இதுதாண்டா தீர்ப்பு.
உச்ச நீதி மன்றம் அளித்துள்ள வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. ஜெ, சோ போன்றோரின்.. தான் நினைத்ததே சரி.. என்ற வர்க்க அகம்பாவத்திற்கு சாட்டை அடி.
இதில் மிகவும் பாதித்த விஷயங்கள் என்ன தெரியுமா?
முதலாக குழந்தைகளின் இரண்டு மாத படிப்பினை வீணடித்த பெரிய தவறு.
சில அறிவாளிகளின் அபத்தமான பேச்சுக்கள். ஒருவர் சொல்கிறார்.. கிராமப்புற மாணவர்களால் இதை படிக்க முடியாது என்று. அத்தனை கேவலமா? இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் கிராமத்தில் படித்தவர்கள்தான். நான் உள்பட. சென்ற முறை இந்தியா வந்தபோது என்னுடன் பயணித்த நியுக்ளியர் விஞ்ஞானி திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராம பள்ளியில் படித்தவர்தான். முன்பிருந்த மனப்பாடம் செய்யும் பாட திட்டம்தான் கிராம மாணவர்கள் மட்டும் அல்லாது, படித்த பெற்றோரை உடைய நகர மாணவர்களுக்கும் சிரமம். புதிய பாட திட்டம் நிஜமாகவே அருமையாக வடிவமைக்க பட்டிருக்கிறது.முதலில் அவற்றை நான் இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்த்த பொது அசந்து போய்விட்டேன். அமெரிக்க பாட நூல்களைப்போன்று இருந்தது. ஆசிரியர்களுக்கும் குறிப்புகள். செயல் முறை விளக்கங்கள். இதை அமெரிக்கா வரும்வரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. நம் நாட்டில் இப்படி வராதா என் ஒரு ஏக்கம் நிச்சயம் வந்தது.இப்போது அது நிறைவேறி இருக்கிறது.இதை கேவலப்படுத்த இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? நான் நினைக்கிறேன்.. இப்படி இதற்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது புது பாடத்திட்டத்தை படிக்காமலே ஜெ சொன்னால் சரி சோ சொன்னால் சரி என் எண்ணுபவர்களாக இருக்க வேண்டும் அல்லது பழைய திட்டத்தில் பயன் அடைபவராக மெட்ரிக் பள்ளி நடத்துபவராக அல்லது அவர்களிடம் பயன் அடைபவராக இருக்க வேண்டும். அல்லது, அவர்களிடம் கையுட்டு பெற்ற அரசியல் வாதியாக இருக்க வேண்டும். அல்லது, வினவு சொல்வதுபோல் வர்ண வெறி பிடித்தவராக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது அனைத்து பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி முதல், அறிவியல் கூட வசதி வரை தந்து, படிப்பை இலவசமாக்கி ஊக்குவிக்க போட்டிகளும் பரிசுகளும் தரவேண்டும்.
ஏற்கனவே இந்தியாவில் கழிப்பறைகளைவிட செல்போன்கள் அதிகம் என்று ... கிண்டலடிக்கிறார்கள் உலகம் முழுதும். நீங்கள் லேப்டாப் தருவது இருக்கட்டும் அதற்குமுன் சுகாதார வசதியும் செயல்முறை விளக்கத்துக்கு அறிவியல் கூடங்களும் தாருங்கள். ஆசிரியர்கள் தாருங்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி தாருங்கள்.
தனியார் பள்ளி முதலைகளிடமிருந்து வாங்கிய கையூட்டையும் திருப்பி தாருங்கள்.