Pages

வியாழன், 28 ஜனவரி, 2010

ஆகாயத்தில் ஆரம்பம் நிவேதிதா தமிழ்.

நான் வானதி. நாஷ்வில் வான்டர்பில்ட் யுனிவெர்சிடியில் MD முடித்துவிட்டு இப்போது ஆராய்ச்சி மாணவி. வினீத் எனது தோழன்.அவன் குவாண்டம் மெகாநிக்சில் ஆராய்ச்சி மாணவன். எங்களது பெற்றோர்கள் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் எங்களின் கனவுகளோ மிகப்பெரிய இலட்சியம் நோக்கியவை.அதனால்தான் அவர்கள் விருப்பம் தள்ளிப்போகிறது. எனது ஆராய்ச்சியும் அவனது ஆராய்ச்சியும் ஓர் புள்ளியில் சந்திப்பதால், அதை மட்டும் நிரப்பிக்கொள்ள இந்த இந்திய பயணம். எங்கள் இருவரின் பெற்றோரும் மிக ஆனந்தமாக சம்மதித்தார்கள். இந்தப்பயணம் எங்களை இணைக்கும் என்ற அதீத ஆசை!



நான் இந்த கதையின் ஆசிரியன்.இந்த இடத்துல, அவங்களா கதை சொல்லும்போது இவன் எதுக்குன்னு நினைக்காதீங்க. அவங்க ஆராய்ச்சிகள் தொடும் புள்ளியை மட்டும் சொல்லிவிட்டு நான் விலகிக்கிறேன். சரியா? வானதி சீஷோபர்னியா - என்ற மனச்சிதைவு நோய் பற்றி விளக்கம் தேடி அலைகிறாள். நிறைய அமெரிக்கர்களை பரிசோதனை செய்திருக்கிறாள்.பாரனாயிடு மற்றும் ரெசிடுவல் வகை நிறைய பார்த்துவிட்டாள் ஆனால் காடடோனிக் வகை இந்தியாவில்தான் அதிகம் என அறிந்து - அதற்காக இந்த பயணம். சுருங்க சொன்னால் - தமது கற்பனைகளை நிஜம் என நம்புவது பாரனாயிடு. அதன் நீர்த்த வடிவம் ரெசிடுவல். விறைத்த உடல் பாகங்களுடன் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது - விறைத்த நிலையில் ஆடுவது - சாமியாடுவதை நினைத்துக்கொள்ளுங்கள். - காடடோனிக் வகை. நான் கடவுள் திரைப் படமும், சாதுக்கள் பற்றிய ஒரு குறும் படமும், அவள் தந்தையின் நீண்ட பிரசங்கமும் அவளை இந்தியாவிற்கு போக தூண்டியவை. வினீத் பௌதிகத்தில் குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி ஆய்வு செய்கிறான். வினீத் நம்பிக்கையில் - இன்னொரு சரிசமான உலகம் இணக்கமாக - நம் உலகம் மற்றும் அண்ட சராசரங்களை ஒட்டி இயங்குகின்றது. இதற்கு parellel universe என்று சொல்வார்கள். குவாண்டம் தியரிக்கும் இந்த இணை உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை நிருபிப்பது அவன் இச்சை. மூளையின் செல்களிலும் இருக்கும் ஹில்பர்ட் ஸ்பேஸ் இதற்கு காரணி என அவன் நம்புகிறான். அதன் காரணமாக இந்த இணை உலக செயல்பாடுகளை உணரும் சக்தி படைத்தவர்களை - காடடோனிக் நோயாளிகளாக - வானதியின் ஆய்வு சித்தரிப்பதை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வித நோயாளிகளின் அற்புத சக்தியை பயன் படுத்தும் விதம் குறித்தானது அவன் ஆய்வு, ஆக இரண்டு பேருடைய குறியும் இந்திய சாமியார்கள். உம்ம்ம். அவர்களின் அற்புதமான ஆசிரியர்கள் கொண்ட பல்கலைகூடம். இருவரின் இடை இருந்த ஆய்வு ஒப்புமை அறிந்து அவர்களுக்கு அனுமதி தந்தது. - போதும் தானே விளக்கம் - டாடா - கதை முடிவில் சந்திக்கலாம்.

நான் முரளிதரன். அட்லாண்டாவில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு ஊர் திரும்புகிறேன்.வானதியையும் விநீத்தையும் பார்த்த அரை மணிநேரத்தில் என்மகளைவிட மருமகனைவிட நெருக்கம் வந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் இரண்டாம் தலைமுறை இந்தியக்குழந்தைகளின் மதம் கலாச்சாரம் பற்றிய தள்ளாட்டம் இவர்களிடம் அப்பட்டமாக தெரிந்தது. .நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் ஒரு கிராமத்து ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியன். கேள்வி கேட்கும் மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்களின் ஆராய்ச்சியும், உயரிய லட்சியங்களும் அசரடித்தது.எனக்கு தெரிந்தவரை சித்தர்களை பற்றியும், ரமண மகரிஷி பற்றியும் திருவண்ணாமலை மகிமை பற்றியும், அங்கிருக்கும் பசியறியா சாதுக்கள் பற்றியும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் குவியும் லட்சக்கணக்கான மக்கள் பற்றியும் சொன்னேன். அதன் அருகில் இருக்கும் எனது கிராமத்தில் , என்னுடன் இருக்கும் தாயும் சிறிது மனநலம் பாதித்தவள் என்றேன்.உன்னிப்பாக கேட்ட வானதி இது ரெசிடுவல் வகை சீஷோபெர்னியா என்றாள்.நான் அனுமதித்தால் வந்து என் தாயை பார்ப்பதாக சொன்னாள். அமெரிக்க டாக்டரிடம் ஓசியில் வைத்தியம் பார்த்துக்கொள்ள கசக்குமா என்ன? திருவண்ணாமலையில் இருக்கும் எனது மருமகன் மூர்த்தியை அறிமுகப்படுத்தவும், எனது வீட்டில் அவர்கள் தங்க ஏற்பாடும், மூர்த்தி அவர்களுக்கு அங்கிருக்கும் அனைத்து வகை சாதுக்களை சந்திக்க வகை செய்யவும் முடிவு செய்தோம்.மூர்த்தி அங்கு ஒரு ஆசிரமத்தில் பணி செய்கிறான்.

தமிழகத்தின் விருந்தோம்பல் பற்றி அப்பா சொன்னது எவ்வளவு உண்மை! எனது மாமா வீட்டில் ஒரு நாள் இளைப்பாறிவிட்டு - திருவண்ணாமலை சென்றோம். முரளி சார் வீட்டின் உபசரிப்பு திக்கு முக்காட வைத்தது.அவரின் மனைவியும் மகளும் அன்பின் மறு உருவாக இருந்தார்கள்.அவரின் தாயிடம் சீஷோபெர்நியாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை - அவர்களிடம் தனியாக பேசும் வரை. தன் கணவர் பக்கத்து தெருவில் வசிப்பதாக சொன்னார். முரளி சார் ஏதோ குடும்ப விவகாரத்தை மறைப்பதாக நினைத்தேன். சிறிது நேரம் கழித்து தனக்கு குடும்ப பென்ஷன் - அவர் கணவர் இறப்பின் மூலம் - வருவதால்தான் - தன் மருமகள் தன்னை கவனிப்பதாக சொன்னதும் - புரிந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சூனியம் வைத்து இவர்கள் குடும்பத்தை அழிப்பதாக சொன்னார். தான் கந்த சஷ்டி கவசம் படிப்பதை நிறுத்தினால் அவ்வளவுதான் - நாய்க்கிருமிகள் வீட்டை சூழ்ந்துவிடும் என்றார். முரளி சாரிடம் பேசியபோது அவருடைய பெற்றோரின் மித மிஞ்சிய அன்யோன்ய வாழ்க்கையும் - அவர் தந்தையின் இழப்பு தாயை புரட்டி போட்டதையும் விளக்கினார். படிப்பறியா இந்திய பெண்களின் நிலை கண்ணீர் வரவழைத்தது.அவரின் உடல் நிலை சோதித்தபின் - உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றேன். இவனிடம் சொல்லு - பாரடா அமெரிக்காவில் படித்த டாக்டரே சொல்லிவிட்டாள் - இனிமேல் என்னை எந்த டாக்டரிமும் கூட்டி செல்லாதே என்றார். அனாலும் எந்த வியாதியும் வராதிருக்க சில மருந்துகள் தருகிறேன் என்று நான் தந்த அனைத்தையும் குழந்தையின் ஆர்வத்துடன் வாங்கி பத்திரப் படுத்திக்கொண்டார். வினீத்திற்கு சுவாரஸ்யமாக ஒன்றும் சிக்கவில்லை.

மூர்த்தி பேசறேன் மாமா என்றேன். இவர் எப்பவுமே லேட்டுதான். ஆறு மணிக்கு வருவாதாக சொன்னார். மணி ஏழாகிறது. பொறுமை போய் மூணு ரவுண்டு முடித்து டாஸ்மாக் விட்டு வெளியே வந்தேன். அவரின் மாருதி வேனை இன்னும் காணவில்லை. மறுபடியும் உள்ளே போக நினைத்தபோது - சுமொவிலிருந்து இறங்கினார். அவருடன் வந்த இருவரும் - குழந்தை முகமாக தெரிந்தார்கள். சொல்வதை கேட்பார்கள் ஆனால் - பாரின் சரக்கு சந்தேகம்தான் என்று தோன்றியது. பார்த்தவுடன் கணித்துவிடுவேன். "மாமா - இரண்டு மூன்று பேரிடம் சொல்லி இருந்தேன், பார்ப்பதாக - ஆனால் நேரமாகிவிட்டது". என்றேன். "மாப்பிளே பரவாயில்லை.இன்னும் ஒரு வாரம் இருப்பார்கள். இப்போ எங்கியாவது நல்ல உணவகம் செல்லலாம். உன்னோடு பேச வேண்டுமாம்", என்றார். "சரி மாமா - ரெண்டும் தளதளன்னு இருக்குங்க தண்ணி போடுவாங்களா? நமக்கு தண்ணி போட்டாதான் நல்லா ஆன்மீகம் வரும். அப்புறம் பாரின் சரக்கு இருக்கா?", - நான் பேசிக்கொண்டே போக -- மாமா டேய் .. டேய் என்றார். நானா விடுவேன். "எத்தனை காசு கறக்க முடியும்னும் சொல்லிடு மாமு. அப்புறம் பேஜாரு வேணாம்", . என்றேன். மாமா தலையில் அடித்துக்கொண்டார். சுமோவில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து - அந்த உசத்தி பார் அண்ட் ரெஸ்டாரண்டிற்கு வழி சொன்னேன். ஏனோ மூவரும் அமைதியாக இருந்தார்கள்."திருவண்ணாமலை இஸ் அ டிவைன் பிளேஸ். வெல்கம்", என்றேன். "நன்றி", என்றார்கள். ..உணவகத்தில், "மாமு எனக்கு டீச்சர்ஸ் ஒரு ஆப் உனக்கு?", என்றேன். "எனக்கு வேண்டாமப்பா",. என்றார்."இந்த குட்டி குடிப்பாளா? இல்ல அவனுக்கு மட்டும் சொல்லவா?", என்றேன். எனக்கு ஒரு ஆப் - என்று சொன்னேன் அல்லவா - அது ஆப் அல்ல ஆப்பு!.அந்த பெண், "உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லிக்கொள்ளுங்கள். எங்களுக்கு காரமில்லாமல் சைவ உணவு மட்டும் சொல்லுங்கள்." என்றாள். அவர்களுக்கு தமிழ் தெரியும் என்று முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே? மாமாவை நோக்கிய பார்வையில் கொலை வெறி காட்டினேன். "அட புண்ணாக்கே - நீ வண்டியில் வந்தபோதே அந்த பெண் நன்றி என்று தமிழில்தானே சொன்னாள்?", - மாமா காதருகே கிசுகிசுக்க - தமிழர்கள் பொறுப்புணர்வோடு குடிப்பதில்லை - We never drink responsibly .. என்று அண்ணா சொன்னது புரிந்தது. மூணு பெக்கும் இறங்கிவிட்டது. .. இன்னும் இரண்டு பெக் முடித்தபின் தான் மீண்டும் வெட்கம் போய் பேச முடிந்தது."இந்த ஊரில் இருக்கும் ஒரு சாதுவும் விரும்பாமல் பட்டினி இருப்பதில்லை. ஏதாவது ஒரு கோவிலில் அல்லது சத்திரத்தில் அவர்களுக்கு உணவு கிடைக்கும். இங்கு கற்பூரம் விற்பவள்கூட தேவைக்கு சம்பாதிக்கிறாள். இங்கு ஒரு சாலை சந்திப்பில் தினம் விபத்து நடந்துகொண்டிருந்தது. இந்த கோணிப்பை சாமியார் என்ன செய்தார் தெரியுமா? ஒரு அமாவாசை இரவு - ,..கையில் துடைப்பம் எடுத்துக்கொண்டார் என்னைத்தான் கூட வரச்சொன்னார். சரியாக பன்னிரண்டு மணி - அடித்து துவைத்துவிட்டார். என்னங்கடா நினச்சுகிட்டு இருக்கீங்க இந்த கலாட்டாவெல்லாம் இங்க வேணாம் - நான் இருக்கேன். என்று. அந்த பேய்களெல்லாம் அன்றே ஓடி விட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒரு விபத்து இல்லை தெரியுமா?" சரளமாக கதை அடிப்பேன் இது மாதிரி. இப்படி ஏதாவது அடித்துவிட்டால்தான் டாலர் கிடைக்கும்..... அந்த பையன் மிக ஆர்வமாக கேட்டான். "நாளை அவரை அறிமுகப்படுத்துகிறேன்", என்றேன். அவர்கள் ஏதோ குவாண்டம் காடலோனிக் சிஷோபெர்நியா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஜாஸ்தியாகி... பிறகு எப்படி வீட்டில் காலை பத்து மணிக்கு எழுந்தேன் என தெரியவில்லை. மாமா நான்கு முறை அழைத்திருக்கிறார் - செல் போன் காட்டியது.நான் ரெடியாகி திருநீறு வைத்து அவரை அழைக்கும்போது மணி 11 . ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பதாக சொன்னார். பஜாஜ் M80 விரட்டி கோணிப்பை சாதுவை பிடித்த நேரம் 12 : 30 . அவர் மூக்கு பொடி வாங்க 10 ரூபாய் கேட்டார். எனக்கு தெரியாதா? வாங்கி வைத்திருந்த பத்து பொடி மட்டைகளை கொடுக்க - குஷாலாகி விட்டார். மாமாவை அவரின் விருந்தினர்களுடன் அழைத்து வந்தபோது - இவர் விறைத்தபடி ஒரு கோணத்தில் இருந்தார், ஒரு பஸ் ஸ்டேண்டு நிழல் குடையில்.. வானதி பேசினாள் - "இது காடடோனிக் சீஷோபெர்நிய", என்றாள். "இந்த வியாதி உள்ளவர்கள் மணிக்கணக்காக ஒரே நிலையில் இருப்பார்கள்", என்றாள். "இது யோக நிலை", என்றேன் நான். "இல்லை இவர் இணை உலகத்தில் - .Parallel Universe - உலாவுகிறார்", என்றான் வினீத்.வானதி அவர் கையை பிடித்து அமரவைத்து அந்த பஸ் நிறுத்த பென்ச்சிலேயே அவள் கையில் இருந்த உபகரணங்களால் சோதனைகள் செய்தாள் சாமியாரும் தடுக்காமல் - வினீத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வப்போது பத்து ருபாய் கேட்கவும் தவறவில்லை. ...இதுவரை எந்த வெளிநாட்டவனும் நான் சொல்வதை மறுத்து இதுமாதிரி நடந்துகொண்டது இல்லை.நாம ஏதோ கதை சொல்லிக் கொண்டு காசு பார்த்துக்கொண்டு இருக்கோம். என் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ? இவர்கள் வெளிநாடுதான் ஆனாலும் தமிழர்கள் ஆயிற்றே?.. குழப்பமான மனநிலையில் - எனக்கு குவார்டர் தேவைப்படவில்லை அன்று. இதுக்கு ஒரு வழிதான் இருக்கு. இங்க குகையில ஒரு ஆள் இருக்கார். அவரை சாமியா ஏன் சாமியாரா கூட நான் பாக்கலை.இந்த மாதிரி டாலர் கொட்டும் மர மனிதர்களை அவர் கண்ணுக்கு நானோ அல்லது என் சகாக்களோ காட்டினோம் அவ்வளவுதான் - என்ன பேசுவாரோ எது பேசுவாரோ - அவர்கள் அடுத்த நாளே டாடா சொல்லி கிளம்பி விடுவார்கள்.நாம ஏதாவது கேட்டோம் அவ்வளவுதான் - "நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து முனமுனன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ" ன்னு மூச்சு விடாம சொல்லிவிட்டு அடுத்த பாட்டு ஆரம்பிப்பார். அந்த ரெண்டாவது பாட்ட கேக்க நாங்க என்னிக்கும் இருந்ததில்ல.... இதுங்க ரெண்டும் நமக்கு ஆப்பு வைக்கறதுக்கு முந்தி, அவர் கிட்ட கூட்டி போக வேண்டியதுதான்...அடுத்த நாள் குகைக்கு அழைத்து சென்றேன். அவர் தெளிந்த ஞானி - உங்களை பார்த்ததும் உங்கள் மனதை படித்து அப்படியே வேண்டியதை கொடுப்பார் - என்றெல்லாம் சொல்லி பில்டப் கொடுத்தேன். ரெண்டு பார்டியில ஒண்ணு புட்டுகிட்டாலும் நமக்கு நல்லதுதானே?நடந்தது?... அவர்களின் பேச்சை அப்படியே கேட்டால்தான் புரியும்."குழந்தைகளா என்ன வேண்டும்""சார் - நாங்கள் ஆராய்ச்சி மாணவர்கள்""என்ன வேண்டும் என்றுதான் கேட்டேன். நீங்கள் யார் என்றா கேட்டேன்?""மன்னியுங்கள். - நான் மனச்சிதைவு பற்றி அறிய வேண்டும். இவர் இணையுலகம் பற்றி அறிய வேண்டும்.""என்ன அறிந்தீர்கள் இதுவரை?""நிறைய -- ஆனால் சந்தேகம் நிறைய இருக்கிறது.".. "அறிவீர்கள். என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?""எங்களின் அவதானிப்புகள் சரியா என்று சொல்லமுடியுமா?""நீங்கள்தான் ஆராய்கிறீர்கள். நீங்களே கண்டு அடைய வேண்டும். உங்களின் தேடல்கள் உங்களால்தான் கண்டடைய முடியும். இதற்கு எதற்கு அடுத்த உயிர்? நீ சீஷோபெர்நியா என்று நினைக்கிறாயா? கண்டுபிடி. நீ parellel universe என்று நினைக்கிறாயா கண்டுபிடி. நீ தான் செய்யவேண்டும் - என்னை விடு". என்றார். "இல்லை ஒரு வழி காட்டினீர்கள் என்றால்" வானதி சொன்னாள்."அதுதானே காட்டுகிறேன். தேடுங்கள்.கண்டடைவீர்கள்.எல்லாம் மனதில் இருக்கிறது. நான் வேண்டர்பில்ட் டாக்டர் அல்ல. காடடோனிக் ஆராய்ச்சிக்கு வழி சொல்ல. நான் முத்திக்கு வழி சொல்பவன். அதுவும் இப்படித்தான் சொல்வேன். கண்டவன் விண்டதில்லை விண்டவன் கண்டதில்லை - ஒவ்வொரு உயிரும் தனித்தனி - ஒவ்வொருவரின் தேடலும் அவர்களாலேயே கண்டு அடையப்பட வேண்டும். நான் வருகிறேன். கண்ட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கி மறுளாதிர்கள்"...வானதி அடுத்த கேள்வி கேட்கும் முன்பு அவர் குகையில் மறைந்தார். அந்த எட்டடிக்கு பத்தடி குகையின் வாயிலில் நாங்கள். அவர் நடந்து உள்ளே சென்றார். சென்றாரா? வினீத் சுவர் முழுக்க தடவிக்கொண்டிருந்தான்.,வானதி சிலையாகி இருந்தாள். மாமா மரமாகி இருந்தார்.நான்?. அவர்கள் - என்ன ஆராய்ச்சி செய்தார்களோ தெரியாது ... இப்போது நான் நிஜமான பக்தன். அருணகிரியின் பாதம் என் பாக்கியம்..... இதுவரை செய்துவந்த தில்லு முல்லுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய .. அருணகிரி அருளவேண்டும்.

நான் கதையின் ஆசிரியன் - ஒண்ணும் இல்லீங்க கடைசியில வரேன்னு சொன்னனில்ல அதான். வானதியும் வினீத்தும் தங்க மெடல் வாங்கிய பின்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அடுத்த தடவ மலைக்கு வரப்போ சொல்றேன்னு சொன்னாங்க... ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக