Pages

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

திருடர்கள் பலவிதம் - முரளி சாரின் இரு நாட்கள்! (1993)

திருடர்கள் பலவிதம் - முரளி சாரின் இரு நாட்கள்! (1993)

முரளி சார் அநியாயத்துக்கு நல்லவர். அதனால்தான் உடனிருக்கும் தொழில் பங்காளி, 7 லட்சத்தை சாமார்த்தியமாக உருவிவிட்டார். இந்த கதையில் சொல்லப்போகும் இரு நாட்களுக்கு முந்தைய நாள் இரவு.
பார்ட்னர், மிக சோகமாக, 7 லட்சம் போனதை உலக நாயகன் நடிப்பில் விவரித்துக்கொண்டிருந்தார், முரளி சாரிடம். 
"எனக்கு வந்த நஷ்டம் குறித்து கவலை இல்லை முரளி சார். நீங்கள் வருந்துவதுதான் என்னை வேதனை படுத்துகிறது." முரளி சாருக்கு, ஒருவேளை இவன் உண்மையாகத்தான் சொல்கிறானோ என தோன்றியது. அவன் கண்ணில் துளித்த நீரை பார்த்ததும், சே இவன் எதற்கு நம்மை ஏமாற்றனும் என் தோன்றவே, "விடுங்கள். நல்லவர்களை ஏமாற்றுபவர்கள் நாசம்தான். வெளியே போகலாம்" என்றார். 
பார்ட்னரின் இதயம் ஒருகணம் நின்று, பிறகு துடித்தது. இவர் சொன்னா நடக்குமே, என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் வந்தது.
 "முரளி, அந்த காமெடி எழுத்தாளனையும் அழைக்கலாமே. இரண்டு பெக்குக்கு பிறகு நன்றாக உளறுவான். இந்த வேதை மறையும்" என்றான் பார்ட்னர். முரளி சார் சிரித்துக்கொண்டு மாருதி வேனை கிளப்பினார். அந்த பாரை அடையும்போது, வலது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி, சாலையை அளவெடுக்கும் நவீன யுவதிகளை கண்களால் காயப்படுத்திக்கொண்டிருந்தார், அந்த எழுத்தாளர். தாஜ் வாசலில், வேகத்தடைக்கு நிதானமான மாருதியின் பின் கதவை, கார் நிற்குமுன் திறந்து ஏறிக்கொண்டார். "ஏன்யா இன்னும் பதினைந்து அடியில் பார்க்கிங்க் அதுக்குள்ள காருக்குள்ள பாயற!",  பார்ட்னர் கிண்டலடித்தார். 
"அது சரி. நீங்க ஜம்முனு, கார் சாவிய செக்யூரிகிட்ட தூக்கி போட்டுட்டு போவீங்க. நான் பின்னால நடந்து வந்தா அவன் என்ன ஒரு மாதிரி பாப்பான். அதுக்குத்தான்". 
முரளிசார் சிரித்துக்கொண்டார்.
நான்காவது பெக்கிலிருந்து, ஒரு நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும். அதற்கான நிர்வாக தத்துவங்கள். இருவருக்கும் எதில் மேதமை இல்லை. இலக்கியம் இதற்கு எப்படி உதவ முடியும் என்பது குறித்தெல்லாம், எழுத்தாளர் விவரித்தார். இத்தனை உயரிய கருத்துகளுக்கு இருவரும் விழுந்து விழுந்து சிரிப்பது ஏன் என்பது, எழுத்தாளருக்கு சிந்தனையாயிருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அவர் அத்தனை ஞானத்தை அவர்களுக்கு அளிப்பதால்தான் அவர்கள் அவருக்கு மட்டுமாக மிகுந்ததை எல்லாம் டாக் பேக்கில் அழகாக் பேக் செய்து தருகிறார்கள். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது, அவர் கொடுக்கும் ஞானத்திற்கு ஏற்ற கூலி அவருக்கு தரப்படவில்லை என்று.
முரளியின் கிரெடிட் கார்டை திரும்ப கொண்டுவந்த பணியாள், நன்றி சொன்னான். மற்ற இருவரும் அது முரளியின் கடமை என்பதுபோல், வேறு விவாதத்தில் இருந்தனர். அவர்களின் நன்றியை முரளி சாரும் இதுவரை எதிர் பார்த்ததாக தெரியவில்லை. 
எல்லோரையும் அவர் அவர் வீட்டில் விட்டு விட்டு, முரளிசார் வீடு திரும்பும்போது, மணி 1am.
அஞ்சனா எடுத்து வைத்ததில், தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டார். அவரின் மன வேதனையை, அவரின் முகத்தில் படிக்க முடிந்தது, அஞ்சனாவால். 
"நாளை வேண்டுமானால், ஊருக்கு சென்றுவிட்டு, அப்படியே, படவேட்டுக்கும் போய் வரலாமா" என்றாள். அவரின் தெய்வத்தின் பெயரை கேட்டவுடன், அவர் முகம் மலர்ந்தது.
அவரின் கார் சத்தம் கேட்டவுடன், முரளி சாரின் அம்மா வாசல் வரை வந்தார்கள். ஐந்து மணி நேர பயணத்தில் சிறிது களைத்திருந்தார். அம்மாவின் காபி தெம்பளித்தது. வெளியில் வர அவரின் பள்ளி கால தோழன், சோடா பாலன் நின்றிருந்தான்.
"முரளி. ஆறு மாசம் ஆச்சுப்பா. இன்னிக்கி நீ வருவேன்னு தெரியும்." என்றான்.
"எப்படி"
"சோடா வியாபாரம் சொல்லிக்கற மாதிரி இல்லப்பா. எந்தம்பி, பிரிட்ஜ் வாங்கி கட வச்சிட்டான். எனுக்கு யாரப்பா இருக்காங்க. அதான் உன்ன தேடி பெங்களூரு வரலாம்னு இருந்தேன். இங்க ஒரு சாமி வந்திருக்கார். ரொம்ப ஞானம். எல்லாம் தெரிஞ்சவருப்பா. இந்த ஊருக்கு வந்ததும், என்னைய பாத்தார். இந்த கட்டையை அந்த கட்டைக்கு பிடிச்சு போச்சி. அவர்தான் சொன்னார். நீ உதவி தேடி போக வேணாம். உதவி உன்ன தேடி வரும்னு".
"என்ன கட்டையின்னெல்லாம் பேசுற?"
"எல்லாம் அவர் சொல்லிக்கொடுத்ததுதாம்பா"

வீட்டுக்குள், அவன் அம்மா அஞ்சனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். "ஏம்மா, இது இப்படி இருக்கு. பாத்தியா, வந்ததும் வராததுமா அவன் ப்ரிட்ஜுக்கு அடி போடரான். நீ சொல்ல மாட்டியா. அவன் எப்பவோ கூட படிச்சான். அதுக்காவ. ஆறு மாசம் முன்னாடிதான் 3 ஆயிரத்துக்கு சைக்கிள், 5 ஆயிரத்துக்கு பாட்டில்னு அவனுக்கு அழுதான். இப்ப பாரேன்."
"எனக்கு என்ன செய்யரதுன்னே தெரியல அத்தை" என்றாள் அஞ்சனா. குழந்தைகள் இருவரும் மாடிக்கு ஓடினர். அவர்களை பிடிக்க அவர்களுடன் ஓடினாள் அஞ்சனா. 
"அவனுக்கு புத்தி சொல்லுவான்னு பாத்தா, இவ... என்னத்த பண்ண. நீங்களாச்சும் சொல்லுங்களேன்" அப்பாவிடம் சொன்னார். அவர் வழக்கம் போல்  சிரித்தார். முரளியின் அதே சிரிப்பு.
"சாமியையும் வரச்சொல்ரேம்பா. சாயந்திரம் கோவிலுக்கு வந்துடு. நான் சாப்டுட்டு போய் பூஜை ஏற்பாடெல்லாம் பண்ணிடுறேன்." சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.

