின் மத்தியில் இருந்தது அது.
கின்னரன் விக்னேஷ் பூமிகாவின் முன்னால் பலி ஆடாக நின்றிருந்தான். காலத்தை கடந்த அவர்கள் வெளியில் பூவுலகில் நடந்த நடக்கப்போகும் நிகழ்வுகளின் பிரதிகளை ஆய்ந்து கொண்டிருந்தாள்.
அவள் எந்திரத்தில் காலம் நின்றிருந்த நேரம் 2010 ஜனவரி 12.
"என்ன ஒரு பேரழிவு கின்னரா ஹைதியில். மூன்று லட்சம் பேர் சாகிறார்கள். இதை தடுக்க வேண்டிய விஞ்ஞான வளர்ச்சி ஏன் இல்லை."
"அது கிம்புருடன் அறிவொளி.."
"அழைக்கிறேன் அவனையும்," என்றாள்.
பலியாடுகள் இரண்டாகி நிற்க - நாசாவின் Saturn V ராக்கெட்டை கொண்டு வந்திருந்தாள் இருவரின் முன்னும். அவர்களின் தேக பரிமாணத்துக்கு அது கையில் வைத்து பார்க்க போதுமானதாக இருந்தது.






"புவியை நடத்தும் நமது பரிணாம வளர்ச்சி தத்துவம் உங்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன். சொல்லுங்கள்.. இந்த ராக்கெட்டில் மனிதன் ஏன் 5 உந்து எந்திரங்களை பொருத்தி இருக்கிறான்?"
"அது அவர்கள் வேறு ஒரு இடத்தில் இருந்து இதை வடிவமைத்து ரயிலில் எடுத்து வர வேண்டியிருந்தது. அந்த ரயில் பாதையின் அகலத்துக்கு ஏற்ப என்ஜினை வடிவமைக்க வேண்டி இருந்தது."
"சரி ரயில் பாதைகள் ஏன் அந்த அகலத்தில் இருந்தது?"
"அது ஐரோப்பாவில் இருந்து - அதே நடைமுறை அகலம் - அவர்கள் வைத்திருந்த சாலை அளவுகள்"
"அவர்கள் சாலை ஏன் அந்த அளவில்?"
"பூமியின் கால கணக்கில் இன்னும் சில நூற்றாண்டுகள் பின் செல்ல வேண்டும். அவர்கள் குறிப்பாக கிரேக்கர்கள் இரு குதிரை பூட்டிய வண்டியில் பயணம் செய்ய ஏதுவாக சாலை அமைத்தார்கள். அதனால்."
"அப்படியானால் நிலவுக்கு சென்ற ராக்கெட் எஞ்சினின் அளவை நிர்ணயித்தது எது?"
"அந்த இரு குதிரைகளின் இடுப்பளவு"
"தெரிகிறது அல்லவா? ஒரு சிறு நிகழ்வு எத்தனை விளைவுகளுக்கு காரணமாகிறது என்று. ஒரு குழு உணர்ச்சியோடு செயல்பட வேண்டாமா? அறிவியல் வளர்ச்சி இந்த 2010 இல் பூகம்பத்தை முன்னறிய வேண்டாமா?"
"அது பூமிகா, காக்க முகிழ்த்த அழிக்க வேண்டியுள்ளது." கின்னரன் சொன்னான்.
"நான் கிம்புருடனை கேட்கிறேன். அறிவியல் வளர்ச்சி ஏன் ஒருமித்து இல்லை?"
"அது பூமிகா, இந்திய அறிவாளிகளை பிடிக்க பார்த்தேன். கையில் பெட்டியோடு அமெரிக்கா போய்க்கொண்டு இருக்கிறார்கள். சைனா விற்பன்னர்களோ கையில் நகல் எடுக்கும் காகிதங்களோடு அமெரிக்க ஐரோப்பிய நுட்பங்களுக்கு காத்திருக்கிறார்கள். அந்த அமெரிக்க ஐரோப்பியர்களோ பணச்சந்தை விளையாட்டில் சரிவு தேக்கம் தொய்வு என உழன்று கடைகளை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் பொருளாதாரம் பார்க்கும் காந்தர்வன் எங்களுடன் ஒத்துழைப்பதே இல்லை."
"இதை சரி செய்ய வேண்டும். அழைக்கிறேன் புருஷையும். குழு மனப்பான்மை இல்லா விடில் நீங்கள் அனைவரும் தண்ணி இல்லா கிரகத்துக்கு போக வேண்டி இருக்கும்!"
பூமிகா என்ன செய்தாளோ? நாம் பூவுலகில் நடந்ததை பார்ப்போம்.
*
அமெரிக்காவின் மிகச்சிறந்த நிருபர்களில் நானும் ஒருத்தி. எனது அலுவலகம் தனியானது. எந்த பத்திரிகை அல்லது தொலைக்காட்சியையும் சாராதது. எந்த அரசியல் கட்சியையும் நம்பாதது. நிறைய பேர் விரும்பும் நிறைய பேர் வெறுக்கும் ஒருத்தி. வெறுத்தாலும் விரும்பினாலும் எனது எழுத்தை மட்டும் படிக்காமல் விடமுடியாது என்பதுதான் என் பலம்.
இது 2030. இருபது வருடங்கள் கழித்து ஜோயல் இடமிருந்து போன். அவனது தொழிற்சாலையில் வேலை நிறுத்தமாம். இந்த மக்களுக்காகவா இத்தனை நாள் பாடுபட்டேன் என விரக்தியாக பேசுகிறான்.
அடுத்த விமானத்தில் கிளம்ப ஆயத்தமானேன். இந்த டிஜிட்டல் உலகத்தில் ஒரு ஹலோ கூட சொல்லாத நட்பு. இருபது வருட நட்பு. அவன் என்ன வேலையில் இருக்கிறானோ? எதற்கு தொல்லை செய்வது. என்ற எண்ணம்தான் காரணம். அவனும் அதேதான் எண்ணி இருக்க வேண்டும். மற்றபடி எனது வலைத்தளத்தை அவனும் அவனது வலைத்தளத்தை நானும் பார்த்து பகிர்ந்துகொண்டது ஏராளம்.
இருபது வருடங்களுக்கு முன். நான் அந்த தீவுக்கு போயிருந்தேன். 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம். 45 சதுர கிலோ மீட்டர் தீவு. 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி. ஆனால் 30 அல்லது 40 சதவீத மக்கள் தலைநகர் அல்லது அடுத்த பெரிய தொழில் நகர் நோக்கி வந்திருந்தார்கள்.
அந்த பூகம்பம் அனைவரையும் புரட்டி போட்டுவிட்டது.
ஜோயல் இரண்டாவது பெரிய நகரில் ஒரு விற்பனையாளன். வீட்டுக்கு வீடு சென்று மின் துடைப்பம் விற்பவன். அப்போது நிகழ்ந்த உலகளாவிய பொருளாதார சரிவில் வேலை இழந்தவன். தலைநகர் வந்தால் வேலை என நம்பி வந்தான். அடுத்த நாள் இந்த பேரழிவு. சுழன்றான் - எத்தனை முடியுமோ அத்தனை உயிர்களை காப்பாற்றினான். அடுத்து சின்னாபின்னமான தொழிற்சாலைகளை பார்த்தான். அமெரிக்க அரசு ஆயிரக்கணக்கில் உணவு பொட்டலங்கள் அனுப்பியது. அரசின் விமானம்தாங்கி கப்பல்கள் நங்கூரம் இட்டு மருத்துவ வசதி செய்தது.
இந்த வேலை இழந்த மனிதர்கள் கதி? எங்காவது ஆரம்பிக்க வேண்டும். வேலைதேடி அலைபவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஜோயல் முன்னால் வந்தான். யாருக்கு சரியாக எழுத தெரியும் என்றான். லௌரா முன்னால் வந்தாள். இவர்களின் பெயர் மற்றும் செல்பேசி எண்கள் அவர்கள் தகுதி எல்லாவற்றையும் தொகுத்து எடு என்றான். அவள் முன் அத்தனை பேரும் அடக்கமாக அனைத்தும் தந்தார்கள். அவனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவனை பார்த்தேன்.
இத்தனை செய்கிறீர்களே இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்றேன். என் மக்களை வாழ வைக்க வேண்டும், அதற்காக உயிரையும் தருவேன் என்றான். அடுத்த ஒரு வருடம் அவனுக்கு புயலாக இருந்தது. அந்தனை பெயரையும் எடுத்து என்னிடம் கொடுத்து என்ன செய்ய என்றான்.
என்னை வெறுத்தவர்கள் விரும்பியவர்கள் அனைவர் விலாசமும் தந்தேன். வேலை வேண்டியவர்களையும் வேலை தர தேடியவர்களையும் இணைத்தான். சாதித்தான். இடிந்த தொழிற்சாலைகள் புதிதாக உருவாயின. புதியனவும் உருவாயின. அவன் பங்களிப்பு அனைத்திலும் இருந்தது. அவனாலும் ஒரு புதிய தொழிலகம் உருவானது.
அயராத 5 வருடங்கள். லௌரா அவன் காதலியானாள், பின் மனைவியானாள். Necessity is mother of invention - தேவையே கண்டுபிடிப்பின் ஆதாரம் - இத்தனை சாதித்தவன் இப்போது ஏன் விரக்தியாக பேசுகிறான்?
அவன் இடம் சேர்ந்தபின். நான் அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லி...
ஒருமணி நேரம் ஆனது ஒரு இந்தியன் பூகம்பம் வருவதை பல மணி நேரம் முன் கண்டுபிடிக்கும் நுட்பம் கண்டிருந்தான். ஒவ்வொரு நாடும் பூமியின் ஆழத்தில் டேக்டோனிக் தகடுகளில் அந்த இந்தியனின் கருவியை துளையிட்டு செலுத்தி இருந்தன. இந்த தீவைத் தவிர. அரசு செய்யாததை இவன் செய்ய இவனது நிறுவனத்தின் நிதியில் இருந்து பத்து மில்லியன் செலவழிக்க இவன் செய்த ஒப்பந்தம் செய்திருந்தான். அவன் அனுபவம் இதை செய்ய சொன்னது. அதனால் தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த ஊதிய இழப்பு - உம்ம்ம் - இதுதான் காரணம்.
இந்த மக்களுக்கு உண்மை புரியவைக்க வேண்டும்.
இரண்டுநாள் உழைத்தேன். மூன்றாம் நாள் - அனைத்து தொழிலாளர்களையும் கூட்ட வைத்தேன்.
ஜோயலின் சாதனைகள் பட்டியல் இட்டேன். பூகம்பத்துக்கு முந்தைய தீவையும் இப்போதைய நிலையையும் காட்டினேன். ஒரு பிரளயம் நடந்தது. ஏனெனில் நான் பேச மட்டும் இல்லை - படங்கள் - வார்த்தை நூறு பேசும் என்றாள் படங்கள் - அது ஆயிரம் பேசும் அல்லவா? பேசியது.
மறத்தல் இயல்பு. இருபது வருடம் அல்லவா? மனிதர்கள் நல்லவர்கள். புரிந்து கொள்வார்கள். தவறான தத்துவ வாதம் - தலை குனியும்தான். அவர்கள் இழந்த ஊதியம் மட்டும் அல்லாது இன்னும் தந்தார்கள். அரசையும் தர வைத்தார்கள்.
தீவு தலை நிமிர்ந்தது. ஜோயல் அவன் தீவு இனி வாழும்.
*
பூமிகா தனது அலுவலகத்தில் - விருந்து கொடுத்தாள் - அவர்கள் கணக்கில் அது அடுத்த நாள். ஒரு நாளில் நமது குழு நிறைவேற்றிய வடிவமைப்பு மாற்றத்துக்கு வாழ்த்துக்கள் என்றாள். அப்பாடா எனது வேலை தப்பியது என்றான் கின்னரன். குழு மனப்பான்மை எப்போதும் வெற்றி தரும்தானே.
*