Pages

சனி, 30 ஜனவரி, 2010

ஆறாம் அறிவு? - சிறுகதை- யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை.

- யூத்புல் விகடனில் வெளியான சிறுகதை.
- நிவேதிதா தமிழ்
திடீர்னு தெருவோட அந்த பக்கத்துல ரீது.
அவளைப் பார்த்தாலே புத்தி என் வீட்டு வேலைக்காரன் மாதிரி ஆகிவிடுகிறது, எல்லா வேலையையும் சொதப்புது. புல்லறிச்சு போய் வேகமா ஓடினேன். அதான் தெரியும்.
தண்ணி லாரிகாரன்கிட்ட என் வேலைக்காரன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறான்.
நான் அந்தரத்தில் பறந்துகொண்டு... பறந்துகொண்டு இருங்க.
எப்படி?
ஆஹா!!!
எனது உடல்... மண்டை உடைந்துபோய். லாரிக்கு கீழே..!
புரிந்துவிட்டது. மண்ணில் இருக்கும்போதுதான் நேரம் பிடிக்கிறது, எதையும் புரிந்துகொள்ள. உடலை உதறியவுடன்எல்லாம் தெளிவாக தெரிகிறது.
சரி, அடுத்த வேலையை பார் என்று பக்கத்தில் குரல்.
அழகான வரவேற்பறை.
உள்ளே நுழைந்ததும் ஒரு புது கவுண்டர் ஓபன் ஆகிறது எனக்காக. பூமியில்தான் எங்க பாத்தாலும் கியூ. டோரா தி எக்ஸ்ப்ளோரர் தொடரில் வருவாளே அது மாதிரி ஒரு அழகி.
"மீள் வருகை" என்றாள்.
நடந்தது என்ன என்பது எனக்கு தெரியும்.
"உங்களின் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். சொல்லுங்கள்," எனறாள்.
நான் பேச பேச திரையில் உண்மையாக நடந்தவை முப்பரிமாணத்தில் வந்தது.
"இத்தனை அழகாக வாழ்ந்தேனா?
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது வில்லாவில்தான் இருந்தேன். எனது வேலைக்காரர்கள் இருவரும் என்னை அன்புடன் பார்த்துக்கொண்டார்கள். காலை உணவு முடிந்ததும் வெளியில் சென்று விடுவார்கள். எனது வில்லாவை ஆனந்தமாக சுற்றி வருவேன். டோரா தி எக்ஸ்ப்ளோரெர் பார்ப்பேன் டிவியில்.
இந்த வேலைக்காரி துணி துவைக்க வீடு சுத்தம் செய்ய வருவாள். மடியில் வைத்து கொஞ்சுவாள். அது பிடிக்கும்தான். ஆனால், டிவி சேனல் மாற்றி விடுவாள். அதில், இந்த மனிதர்கள் பெண் தொப்புளில் பம்பரம் விடுவார்கள் அல்லது ஆம்லேட் போடுவார்கள். இலையென்றால் நீள கத்தி வைத்துக்கொண்டு கத்துவார்கள். இல்லையென்றால் 'உம்ம் தில்லாலங்கடி சரசு' என்று குதிப்பார்கள். அவள் போனதும் நான் மறுபடியும் டோரா சீரியலுக்கு போய் விடுவேன்.
மாலையில் கொஞ்சம் வேலைக்காரனுடன் விளையாட்டு, வெளியில் நடை. பின்னர் சாப்பாடு. வார இறுதியில் காரில் ஊர் சுற்றுவோம். பக்கத்து வீட்டில் ரீது வந்தபின் மாலை நடை சொர்கமாகி விட்டது. எனது வேலைக்காரி பெரிய வயிறுடன். அதனாலோ என்னவோ எனது வேலைக்காரன் தவறாது வாக்கிங் வருவான். நான் ரீதுவுடன் கொஞ்ச அவன் பக்கத்துவீட்டு பாலா மாமியுடன் குலாவுவான்.
இந்த வேலைக்காரர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. என்னை தவிக்க விட்டார்கள். நேரத்துக்கு சாப்பாடு கிடையாது. ரீதுவை பார்க்க முடியவில்லை. சே... பேஜாரு.
என்னை அந்த குழந்தைகிட்ட போகவே விட மாட்டங்க. ஒரு நாள் எனக்கு நகம் வெட்டிவிட ரெண்டு பேருக்கும் சண்டை. என்ன எழவு பேசினாங்களோ? அதுக்கப்புறம் ரெண்டு தடவை - இந்த வேலைக்காரன் வெளியே போகும்போது என்னை மறந்துவிட்டு அவன் மட்டும் காரில் வீட்டுக்கு வந்துவிட்டான். மூணாவது தடவை - நான் வீட்டுக்கு வந்து விட்டேன் -அந்த லூசு வழியை மறந்துவிட்டது. அன்னிக்குத்தான் நான் உள்ளே வரேன் ஒரு நாகப் பாம்பு - குழந்தையை நெருங்கி நக்கிக்கொண்டிருந்தது. விடுவேனா? என்ன இருந்தாலும் எனது வீடு. எனது வீட்டு குழந்தை. பிச்சி வீசிட்டேன்.அன்னியிலே இருந்து ராசா உபசாரம்தான்.
என்ன பண்ண? அடுத்த மூணாவது நாளே இந்த விபத்து."
டோரா சிரித்தாள். அவள் கரங்கள் பதிவு இயந்திரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தன.
சில நொடிகளுக்கு பின் கேட்டாள்.
"நீங்கள் ஒரு வருடம் உங்கள் விருப்பப்படி உலவலாம். உங்களது தகுதி உயர்ந்திருக்கிறது. இப்போது 1004 புள்ளிகள் எடுத்து இருக்கிறீர்கள். விரும்பினால் இந்த ஐந்தறிவு இனத்தில் இருந்து ஆறறிவு மனித இனமாக பிறக்கலாம். தங்களின் விருப்பம் என்ன?"
"மனித இனமா? இப்போதா? என்னை என்ன கூமுட்டை என்று நினைக்கிறீர்களா? சாதி மதம் மொழி என்று வெட்டிக்கொண்டு சாகவா? இல்லை பெண்ணாக பிறந்து கள்ளிப்பால் குடிக்கவா? இல்லை கஞ்சி குடிப்பதிற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவும் இலார் என்று பாரதி சொன்ன ஈனப்பிறவிகளாக வாழவா? இல்லை வேலை பணம் பெண் காமம்என்று அலையும் பணக்கார லூசுகளாக முட்டி மோதி உழலவா?"
அதற்கு பிறகும் பேசினேன். வாக்கியமாக எழுதினால் இன்டர்நெட் ஜாம் ஆகிவிடும் - அதனால் சுருக்கமாக - "சொந்த மண்ணில் அகதி.. பெயரை தொலைத்த இரவு கூலிகள்.. மதத்தை தவறாக புரிந்த வாதைகள் (வாதிகள்?) - பசியின் பிடியில் மடியும் - ஏய்க்கும் அரசியல் வியாதிகள்..."
"மன்னியுங்கள் அடுத்த பிறவியும் இதே மாதிரி நல்ல நாயாக பணக்கார நாட்டில் பிறக்க வேண்டும். சாரி!" என்றேன்.
சரிதானே?
டோரா சிரித்தாள். அதற்கு அப்படியே ஆகுக என்று அர்த்தம்.
உங்கள் வீட்டுக்கு வரவா?
*
விகடனில் படிக்க.
http://youthful.vikatan.comhttp://youthful.vikatan.com/youth/Nyouth/niveditatamilstory300110.asp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக