தமிழ் நீயா நானா - "Micro Economics" நூறு நாள் வேலை விவாதமும், NDTV - Prannoy Roy - "Macro Economics" விவாதமும் - சிறு அலசல்.
*******************************************************************************************************************************
இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் என்னென்ன தொல்லைகள் சாமி!
1. வீட்டு வேலை, சிறு தொழில், விவசாய கூலிகள் கிடைப்பதில்லை.இதற்கு பதில் அளித்தவர்கள் தந்த விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது.
இதற்கு முன் அந்த கூலிகளை இந்த சிறு, குறு முதலாளிகள் நடத்திய விதத்தை முன்வைத்தார்கள். சாதிய கூறுகள் இதனால் அடிபடும் சாத்தியம் அதிகம் காணக்கிடைத்தது. பல நூற்றாண்டுகளாக உழைத்த வம்சம், இரண்டு வேளை சாப்பிடட்டுமே என்ற வாதம் நியாயமாக பட்டாலும், இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணம் தலை தூக்காமல் இல்லை. அதை பிரணாய் ராய் விவாதம் உறுதி செய்தது. அப்படி இது நிறுத்தப்பட்டால், இதே கூலிகள் திரும்ப இவர்களிடமே சென்று வேலை கேட்டால், அதன் பிறகு அந்த கூலிகளிடம் இதே முதலாளிகள் காட்டப்போகும் வன்மம் - எப்படி இருக்கும்? அந்த கூலிகளை இப்போதே நான் அரவணைத்து செல்கிறேன், எனக்கு பிரச்சினை இப்போதே இல்லையே என்ற சமூகப்போராளி, (செந்தமிழ் செல்வன்) சொன்ன கருத்து பிடித்திருந்தது. சாதி தலைவர் தனியரசு பேசிய பேச்சினை சகிக்க முடியவில்லை. எள் முனையும் சமூக சிந்தனை இல்லாத மனிதராக தோன்றினார். பணத்தை இலவசமாக தந்துவிடலாமாம். என்ன ஒரு வக்கிர எண்ணம். தந்துவிட்டால், அதை வாங்கி தரும் இடைத்தரகராகிவிடலாம், அரசு தரும் பணத்தில், தன் நிலத்தில் அவர்களை வேலையும் செய்ய வைக்கலாம். ஆஹா! மானத்தோடு ஏதோ ஒருவேலை செய்து கூலி வாங்குவது இவருக்கு பொறுக்கவில்லை. இலவசமாக இவர் தூக்கி எறிந்து அவர்கள் பொறுக்கிக் கொண்டால், இவரின் மானம் கூடும், அவர்கள் தன்மானம் இழந்தே கிடப்பார்கள். என்ன ஒரு சிந்தனை.
2. இதில் மிக உன்னித்து கவனிக்க வேண்டிய சிந்தனையை ஒருவர் முன்வைத்தார். விவசாயத்தையும் சிறு/குறு விவசாயிகளையும் ஒழித்து, விவசாயத்தை "Corporate" மயமாக்கும் முயற்சிதான் இது என்றார். இல்லை விவசாயம் அழிய பல காரணிகள் இருக்கின்றன என பலர் எதிர் வாதம் செய்தனர்.
சென்னை சுற்றியும், மற்றும் வட மாவட்டங்களையும் சேர்ந்த பல விவசாயிகளிடமிருந்து நான் அறிந்தது இதுதான். சென்ற பத்தாண்டுகளில், பல ஏக்கர் நிலங்கள் சந்தை நிலவரத்துக்கு மீறிய மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் எந்த உபயோகப்படுத்தலும் இன்றி தரிசாக இருக்கின்றன. இவற்றை வாங்கியவர்கள் யார் என விற்றவர்களுக்கு தெரியவில்லை. நான் நினைத்தேன், ஊழல் அரசியல் வாதிகள் யாரேனும் இருக்கும் என்று. ஆனால், கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இதில் தொய்வு என தெரிகிறது. இதை பற்றி எந்த பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும் செய்தி சேகரித்து இருக்கிறார்களா?
3. பிரதமர் சில மாதங்களுக்கு முன், மராத்திய விவசாயிகளின் தற்கொலைகளின் போது, ஒரு பொன்மொழி உதிர்த்தார். ஏன் விவசாயத்தையே நம்பி இருக்கிறீர்கள், வேறு வேலைகளுக்கு செல்லுங்களேன் என்று. பொருளாதார மேதையே! முதலில் வேறு வேலை ஏற்படுத்துங்கள். பின்னர் பேசுங்கள்.சீனாவில், நகரம் நோக்கிய நகர்தல் எப்படி கட்டுப்படுத்த்ப்படுகிறது என்று பாருங்கள். அவர்கள் முன்னேறுவதின் காரணம் புரியும்.
4. அமெரிக்காவில், 2% மக்கள்தான் விவசாயம் செய்கிறார்கள். எல்லோருக்கும் சாப்பாடு கிடைத்து, மீதியை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவில் 60 சத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். பொருளாதார மேதை... முதலில் அந்த 60ஐ 2 ஆக்க வேண்டுமானால், 58 சத மக்களுக்கு தொழில் துறையில் புது முயற்சி தொடங்க வாய்ப்புகளை உருவாக்குங்கள். விவசாயம் விட்டு என்ன தெரியும் அவர்களுக்கு? அவர்கள் தெரிந்துகொள்ள என்ன செய்தீர்கள்? உங்களின் வெத்து வேட்டு அறிவுரை தேவையில்லை அவர்களுக்கு.
5. NDTV விவாதத்தில் கிடைத்த "Clues".
தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணம், "இலவசங்கள். மானியங்கள். 2001 க்கு பிறகு உலகமயமாக்கலை, தனியார் மயமாகலை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்கவில்லை." அதாவது தனியார்களுக்கு தரப்பட வேண்டிய மானியம், பாமரர்களுக்கு செல்கிறது. இதற்கு அரசியல் "AND" பொருளாதார மேதைகளின் பதில் என்னவாக இருக்கும் என நமக்கு தெரியும்தானே. "ஒட்டு யாருப்பா போடுவாங்க?"
6. இப்படி, இந்த அரசு இயந்திரம், இந்த பொருளாதார மேதைகளின் திட்டங்களை, முன்னெடுத்து சென்றால் - நூறு நாள் வேலை திட்டம் கிடைப்பில் போடப்படும். டீசல் விலை இரு மடங்காகும். சிறு/குறு விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வழி இருக்காது.
7. விவசாயத்தை "Corporate" ஆக்கும் திட்டம் இருந்தால்... முதலில் 58 சத மக்களுக்கு, வழி வகை செய்யுங்கள். தவறினால், கிரிமினல் குற்றங்கள் அதிகரிக்கும் முதலில். விரட்டப்படும் நாய்கள் என்றுமே ஓடிக்கொண்டிருக்கும், துரத்தும் நாய்களுக்கு எதிராக திரும்பி நிற்கும். நாய்கள் மட்டும் அல்ல நாய் பிழைப்பு பிழைக்கும் மக்களும்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக