திங்கள், 22 மார்ச், 2010
ஒரு சாமியார் உருவாகிறார் (ன்?)
*********************************
சாமியார்கள் வரமா சாபமா? இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? சமீபத்தில் பிரபலமான நித்யானந்தா விவகாரத்தில் கவனித்தீர்களானால் - ஒன்று தெரிய வரும் - மெத்த படித்த அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறவரும் சொல்கிறார் - அவரால் குணமானேன் என. உலக இலக்கியத்தை கரைத்து குடித்த சாருவும் சொன்னார் அவரால் அவர் பாரியாள் குணமானதாக. எத்தனையோ அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் அவரிடம் சென்றதாக எழுதுகிறார்கள். இவரிடம் மட்டுமா? சாமியார்கள் - தெளிந்தவர்களும் இருக்கிறார்கள், தில்லு முள்ளுகளும் இருக்கிறார்கள். இவர்களை இனம் காணுவது எப்படி?
ஒரு கதை கேளுங்கள். பின்னர் இனம்காணும் விதம் பார்ப்போம்.
*********
அவன் பிறந்தது ஒரு சிறு கிராமம். திருவண்ணாமலை அருகில். படிப்பு சரியாக ஏறவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, "தினமும் இரட்டை சடையில் ஒத்தை ரோஜாவோடு வருகிறாயே? நான் படிக்க உன் அப்பனா பணம் காட்டுகிறான்?" - என கவிதை எழுதினான்.
பதினெட்டு வயதில் அனைத்து விவரமும் கைவந்தது. சாராயம், இரவு ராணிகள், சின்ன திருட்டுகள் அவ்வப்போது போலீஸ் நிலையம். ஒருநாள் அவன் ஒத்தை ரோஜா அழுதாள்.
அவளை உதாசீனப்படுத்திய அடுத்த நாள், இறந்தாள். அது அவனை நேரடியாக பாதிக்கவிட்டாலும், அவன் நட்பு கூட்டத்தின் பேச்சுக்கள் அவனை பாதித்தன. சில நாட்கள் காணாமல் போனான். அவன் திரும்பி வந்தபோது, பேசியவைகள் முதலில் அவன் நண்பர்களை கேலி பேச வைத்தது. "சாத்தானின் வேதம்" என்றார்கள்..
திரும்பவும் காணாமல் போனான். அடுத்த முறை அவன் வந்தபோது, மிகவும் மாறி இருந்தான். புரியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொன்னான். அவன் பேசுவது மிகவும் நியாயமாக இருந்தது. அது எல்லாவற்றையும் விட - அவன் உடன் அழைத்து வந்து இருந்தவர், அவனை விட வயதில் மூத்தவராக இருந்தார். அவனை மிகவும் மரியாதையுடன் அழைத்தார். மூன்று ஏக்கர் நிலத்துடன் ஓரளவு வசதியுடன் இருந்த அவன் பெற்றோருக்கு, இவர்கள் இருவருக்கும் சாப்பாடு போடுவது பெரிய பிரச்சினையாக இல்லை. திரும்பவும் அவன் காணாமல் போய் விடுவானோ என்ற பயமும் இருந்தது. அவனின் நண்பன் ஒருமுறை
அவர்கள் நிலத்திற்கு அழைத்து சென்றான். கள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள்
ஜமா - அந்த காலை வேளையில் நல்ல சுதியுடன். "வாடா மொடாகுடிகாரா" - என ஒரு நண்பன் இவனை அழைக்க, அவனுடன் வந்திருந்த பெரியவர் - அந்த போதையுடன் ஆக்ரோஷமானார். "என்னடா - சுவாமிஜியை அப்படியா சொன்னாய்? விளங்க மாட்டே. அவர் கால் என் தலையில் பட்டதால்தான் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன் தெரியுமா?" - என்று ஆரம்பித்தவர் "உங்க ஊரைவிட்டு போன வெறும் இந்த்ரன் இல்லைடா அவர். அந்த ஆதி சித்தன் சிவனோட மறு அவதாரமடா!" என அடுக்கிக்கொண்டு போக, கூட்டம் ஸ்தம்பித்தது. போதை எல்லாம் சர சரவென இறங்க, அவன் அந்த பெரியவரை அடக்கிக்கொண்டு இருந்தான். "அறியா பிறவிகள் - அவர்களிடம் உண்மை சொல்லவேண்டாம்" என்றான். திருவண்ணாமலை தாண்டாத அவர்கள் - காசி பற்றியும், மானசரோவர் பற்றியும் அவர் விட்ட கதைகள் கேட்டு ஆடிவிட்டார்கள்.
கள்ளுப்பானையில் தடவ வைத்திருந்த சுண்ணாம்பில் அவன் கை சென்றுவர, அந்த பெரியவர், "மொடா குடியன்" என அழைத்தவனிடம், அவர் கையால் திருநீறு வாங்கி வாயில் போடுடா என்றார். அவனும், வேறு வழி இன்றி, அவனருகில் செல்ல, அவன் வாயை திறக்க சொன்னான். அவன் திறக்க, இவன் அவன் வாயில் இட்டான்.
அவனோ அலறி அடித்து எரியுதே என அலற, அந்த பெரியவர், இப்போ தெரியுதா அவர் மகிமை என்றார்.
ஒரு பயம் கலந்த மரியாதை அவனைப்பற்றி வேருன்ற ஆரம்பித்தது.
அவனை அழைத்து சென்ற நண்பன் அங்கிருந்த சிறிய கொட்டாயை - சுத்தம் செய்து அவனை அமர்த்தி, மதிய சாப்பாடு தான் கொண்டு வருவதாக சொல்லி போனான்.
மாலை சிறு கும்பல் வந்து, அவன் சென்ற இடங்கள் அவன் அறிந்து வந்த விஷயங்கள் பற்றி ஆர்வமாக கேட்டது.
அறிந்ததும் அறியாததும், தெரிந்ததும் தெரியாததும், புரிந்ததும் புரியாததும் - வெள்ளமாக அவன் வாய் வர - எல்லாம் தெரிந்தவன் இவன் என்ற எண்ணம் மட்டும் அவர்களிடம் மெல்ல உருவானது. கேள்வி கேட்ட சிலரை, ஸ்வாமிகிட்ட அனர்த்தமா கேட்ககூடாது குழந்தை என அந்த பெரியவர் தனியாக சென்று எடுத்து விளக்கினார். அவருடைய இடது கை சரியாக விளங்காததற்கு அவர் இதுமாதிரி ஒருதடவை கேட்டது காரணம் என்றும் சொன்னார். அதன் பிறகும் யாராவது கேட்பார்களா?
*******
அடுத்த நாள் மதியம், இவனது - இல்லை - இவரது பெருமை கேட்டு பக்கத்து ஊர் பெரியவர் வந்தார். தான் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க விரும்புவதாகவும், ஆனால், தனது எதிரி "அவரை" நினைத்து பயமாக இருப்பதாகவும் சொன்னார். சுவாமிஜிக்கு ஆச்சர்யமாக இருந்தது தான் செய்த எதற்கும் தான் பயந்ததே இல்லை என நினைக்கும்போது தன்னை பற்றி பெருமையாக இருந்தது.
பைசா இல்லாது திருட்டு ரயில் ஏறி பாஷை தெரியா காசி போகவே பயப்படவில்லை. இலட்சக்கணக்கில் பணத்தை வைத்துக்கொண்டு எலக்ஷனில் நிற்க பயப்படுவதா?
"தைரியம் புருஷ லக்ஷணம் - உங்களுக்கு சித்தன் சிவனின் அருள்தான் இல்லை. அதை மட்டும் சரி செய்துவிட்டால் ஜெயம்தான்." என்றார் சுவாமிஜி. அதற்கு எவ்வளவு செலவாகும் என்றார் பெரியவர். "சிவன் சித்தம் பணத்தை வைத்தா?", ஒன்று கொடு பத்தாக திரும்பி கிடைக்கும் என்றார்.
தைரியம் வந்த பிறகு அனைத்து லட்சுமிகளும் அடுத்து வருவார்கள் தானே. வந்தார்கள்.
அவர் தேர்தலில் வென்றார். சுவாமிஜி - பேச்சிலேயே வெல்ல ஆரம்பித்தார். ஒன்றை பலதாக்கி சொல்ல சீடர்கள் இருந்தார்கள்.
அதன் பிறகு வருபவர்கள் தாங்களாகவே தந்தார்கள். தருவது குறையும்போது, சிவனுக்கு கேட்கிறேன். இந்த கட்டைக்கு இது போதும் என்றார். அந்த அதிகாரி, தனது மனைவிக்கு கால் வலி என்று அழைத்து வந்த போது, சுவாமிஜிக்கு இரட்டை ஜடை ஒத்தை ரோஜா ஞாபகம் வந்தது. அந்த பௌர்ணமி இரவில் செஞ்சி மலை உச்சியில், பாறையின் நிழலில் அவள் கால் விரல் பின்னி இழுக்கிறது என அமர்ந்ததும், அவள் கணுக்கால் இறுக்கி பிடித்து, உள்ளங்கால் நீவி விட அந்த வலி போய், இருவருக்கும், காம நோய் கண்டதும். பின் அவளை அது காவு கொண்டதும் - நினைவில் வர, வானம் பார்த்து ஷக்தி என்றார். அவள் பெயர்.
முழு நிலா - வானம் ஏறி மூன்று நாழிகை ஆகி இருந்தது.
இந்த இளம் பெண்ணின் கணுக்கால் தொட்டு, உள்ளங்கால் தடவியதும், உணர முடிந்தது. அவள் காதில் முணுமுணுத்தார் - நீ அறியப்படாத ஆராதிக்கப்படாத அழகு என்று. அந்த அதிகாரி அருகில் வர, லேசான சீமைச் சாராய வாடை. அதன் பிறகு, பௌர்ணமி பூஜைகள் பிரமாதமாக நடந்தன. பலரின் கால் கை வலிகள் குணமாக, பலருக்கு அது சொல்லப்பட, பலருக்கு அது மாதிரி வலிகள் வர ஆரம்பித்தது. (நீங்கள் யாரையாவது யாராவது கூட்டிப்போனத்தை நினைத்துகொண்டால் - நான் என்ன செய்ய - இது கதை )
எதாவது சொன்னால்தான் - நமக்கும் சாமியின் அருள் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இல்லையானால், நம்மை மட்டமாக நினைப்பார்கள் என நினைத்தே சொன்னவர்களும் உண்டு.
அடுத்தவன் நம்மை பற்றி என்ன நினைப்பான் என்று நினைத்து - அவன் நம்மை பெருமையாக நினைக்கவேண்டும் என்றே காரியம் செய்பவர்கள் - நமது நாட்டில்தான் உண்டு.
************
இவர்களை இனம் காணுவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நம்மை பார்த்ததும் இனம் கண்டு கொள்வார்கள். அவர்களின் வார்த்தைகள் பொதுவானதாக இருக்கும்.
"உங்களுக்கு மனம் சஞ்சலப்பட்டு இருக்கிறது"
"என்னை நம்பாமல் - எதற்கும் பார்ப்போமே என்று வந்திருக்கிறீர்கள்"
"உங்கள் சந்தேகம் தீர வேண்டும் - அதுதானே?"
"பயம் என்பது பிடித்து ஆட்டுகிறது. சிவனின் அல்லது அம்மனின் அருள் இல்லை"
"ஒரு தெய்வ குற்றம் நடந்திருக்கிறது"
இது மாதிரி இருக்கும். நினைத்து பாருங்கள் - வருபவரின் முக குறிப்பை வைத்து இதை நீங்கள் சொல்ல முடியாதா?
உதாரணமாக, திருநீறு அணிந்து, கலவரமான முகத்துடன் இருந்தால் என்ன சொல்வீர்கள். - "தெய்வ குற்றம் என்றுதானே?"
இதில் பாதிக்கும் மேல், அவர்களை அழைத்து வருபவர்கள் முன்பே சொலி இருப்பார்கள். அடுத்ததாக பணம் - பணம் வாங்கும் எவனும் சாமியார் அல்ல. உங்கள் மன சஞ்சலத்தை காசாக்கும் வித்தை செய்பவர்கள், சாமி அல்ல.
உங்களிடம் பயம் இல்லையானால், அதை விதைக்க பார்ப்பார்கள். "நிச்சயமாக ஒரு
துர் தேவதையின் நிழல் உங்கள் மேல் விழுந்திருக்கிறது.அதற்கு பரிகாரம் செய்துகொள்வது நல்லது என்பார்கள். வற்புறுத்தவில்லை என்பர்கள். அந்த சொல் உங்கள் மனதில் இருக்கும் என்பது தெரியும். அடுத்து - நல்லது கெட்டது - கலந்து வரும் வாழ்வில், கெட்டது நடக்கும் வரை உங்கள் மனம் காத்திருக்கும். வந்ததும், பார்த்தாயா என சிரிக்கும்.
நீங்கள் அதை உண்மை என நம்புவீர்கள். எதற்கும், ஸ்வாமிஜியிடம் கேட்டு விடுவோமே என்று செல்வீர்கள். அம்புட்டுகினாண்ட துமிட்டிகா பத்தை என அவர் நினைப்பார். இதற்கு காரணம், எதையும் பாதுகாப்பாக, safe side - செய்துவிட நினைக்கும் நம் மனநிலைதான்.
அடுத்த முறை சாமியாரிடம் செல்லும் முன் - ஒருமுறை நினைத்து பாருங்கள். "இது தேவையா?" என்று.
.
ஞாயிறு, 21 மார்ச், 2010
ழி என்றோருதேசம்
ஜித்தன்
-----------
எங்கள் நிறுவனம் கார் கியர்கள் தயாரிக்கிறது. ஜப்பானில் தலைமையகம். இந்தியாவில் இருக்கும் அவர்களின் நான்கு தொழிலகங்களில் எங்களது பெரியது.எங்கள் ஜி. எம் - ராஜ் குமார்.அவனது காரியதரிசி நான். முப்பது வருடங்களாக அவனுக்கு கீழ் வேலை. அவனை விட மூன்று வருடம் மூத்தவன். எங்கள் படிப்பு ஒன்றாக இருந்தாலும் அவன் திறமை எனக்கு வராது.திருட்டு ஜித்தன். சம்பளம் 2 லட்சம் என்றால் அவன் வருமானம் 20 லட்சம் இருக்கும். என்ன செய்ய அவன் உயர உயர - என்னையும் கூட அழைத்து சென்றான். லட்சங்களை விடுங்கள் - நானும்தான் அவனை அண்டி பல லட்சம் பார்த்துவிட்டேன். அவன் திமிர்தான் - சமயத்தில் கத்துவான் பாருங்கள். வேலையை தூக்கி எறிய தோன்றும். சாதக பாதகங்களை பார்த்து பொறுத்துக்கொள்வேன். நான் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஓடாது. அவன் மட்டும் அல்ல அவன் மனைவியும் என்னை படுத்துவாள்.படு பாதகன் என்றாவது மாட்ட வேண்டும் நான் அதை பார்த்து சிரிக்க வேண்டும்.அவன் மகனையும் மகளையும் அமெரிக்காவிலும் லண்டனிலும் படிக்க வைக்கிறான்.ஒன்று சொல்லியாக வேண்டும். உழைப்பு என்பது அவன் உயிராக மூச்சாக இருந்தது.இரவு பத்து மணிக்கு என்னை போனில் அழைத்து அவன் மனைவியை உடனடியாக டாக்டரிடம் அழைத்து போக சொல்லி இருக்கிறான். அவன் அலுவலகத்தில் இருந்துகொண்டு.சில சமயம் நினைத்துக் கொள்வேன். அவன் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அவனாக எடுத்துக்கொள்கிறான் என்ன தவறு என்று.அந்த நாள் வந்தது. ஜப்பானிய தலைமையகம் எல்லா ஜி.எம்மையும் டோக்கியோவுக்கு அழைத்திருந்தது. விவாதத் தலைப்பு - "பணியில் நேர்மை - work ethics". மாட்டினாண்டா - அந்த ஜில் ஜில் நினைவே இனிமையாக இருந்தது.கலவரத்துடன் என்னிடம் கேட்டான். "நமது ஸ்டாப் யாராவது மொட்டை மெயில் அனுப்பி இருப்பார்களோ?"சாகட்டும் பயத்தில் என்று - பட்டும் படாமலும் பதில் தந்தேன்.இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பி சிங்கப்பூர் வழியாக டோக்யோ நரிட விமான நிலையம் அடையும் போது அந்த ஊர் நேரம் மாலை 7 மணி. சுஷி தெரியாகி சிக்கன் ஜானி வாக்கர் - முடித்து 11 மணிக்கு படுக்கையில் விழுந்தேன். இரவு இரண்டு மணிக்கு அடுத்த அறையில் இருந்து போன். இந்த ஒரு வருடத்தில் இறக்குமதி தீர்வை எஞ்சின் வால்வுகளுக்கு எந்தனை சதம் உயர்ந்திருக்கிறது என்று.இவன் மனிதனா இல்லை ஜப்பான் காரனின் ரோபோவா?அடுத்த நாள் உலகின் அனைத்து பகுதி அதிகாரிகளும் பிரசண்டேஷன் கொடுத்தார்கள். ராஜ் மட்டும்தான் அனைவர் கைத்தட்டலையும் பெற்றான். Checks and Balances - தகவறிதலும் சமன்படுத்தலும் - என்று ஆரம்பித்தான். இப்போது இருக்கும் ஆடிட்டிங் சரியில்லை என்றான். அது இறந்தபின் நடத்தும் அறுவை என்றான். ஒவ்வொரு கிளையிலும் ஒரு செயல்திறன் பார்வையாளர் இருக்க வேண்டும் அவர் நேரடியாக தலைமை நிலையத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். இது நேர்மையை நிர்வகிக்கும் என்றான். எல்லோருக்கும் இது பிடிக்கவில்லை - ஆனால் தலை - யோஷிமோ - பரவசம் அடைந்து சரி என்று பாராட்டியதால் - அனைவரும் கை தூக்கினர். என்னடா இது எவனாவது செஞ்சிக்குவானா தனக்கே ஆப்பு - என்று எண்ணிக்கொண்டேன். இந்தியா வந்த ஆறாவது நாள் - இன்டர்வியு செய்தது 10 சார்டட் அக்கௌடன்ட். எல்லோருக்கும் எண்கள் தந்து எழுத்து தேர்வு நடத்தினான். அதே எண்களுடன் நேர்முக தேர்வும். ரங்கராஜன் எல்லாவற்றிலும் முதலாக இருந்தான். வினோத் எல்லாவற்றிலும் கடை. அவர்களின் எண்கள் 4 மற்றும் 8 . வினோத்தின் கண்களில் ராத்திரி குடித்த வோட்கா மிச்சம் இருந்தது. அவன் தந்தைக்கு ஜானி வாக்கர்தான் பிடிக்கும். எத்தனை தடவை எங்களோடு வந்திருப்பார்.அன்று வீடு திரும்பும்போது அவன் காரில் வரச்சொன்னான். அவன் புகழ் பாடுவது பழகிப்போச்சுதானே. பாடினேன். நாலையும் எட்டையும் மாற்றிவிடு என்றான். நான் செய்யாததா - சரி என்று ..... இருங்கள் ... சரி சரி .... அங்கு நல்ல வேடம். அதற்கு பரிகாரம் ஒரு தலையாட்டி ஆடிட்டர். இவன் ஜித்தனா இல்லையா. அவன் வீட்டிற்கு சென்றபின் - நீது அவன் மனைவி - விருந்தோடு காத்திருந்தாள். எங்களின் நட்புக்கு பாராட்டு என்றாள். விருந்து முடிந்தபோது - நீது மட்டும் சிறிது நிதானமாக இருந்தாள்.நான் வீட்டுக்கு போயே ஆகா வேண்டும் என்றேன். நீது கார் ஓட்டினாள். ராஜ் அவன் திறமையை அவனே புகழ்ந்து கொண்டிருந்தான். நான் அவன் அறியாது நீதுவை தீண்டிய நேரம் - அந்த விபத்து. சம்பவ இடம் அம்பு குறியிட்டு தின இதழ்களில் வந்த நேரம் நாங்கள் சொர்க்க/நரக வாசலில்.இருங்கள் கதை முடியவில்லை. மூவரும் ஒருசேர வந்ததால் - ஒரே நேரத்தில் விசாரணை. "ராஜ் நீங்கள் தவறு எதையும் செய்யவில்லை. நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கினீர்கள். உங்கள் மனைவியின் இன்பத்தில் குறுக்கிடவில்லை. மேல் அதிகாரிகளுக்கு உண்மையாய் இல்லை. அது மட்டும் தவறு. அதனால் ஒரு வருட நரகத்திற்கு பின்னர் சுவர்க்கம் செல்லலாம்."அடுத்து நான் - " நேராக நரகம்" -எதிர் பாராததா?அடுத்து நீது - "நீங்கள் ராஜை மணம் மட்டும் செய்தீர்கள் - பின்னர் உங்களின் இரு குழைத்தகளுக்கும் தந்தை இந்த நரன். அதனால் அவனோடு நீங்களும் செல்லுங்கள்." நீது சிரித்தாள். இவன் கொடுத்த தண்டனை வலிக்க வில்லை - நீதுவுடன் எங்கு வேண்டுமானுலும் செல்லலாம்.
ஆனால் - ஒரு கதை முழுக்க நானும் - 30 வருடங்களாக நாங்களும் காத்துவந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டானே - பாவி.
ராஜ் குமாருக்கு சொர்க்கம் சொர்கமாக இருக்குமா?
ஞாயிறு, 7 மார்ச், 2010
யார் கடவுள் -
யார் கடவுள்
எனது மகள் பள்ளியில் இருந்து ஆர்வமாக ஓடி வந்து தனது கட்டுரைக்கு A+ கிடைத்ததை காட்டி, அப்பா மிஸ் கான்லி ("Bra burning feminism is not needed, when we have earth saving motherhood") - இந்த கால அமெரிக்க மகளிர்போல் மார் கச்சை எரித்து பெண்ணியம் நிரூபிக்க வேண்டியதில்லை, தாய்மையை எல்லா இடங்களிலும் காண்பிப்போம் - என எழுதியதை மிகவும் சிலாகித்து எல்லோருக்கும் படித்து காட்டினாள் என்றாள். அவள் பாட்டியின் அபூர்வ தாய்மை அவளுக்கு நானா சொல்லித்தரவேண்டும்?1985 எனது கடைசி தம்பியை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சேர்த்து ஆறு மாதம் ஆகி இருந்தது. எனது பெரிய தம்பியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை - மாயூரத்தில் இருந்து நான் சென்னை வந்து கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது - கிளம்பிவிட்டேன், முன் அறிவிப்பின்றி. மாலை ஆறு மணியிலிருந்து மூன்று தந்தி அடித்திருக்கிறான் என்னை வர சொல்லி. காலை நான் அங்கு சேர்ந்தபோது, பாண்டியன் எனது பெரிய தம்பி அடக்க முடியாத அழுகையோடு இருந்தான். லிம்போ ப்ளாஸ்டிக் லுகேமியா - இரத்த புற்றுநோய் பற்றி நான் நிறைய தேடித்தேடி படித்தேன் அந்த ஆறு மாதங்களில். நினைத்தாலே இனிக்கும் பல முறை பார்த்திருந்தேன். சர்வேஸ் நிச்சயம் பிழைக்க மாட்டான் என முடிவு செய்திருந்தேன். அதற்கு மனதளவில் என்னை தயார் செய்திருந்தேன். அவன் அப்போது ICU வில் இருப்பதை தாங்க முடியவில்லை. சனியன்று சாதாரணமாக இருந்த வயிறு ஞாயிறு மாலை 72 இன்சு வீங்கி இருந்தது. தங்கை அவள் குடும்பம் வந்து பார்த்து சென்றது. அவள்தான் எல்லா உதவிகளும் செய்து கொண்டிருந்தாள். எங்கள் தந்தை ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிழைச்சுக்குவானா என்று மட்டும் நொடிக்கு நூறுதரம் கேட்டுக்கொண்டிருந்தார்.டாக்டர் மைத்ரேயன் (தற்போது அ தி மு க - MP) - நிலைமையின் தீவிரத்தை என்னை அழைத்து சொன்னபோது திங்கள் காலை 8 மணி. டாக்டர் சாகர் (இப்போதும் அங்கு இருக்கிறார் என நினைக்கிறேன்) - தம்பி கவலை படாதே கடவுள் இருக்கிறான் என்றார். டாக்டர் மைத்ரேயன் - இப்போதே வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து செல்லலாம் - தாம்பரத்தில் ஐஸ் ஏற்பாடு செய்கிறோம் என்றபோது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டு அப்பாவிடம் போனேன். அவரிடம் இருந்து அழுகை மட்டுமே வந்தது. பாண்டியன் சர்வேசின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தனியனாய் உணர்ந்தேன் - இல்லை அம்மா இருக்கிறார்கள் - அவர்களிடம் சென்று டாக்டர் இப்படி சொல்கிறார் என்றேன். அவன் அருகிலேயே காலம் கழித்த அம்மா சொன்னார்கள் - "அழாதேடா குழந்தை - அவன் சரியாகிவிடுவான். இப்போ எல்லாம் அவனை கூட்டி செல்ல கூடாது. டாக்டர் கிட்ட சொல். இப்பதான் சாந்தா அம்மா வந்தாங்க - அவன் பிரச்சினை சொன்னங்க. ஒண்ணும் பயப்பட வேண்டாம். " அதை வேத வாக்காக எடுத்து கொண்டேன். எனக்கு தாயிற் சிறந்த கோயில் இல்லை.டாக்டர் மைத்ரேயனிடம் சென்றேன். "அவனுக்கு உயிர் தர முடியாவிட்டாலும் அமைதியான சிரமம் அற்ற மரணம் தாருங்கள். அவன் உயிர் பிரியும் வரை இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது" என்றேன். அவர் புன்னைகைத்தார்.பத்து மணி இருக்கும், ஏதோ கான்பெரென்ஸ் இருக்கும்போல் - அனைத்து டாக்டர்களும் மாயமானார்கள். அம்மா மட்டும் சர்வேசிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். மலம் ஜலம் நின்று ரொம்ப நேரம் ஆகி இருந்தது. நர்ஸ் வந்து அதுவெல்லாம் நின்றுவிட்டால் அவ்வளவுதான் என்று பயமுறித்தி சென்றாள். அம்மா அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.மூன்று மணி இருக்கும் அவன் 100 மில்லி மூத்திரம் போனான். பேசினான்.நான்கு மணி - சாந்தா அம்மா வந்தார்கள் - சர்வேஸ் எப்படி இருக்கே என்றார்கள் - நல்ல இருக்கேன் டாக்டர் நீங்க எப்படி இருக்கீங்க என்றான். அவன் ஜலம் கழித்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அவனுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு வெளியில் சென்றவுடன் - நான் ICU வுக்கு செல்லாமல் அவர்களை பார்த்துகொண்டிருந்தேன். வரவேற்பு அறையில் இருந்த வேங்கடவனுக்கு அவர்கள் நன்றி சொல்லி கை கூப்பி இருந்தார்கள். அம்மா!!!!!அடுத்த இருபது நாட்கள் அவன் ICU வில் இருந்தான். ICU வில் பட்டாசு வெடித்து பார்த்து இருக்கிறீர்களா? தீபாவளி வந்தது. சாந்தா அம்மாவே வாங்கிவந்து தந்தார்கள். சர்வேஸ் மத்தாப்பு கொளுத்தினான் அங்கு. ICU வில்.ஆயிற்று 25 வருடம் - சாந்தா அம்மாவையும் மறக்க முடியாது. மைத்ரேயனையும் சாகரையும் மறக்க முடியாது.ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் - இப்போது 35 வயதில் நலமாக இரண்டு குழந்தைகளோடு இருக்கிறான் சர்வேஸ்.அம்மாவிடம் அன்று கேட்டேன் - அது எப்படி நீ வணங்கும் தெய்வம் மட்டும் உனக்கு பதில் அளிக்கிறது என்று?"புண்ணாக்கு - அன்று எனக்கு தெரிந்ததைத்தான் செய்தேன். சாந்தா அம்மா சொன்னாங்க அவனுக்கு நினைவு தப்பியதும் அழைத்து போங்கள் என்று. நான் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன், நினைவு தப்பாமல் இருக்க. கடவுளை அழைக்க எனக்கு நேரம் எங்கே இருந்தது என்று"நீயே கடவுள் அம்மா உனக்கு எதற்கு இன்னொரு கடவுள்.
யூத்புல் விகடனில் வந்த அனுபவக் கட்டுரை
மகளிர் தின ஸ்பெஷல்
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/nividitatamil050410.asp