சோடா பாலனின் நடையை வைத்தே கண்டுபிடித்துவிட்டார், புளியங்கொட்டை சாமி. "என்ன சோடா. ஆடு வசமா சிக்கிடிச்சி போல." பாலன் சிரித்தான். மனைவியை அழைத்தான். "இந்தா இதுல ரெண்டாயிரம் இருக்கு. இந்த மாசத்துக்கு இதுக்கு மேல என்ன கேக்ககூடாது சொல்லிட்டேன்." அவள் பணத்தை பிடுக்காத குறையாக வாங்கிக்கொண்டாள். "கடன யெல்லாம் எவன் குடுப்பான்?" தோளில் முகம் இடித்து நகர்ந்தாள்.
சாமியின் முகம் வாடியது. "பொம்பள கிட்ட இவ்ளோ பணம் தராத சோடா". என்றார். அவர் கவலை அவருக்கு.
சோடா அதை கண்டுகொள்ளவில்லை.
 "சாமி. முரளிக்கு ஏதோ கஷ்டம் போல. வழக்கமா, நாங்கேட்டா, இல்லன்ன மாட்டான். இந்த தடவ, ஒரே ஒரு பிரிட்ஜ்தான் கேட்டேன். அடுத்தவாட்டி வரப்ப தரேன்னிட்டான். பூஜைக்கின்னு, செலவுக்கே இல்லன்னும் சொன்ன பின்னாடி, நாலாயிரம் தந்தான்.என்னமோ அவன் கஷ்டமா இருக்கறது, பேஜாரா இருக்கு"
"தா. என்னா சொற நீ.." சாமி குரலை உயர்த்தினார். நாலாயிரத்துல ரெண்டாயிரம் போனா மீதி ரெண்டாயிரம் இருக்கில்லா, என்ற தெம்பு. "கார்ல வரான். அவனுக்கு கஷ்டமா? அவனுக்கு கஷ்டம்னாதான்யா நமக்கு பொழப்பு. நீ என்னா பண்ணு, என்கிட்ட கூட்டியா. ஆமா நா குறி சொல்லுவேன்னு சொன்னியா?"
"இல்ல சாமி."
"முட்டா கூ...டா நீ. அத்த இலல மொதல்ல சொல்லி இருக்கணும். அவரு சம்சாரம் வந்திருக்கா?"
"வந்திருக்கு சாமி. ஆனா அது சின்ன கொழந்த மாதிரி. சொன்னா புரியாது."
"புரிய கூடாதுடா மடையா. என்னா பண்ணுவியோ. சாயங்காலம் கோவிலுக்கு வரச்சொல்ல என்ன பத்தி சொல்லு. 
மெட்றாஸ் ராமு செட்டியார் எப்படி என்னால மேல வந்தார்னு சொல்லு..."
"அது யார் சாமி" என்றான் சோடா.
"லூஸு... இதையெல்லாம் விலாவரியா சொல்லனுமாடா?"
"புரிஞ்சிடிச்சி சாமி."   
கோவில் போகும் வழியில் சாமி எப்படி ராமு செட்டியாருக்காக பூஜை போட்டு கிடா வெட்டினார். அதுக்கு அப்புறம் ராமு செட்டியார் எத்தனை பங்களா வாங்கினார் என விலாவரியாக சொன்னான் சோடா. அஞ்சனா ஆச்சரியமாக கேட்டுக்கொண்டு வந்தாள். பூஜை முடிந்ததும், முரளி சாருக்கு பவ்வியமாக வணக்கம் சொன்னார் சாமி. அவர் கையை பிடித்து உரிமையாக இழுத்து மண்டபத்தில் உட்கார வைத்தார். வெத்தில ஏன் காஞ்சிபோய் இருக்கு போய் புதுசா வாங்கியாடா என சோடாவை விரட்டினார். புதுசா தண்ணி கொண்டாடா என்று கோவில் பூசாரியை விரட்டினார். அவர் முணகிக்கொண்டே நகர்ந்தார். 
சோடா பாலன் வந்தவுடன், கை நிறைய விபூதியை அள்ளி முரளியின் நெற்றியில் பூசினார். உடுக்கையை அடித்து, உறுமிக்கொண்டு பேசினார். "உன்ன சுத்தி இருக்கிறவன்ல ஒருத்தன் உன்னய ஏமாத்துறான். உடாதே. எத்த பண்ணாலும், தெகிறியமா பண்ணு. உனக்கு நிச்சயமா வெற்றிதான். அடுத்த வாரம் வந்து எனக்கு கெடா வெட்டி ஒரு பூஜைய போட்டுடு", என்று சொல்லி முடித்தார். தவறாமல் ஆயிரம் ரூபாய் தட்சிணை கேட்டு வாங்கிக்கொண்டார்.

ராத்திரி ரெண்டாவது நூறு மில்லிக்கு பிறகு, கோழி வறுவல் சுவைத்தபடி, ஆடு அடுத்த வாரம் கண்டிப்பா வருண்டா சோடா என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருந்தார் சாமி.

திங்கள் காலை திரும்ப வரும்போது, அம்மா அப்பாவையும் தன்னுடன் அழைத்து வந்து கொண்டிருந்தார்முரளி.
"ஏங்க, பூஜை பண்ணனுமாங்க", என்றாள் அஞ்சனா.
"இவன் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டியிருக்கு. ஏமாந்தவன்னு. இத அவன் சொல்லிட்டானாம் அதுக்கு பூஜ வேறையா." என்றார் அம்மா.
வீட்டினுள் வரும்போது, டெலிபோன் அடித்துக்கொண்டிருந்தது. பேசியபின், முரளிசாரின் முகத்தில் ஆயிரம் சூரிய வெளிச்சம். அவரின் அமெரிக்க வேலையை உறுதியானதை அன்று முழுக்க கொண்டாடினார்கள். அவரின் கனவுகளுக்கு விடியல் வந்தது. ஆனால் அதனுடன் பலருக்கு நிம்மதியான வாழ்வு பறிபோனது. 

18 வருடத்திற்கு பின்... இதை சொல்லாவிட்டால் முழுமை இருக்காது.
பார்ட்னரின் பிசினஸ், முரளிசார் இல்லாமல் தடம் அழிந்தது. அவருக்கு அடிக்கடி நினைவில் வரும் கதை, பொன் முட்டையிடும் வாத்து கதை.
எழுத்தாளர் இப்போது இன்னும் திறமையாக பிசினஸ் ஐடியாக்களை தருகிறார். ஆனால் முரளியை போல் ஒருத்தர் இன்னும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினை.
ஊருக்கு போரதுக்கு முன்னாடி பூஜை போட்டுடனுங்க. இது சாமி இப்போதும் பலரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். என்ன செய்ய சிலர் மட்டும்தான் கேட்கிறார்கள்.
பிரிட்ஜ் வாங்க கொடுத்த பணத்துல குடிச்சே. இப்போ நாங்களா கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கோம், அந்த சாமிகூடவே இருந்து சாவு, வீட்டு வாசல மிதிச்சே கொன்னுடுவேன். இது, பாலனின் குடும்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக