சமச்சீர் கல்வி - சமச்சீர் சொதப்பல்
தமிழ் நாட்டோட தேசிய குணம் என்று ஒன்று இருக்கிறது. எதை அவர்கள் வாழ்வில் உயர்வாக பேணுவதாக பீற்றிக் கொள்வார்களோ அதை எத்தனை (...னும்) தாழ்வாக கேவலப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். சைவ வைணவ விரோத மனப்பாங்கு அதிகம் இருந்த அன்றைய நாட்களில் நடந்ததாக எனது தமிழ் ஆசிரியர் சொன்ன கதை - தசாவதாரம் பார்த்த போது ஞாபகம் வந்தது. ஒரு சிவ பக்தர் அவரின் வைணவ நண்பர் வீட்டுக்கு வருகிறார். அப்போது அந்த வைணவரின் சிறு குழந்தை அவர்களின் அருகில் மலம் கழித்துவிடுகிறது. அவர் மனைவியை அழைக்கிறார். அவரிடம், "அந்த சிவத்தை போட்டு மலத்தை துடை" என்கிறார். சிவம் என்றால் துணி என்ற அர்த்தமும் உண்டாம்.அதற்கு சிவ பக்தர் சொல்கிறார், "வராக மூர்த்தியை அழைத்தால் விருந்து படைத்தால் போல் ஆகுமே" என்று. ஆக ஹரியும் சிவனும் ஒன்று என்றவர்களும் இவர்கள்தான். இருவரையும் கேவலமாக பேசியவர்களும் இவர்கள்தான்.
கற்பு என்றால் துள்ளி குதித்து - அது தமிழர்களின் சொத்து என்பவர்களிடம் கேட்க கூடாத கேள்வி - எதற்கு வம்பு. விட்டு விடுவோம். தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.
"குழந்தையும் தெய்வமும் ... " - அந்த குழந்தைங்க படும் பாடு ஒவ்வொரு முறை நான் தமிழ்நாடு வரும்போதும் எனக்கு கண்ணீர் வரவழைக்கும். நான் ஆனந்தமாக துள்ளித்திரிந்த நாட்கள் மனதில் அழுத்தும். புத்திசாலி குழந்தைகளும், அடித்தட்டு வர்க்க குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அல்லது பாதிக்கப் படுவதே இல்லை. கொல்லப்படுவதெல்லாம்.. நடுத்தர வர்க்க குழந்தைகள்... அதில் பெற்றோர் நினைக்கும் அளவு முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் நினைத்த மார்க் இல்லை என்றால்.. அந்த குழந்தை அதோ கதிதான்.
எனது உறவினர் ஒருவர் குழந்தை.. ஒன்பதாம் வகுப்பு. அவனை ஒரு ரூமில் அமரவைத்து, அவன் தாய் அறை வாசலில் படுத்துவிடுவாள். அவன் முகத்தில் சந்தோஷ ரேகை மறைந்தே விட்டது. அவன் இப்போது பத்தாம் வகுப்பில். இப்போது அவன் தாய் என்ன பாடு படுவாள் என நினைக்க.. உம்... ஒரு பக்கம் இனித்தாலும், எத்தனை வேதனை. சரியான பாட திட்டம் இதுவரை இல்லை. ஏதோ ஒன்று.. சொற்ப சொதப்பல்களுடன் வந்ததே என மகிழ்ச்சி அரும்பும் முன்னர்.. கருக்கலைப்பு செய்து விட்டார்கள். கருக்கலைப்புதான் தவறே இல்லையே. ஏன் அது தவறு என்ற எண்ணம்கூட இல்லையே.. இந்த பாழாய் போன நாட்டில்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. தனியார் பள்ளிகளின் கொள்ளை கொள்கை எல்லோருக்கும் புரிகிறது. இதை எல்லாம் அலசி ஆராய்ந்து தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்து இருக்கிறார்கள் மக்கள். ஆனால் அது நிச்சயமாக நசுக்கப்படும் - அதுவும் தெரியும்.
அதனால் இதற்கு உண்மையான - தனியாரும், அரசும் ஏற்றுக்கொள்ளும் தீர்வாக இருக்கக்கூடியது அவள் விகடனில் திரு நடராஜன் கூறியுள்ளது. அமேரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், நடைமுறையில் இருப்பது.அது கீழே.
'ஆயிஷா’ நடராசன் கூறுகையில்,
''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக்கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ.... தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார் யதார்த்தமாக!
சமச்சீர் கல்வி, வியாபாரம், தமிழ் நாட்டு அரசு, கல்வி