பாலியல் வன்முறைகள் -
கடுமையான சட்டங்கள் தீர்வாகுமா?
நிச்சயம் ஆகாது. இப்போது இருக்கும் சட்டங்களே போதுமானது.இதன் அடிப்படை காரணம் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் தில்லியில் கைதானவன் சொல்கிறான் - அந்த பெண்ணுக்கு பாடம் புகட்ட பண்ணினேன் என்று. நமது கலாசார காவலர்கள் கேட்கிறார்கள் - அந்த பெண் 9 மணிக்கு ஏன் வெளியே போனாள் என்று. தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும், சாதி சங்கம் நடத்திய பேர்வழிகள் தன் இனப்பெண்களை அறிவிலிகள் அதனால் காதலில் விழுகிறார்கள் என்கிறார்கள்.
இது அத்தனையிலும் ஒரு அடிப்படை உண்மை இருக்கிறது - அது ஆண் ஆதிக்க திமிர்த்தனம். அது.. பெண் என்பவள் ஆணை அண்டி அடங்கி இருக்கவேண்டும் அல்லது பெண்ணுக்கு சுயபுத்தி கிடையாது என ஆழ் மனதில் பொதிந்து கிடக்கிறது. எந்த பெண்ணும் உடன் படிப்பவனுடன் அல்லது தோழனுடன் வெளியில் போக கூடாது. ஏனெனில் அவள் பெண். அதுவும் இரவில்.. என்ன ஒரு திமிர் இருக்கவேண்டும் அவளுக்கு. இதுதான் அவர்கள் நிலை. பெண் என்பவள் ஆணுக்கு சமமான ஜீவன். அவளால் இவர்கள் செய்வதையும் செய்ய முடியும் அதற்கு மேலும் முடியும். அதை இவர்கள் நினைப்பதே இல்லை. ஆனால் - அம்மாவுக்கும் அன்னைக்கும் பயந்து சாவார்கள். எந்த அன்னை அம்மா தெரிகிறதா?
மதுதான் அதன் காரணம் என இன்னொரு அறிவுஜீவி காரணம் சொல்லி நடக்க் க் கிறார்.
ஞான ஒளியே - எத்தனை பேர் மது குடிக்கிறார்கள் எத்தனை கற்பழிப்புகள் நடந்து இருக்கின்றன இதுபோல்?
ஆணுக்கு பெண் இங்கு இளைப்பில்லை காண் என்று சொன்ன பாரதி வாழ்ந்த நாடு இது. அது சரி.. பெண் பித்தர்களை பெண் பற்றி பேச அழைக்கும் அதி புத்திசாலி பத்திரிகைகள் இருக்கின்றன இங்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
இந்த ஆணாதிக்க குணம் அடிப்படை கல்வியில் இருந்து களையப்பட வேண்டும். 50, 60 களில் அமெரிக்காவில் இருந்த நிற வெறி இன்று துடைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படை காரணம் கற்க தொடங்கியதிலிருந்து எல்லா மனிதர்களும் சமம் என போதிக்க படுகிறது. அந்நிலை போன்று ஆணும் பெண்ணும் சமம் என்பது சிறு வயதில் இருந்து போதிக்கப்பட வேண்டும். அதுபோல் ஜாதீ (தீ) பற்றியும் போதிக்கப்படவேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறையாவது பிழைக்கும்.