Pages

திங்கள், 22 மார்ச், 2010

ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?)

ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?).
*********************************
சாமியார்கள் வரமா சாபமா? இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? சமீபத்தில் பிரபலமான நித்யானந்தா விவகாரத்தில் கவனித்தீர்களானால் - ஒன்று தெரிய வரும் - மெத்த படித்த அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறவரும் சொல்கிறார் - அவரால் குணமானேன் என. உலக இலக்கியத்தை கரைத்து குடித்த சாருவும் சொன்னார் அவரால் அவர் பாரியாள் குணமானதாக. எத்தனையோ அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் அவரிடம் சென்றதாக எழுதுகிறார்கள். இவரிடம் மட்டுமா? சாமியார்கள் - தெளிந்தவர்களும் இருக்கிறார்கள், தில்லு முள்ளுகளும் இருக்கிறார்கள். இவர்களை இனம் காணுவது எப்படி?
ஒரு கதை கேளுங்கள். பின்னர் இனம்காணும் விதம் பார்ப்போம்.
*********
அவன் பிறந்தது ஒரு சிறு கிராமம். திருவண்ணாமலை அருகில். படிப்பு சரியாக ஏறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, "தினமும் இரட்டை சடையில் ஒத்தை ரோஜாவோடு வருகிறாயே? நான் படிக்க உன் அப்பனா பணம் காட்டுகிறான்?" - என கவிதை எழுதினான்.
பதினெட்டு வயதில் அனைத்து விவரமும் கைவந்தது. சாராயம், இரவு ராணிகள், சின்ன திருட்டுகள் அவ்வப்போது போலீஸ் நிலையம். ஒருநாள் அவன் ஒத்தை ரோஜா அழுதாள்.
அவளை உதாசீனப்படுத்திய அடுத்த நாள், இறந்தாள். அது அவனை நேரடியாக பாதிக்கவிட்டாலும், அவன் நட்பு கூட்டத்தின் பேச்சுக்கள் அவனை பாதித்தன. சில நாட்கள் காணாமல் போனான். அவன் திரும்பி வந்தபோது, பேசியவைகள் முதலில் அவன் நண்பர்களை கேலி பேச வைத்தது. "சாத்தானின் வேதம்" என்றார்கள்..
திரும்பவும் காணாமல் போனான். அடுத்த முறை அவன் வந்தபோது, மிகவும் மாறி இருந்தான். புரியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொன்னான். அவன் பேசுவது மிகவும் நியாயமாக இருந்தது. அது எல்லாவற்றையும் விட - அவன் உடன் அழைத்து வந்து இருந்தவர், அவனை விட வயதில் மூத்தவராக இருந்தார். அவனை மிகவும் மரியாதையுடன் அழைத்தார். மூன்று ஏக்கர் நிலத்துடன் ஓரளவு வசதியுடன் இருந்த அவன் பெற்றோருக்கு, இவர்கள் இருவருக்கும் சாப்பாடு போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை. திரும்பவும் அவன் காணாமல் போய் விடுவானோ என்ற பயமும் இருந்தது. அவனின் நண்பன் ஒருமுறை
அவர்கள் நிலத்திற்கு அழைத்து சென்றான். கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள்
ஜமா - அந்த காலை வேளையில் நல்ல சுதியுடன். "வாடா மொடாகுடிகாரா" - என ஒரு நண்பன் இவனை அழைக்க, அவனுடன் வந்திருந்த பெரியவர் - அந்த போதையுடன் ஆக்ரோஷமானார். "என்னடா - சுவாமிஜியை அப்படியா சொன்னாய்? விளங்க மாட்டே. அவர் கால் என் தலையில் பட்டதால்தான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன் தெரியுமா?" - என்று ஆரம்பித்தவர் "உங்க ஊரைவிட்டு போன வெறும் இந்த்ரன் இல்லைடா அவர். அந்த ஆதி சித்தன் சிவனோட மறு அவதாரமடா!" என அடுக்கிக்கொண்டு போக, கூட்டம் ஸ்தம்பித்தது. போதை எல்லாம் சர சரவென இறங்க, அவன் அந்த பெரியவரை அடக்கிக்கொண்டு இருந்தான். "அறியா பிறவிகள் - அவர்களிடம் உண்மை சொல்லவேண்டாம்" என்றான். திருவண்ணாமலை தாண்டாத அவர்கள் - காசி பற்றியும், மானசரோவர் பற்றியும் அவர் விட்ட கதைகள் கேட்டு ஆடிவிட்டார்கள்.
கள்ளுப்பானையில் தடவ வைத்திருந்த சுண்ணாம்பில் அவன் கை சென்றுவர, அந்த பெரியவர், "மொடா குடியன்" என அழைத்தவனிடம், அவர் கையால் திருநீறு வாங்கி வாயில் போடுடா என்றார். அவனும், வேறு வழி இன்றி, அவனருகில் செல்ல, அவன் வாயை திறக்க சொன்னான். அவன் திறக்க, இவன் அவன் வாயில் இட்டான்.
அவனோ அலறி அடித்து எரியுதே என அலற, அந்த பெரியவர், இப்போ தெரியுதா அவர் மகிமை என்றார்.
ஒரு பயம் கலந்த மரியாதை அவனைப்பற்றி வேருன்ற ஆரம்பித்தது.
அவனை அழைத்து சென்ற நண்பன் அங்கிருந்த சிறிய கொட்டாயை - சுத்தம் செய்து அவனை அமர்த்தி, மதிய சாப்பாடு தான் கொண்டு வருவதாக சொல்லி போனான்.
மாலை சிறு கும்பல் வந்து, அவன் சென்ற இடங்கள் அவன் அறிந்து வந்த விஷயங்கள் பற்றி ஆர்வமாக கேட்டது.
அறிந்ததும் அறியாததும், தெரிந்ததும் தெரியாததும், புரிந்ததும் புரியாததும் - வெள்ளமாக அவன் வாய் வர - எல்லாம் தெரிந்தவன் இவன் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் மெல்ல உருவானது. கேள்வி கேட்ட சிலரை, ஸ்வாமிகிட்ட அனர்த்தமா கேட்ககூடாது குழந்தை என அந்த பெரியவர் தனியாக சென்று எடுத்து விளக்கினார். அவருடைய இடது கை சரியாக விளங்காததற்கு அவர் இதுமாதிரி ஒருதடவை கேட்டது காரணம் என்றும் சொன்னார். அதன் பிறகும் யாராவது கேட்பார்களா?

*******
அடுத்த நாள் மதியம், இவனது - இல்லை - இவரது பெருமை கேட்டு பக்கத்து ஊர் பெரியவர் வந்தார். தான் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விரும்புவதாகவும், ஆனால், தனது எதிரி "அவரை" நினைத்து பயமாக இருப்பதாகவும் சொன்னார். சுவாமிஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது தான் செய்த எதற்கும் தான் பயந்ததே இல்லை என நினைக்கும்போது தன்னை பற்றி பெருமையாக இருந்தது.
பைசா இல்லாது திருட்டு ரயில் ஏறி பாஷை தெரியா காசி போகவே பயப்படவில்லை. இலட்சக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு எலக்ஷனில் நிற்க பயப்படுவதா?
"தைரியம் புருஷ லக்ஷணம் - உங்களுக்கு சித்தன் சிவனின் அருள்தான் இல்லை. அதை மட்டும் சரி செய்துவிட்டால் ஜெயம்தான்." என்றார் சுவாமிஜி. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றார் பெரியவர். "சிவன் சித்தம் பணத்தை வைத்தா?", ஒன்று கொடு பத்தாக திரும்பி கிடைக்கும் என்றார்.
தைரியம் வந்த பிறகு அனைத்து லட்சுமிகளும் அடுத்து வருவார்கள் தானே. வந்தார்கள்.
அவர் தேர்தலில் வென்றார். சுவாமிஜி - பேச்சிலேயே வெல்ல ஆரம்பித்தார். ஒன்றை பலதாக்கி சொல்ல சீடர்கள் இருந்தார்கள்.

அதன் பிறகு வருபவர்கள் தாங்களாகவே தந்தார்கள். தருவது குறையும்போது, சிவனுக்கு கேட்கிறேன். இந்த கட்டைக்கு இது போதும் என்றார். அந்த அதிகாரி, தனது மனைவிக்கு கால் வலி என்று அழைத்து வந்த போது, சுவாமிஜிக்கு இரட்டை ஜடை ஒத்தை ரோஜா ஞாபகம் வந்தது. அந்த பௌர்ணமி இரவில் செஞ்சி மலை உச்சியில், பாறையின் நிழலில் அவள் கால் விரல் பின்னி இழுக்கிறது என அமர்ந்ததும், அவள் கணுக்கால் இறுக்கி பிடித்து, உள்ளங்கால் நீவி விட அந்த வலி போய், இருவருக்கும், காம நோய் கண்டதும். பின் அவளை அது காவு கொண்டதும் - நினைவில் வர, வானம் பார்த்து ஷக்தி என்றார். அவள் பெயர்.
முழு நிலா - வானம் ஏறி மூன்று நாழிகை ஆகி இருந்தது.
இந்த இளம் பெண்ணின் கணுக்கால் தொட்டு, உள்ளங்கால் தடவியதும், உணர முடிந்தது. அவள் காதில் முணுமுணுத்தார் - நீ அறியப்படாத ஆராதிக்கப்படாத அழகு என்று. அந்த அதிகாரி அருகில் வர, லேசான சீமைச் சாராய வாடை. அதன் பிறகு, பௌர்ணமி பூஜைகள் பிரமாதமாக நடந்தன. பலரின் கால் கை வலிகள் குணமாக, பலருக்கு அது சொல்லப்பட, பலருக்கு அது மாதிரி வலிகள் வர ஆரம்பித்தது. (நீங்கள் யாரையாவது யாராவது கூட்டிப்போனத்தை நினைத்துகொண்டால் - நான் என்ன செய்ய - இது கதை )
எதாவது சொன்னால்தான் - நமக்கும் சாமியின் அருள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இல்லையானால், நம்மை மட்டமாக நினைப்பார்கள் என நினைத்தே சொன்னவர்களும் உண்டு.
அடுத்தவன் நம்மை பற்றி என்ன நினைப்பான் என்று நினைத்து - அவன் நம்மை பெருமையாக நினைக்கவேண்டும் என்றே காரியம் செய்பவர்கள் - நமது நாட்டில்தான் உண்டு.
************

இவர்களை இனம் காணுவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நம்மை பார்த்ததும் இனம் கண்டு கொள்வார்கள். அவர்களின் வார்த்தைகள் பொதுவானதாக இருக்கும்.
"உங்களுக்கு மனம் சஞ்சலப்பட்டு இருக்கிறது"
"என்னை நம்பாமல் - எதற்கும் பார்ப்போமே என்று வந்திருக்கிறீர்கள்"
"உங்கள் சந்தேகம் தீர வேண்டும் - அதுதானே?"
"பயம் என்பது பிடித்து ஆட்டுகிறது. சிவனின் அல்லது அம்மனின் அருள் இல்லை"
"ஒரு தெய்வ குற்றம் நடந்திருக்கிறது"
இது மாதிரி இருக்கும். நினைத்து பாருங்கள் - வருபவரின் முக குறிப்பை வைத்து இதை நீங்கள் சொல்ல முடியாதா?
உதாரணமாக, திருநீறு அணிந்து, கலவரமான முகத்துடன் இருந்தால் என்ன சொல்வீர்கள். - "தெய்வ குற்றம் என்றுதானே?"
இதில் பாதிக்கும் மேல், அவர்களை அழைத்து வருபவர்கள் முன்பே சொலி இருப்பார்கள். அடுத்ததாக பணம் - பணம் வாங்கும் எவனும் சாமியார் அல்ல. உங்கள் மன சஞ்சலத்தை காசாக்கும் வித்தை செய்பவர்கள், சாமி அல்ல.
உங்களிடம் பயம் இல்லையானால், அதை விதைக்க பார்ப்பார்கள். "நிச்சயமாக ஒரு
துர் தேவதையின் நிழல் உங்கள் மேல் விழுந்திருக்கிறது.அதற்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது என்பார்கள். வற்புறுத்தவில்லை என்பர்கள். அந்த சொல் உங்கள் மனதில் இருக்கும் என்பது தெரியும். அடுத்து - நல்லது கெட்டது - கலந்து வரும் வாழ்வில், கெட்டது நடக்கும் வரை உங்கள் மனம் காத்திருக்கும். வந்ததும், பார்த்தாயா என சிரிக்கும்.
நீங்கள் அதை உண்மை என நம்புவீர்கள். எதற்கும், ஸ்வாமிஜியிடம் கேட்டு விடுவோமே என்று செல்வீர்கள். அம்புட்டுகினாண்ட துமிட்டிகா பத்தை என அவர் நினைப்பார். இதற்கு காரணம், எதையும் பாதுகாப்பாக, safe side - செய்துவிட நினைக்கும் நம் மனநிலைதான்.
அடுத்த முறை சாமியாரிடம் செல்லும் முன் - ஒருமுறை நினைத்து பாருங்கள். "இது தேவையா?" என்று.













.































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக