அப்பாவிற்கான நாள்!
1990க்கு பிறகு பிறந்தவர்களை டிஜிடல் உலக குழந்தைகள், Digital Natives (DN) என்கிறார்கள். 80களில் அல்லது அதற்கு முன் பிறந்தவர்களை Digital Immigrants (DI)- டிஜிடல் உலக குடியேறிகள் என்கிறார்கள். அப்படியானால் இந்த DI களீன் பெற்றோர்? தொழிற்புரட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அவர்களுடன் வறுமையும் குடியிருந்தது. ஆனாலும் சமூகத்தின் ஒரளவு மேம்பட்ட அந்தஸ்தில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகளை இந்த டிஜிடல் உலகத்திற்குள், குடியேற்ற முடிந்தது. உண்மையில், தமிழகத்தில் 70 சதத்திற்கும் மேலான மக்கள், இன்னும் அதே 60 70 80 களின் தரத்தில்தான் வாழ்க்கையை உருட்டுகிறார்கள். பிரபஞ்சன் முதல் எத்தனையோ அறிவு ஜீவிகள், குடும்ப அமைப்பிற்கு எதிராக கொடி பிடித்திருந்தாலும், குடும்ப அமைப்பில், தந்தையாக இருப்பதும், மகனாக இருந்ததும் எத்தனை சுகமான அனுபவம். மேலை நாட்டில் உருவாக்கப்பட்ட தந்தையர் தினம் தாயார் தினம் போன்றவற்றின் தேவை இப்போது, இந்தியாவிற்கும் தேவைப்படுவது வருத்தமான விஷயம். அதுவும், இந்த DN வகையறாக்கள் அதிகமாக, இந்தகு நாட்களின் அவசியமும் அதிகமாகிறது. முதலில் பரிசாக வாங்கிய வெப்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரியை எத்தனை முறை என் அப்பா தடவிப்பார்த்துக்கொண்டிருந்தார்!
என் தலை முறைக்கு பெற்றோராக இருந்தது அவர்களுக்கும் என்னைப்போலவே சிரமமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
என் குழந்தைகளை வளர்க்க வழிகாட்ட, நான் படும் வாதைகள், அவர்களும் பட்டிருப்பார்கள்தானே. இந்த கால குழந்தைகள் விவரம் அறிந்தவர்களாக வளர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் எனது வாதை குறைவு என்றே நினைக்கிறேன்.
தந்தையால் காயம் பட்ட மகன்களும், மகன்களால் காயம்பட்ட தந்தைகளும் ஏராளம் இருக்கலாம். முன்னவர்கள், தாங்கள் தந்தையாகும் போதும், பின்னவர்கள் தாத்தாவாகும் போதும், அந்த காயங்கள் ஆறும். சிலருக்கு தழும்புகள் மிஞ்சலாம்.
தந்தை என் நினைவுகளுடன் வாழ, இன்னும் தந்தை எனும் பொறுப்பில் போகவேண்டிய தூரம் நிறைய இருப்பதாக படுகிறது.
அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் ஒரு அப்பா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக