Pages

வியாழன், 7 மே, 2009

கெளதம் கிட்ட கேக்கணும் (எல்லாம் தெரிந்தவர்களுக்காக அல்ல)

வந்ததில் இருந்து பஸ் ஏறி - போற வரைக்கும் கண்ணஎடுக்க மாட்டேங்கிறான். ஒரு வாரமா இருக்கிற ஏகப்பட்ட தொல்லையில இது வேற. கெளதம் கிட்டதான் கேக்கணும். ஆபீசுக்கு வெளியில் உள்ள பெட்டி கடைக்காரன திட்டிகிட்டே வந்தேன்.
"ஹாய் நிவி", அப்பா ராபர்ட் வந்து சேந்தான்.
"ஹாய்"
"என்ன கோவமா இருக்க?".
"ஒரு வாரமா மூடே சரியில்லை ராப்"
"புது மேனேஜர் கடிக்கிறானா?"
"அதை ஏன்கேக்கிற? பத்து வேலை சொல்றான். எட்டாவது வேலை பண்ணிகிட்டிருக்கபோ அவசரமா பத்தாவது வேலை முடிச்சியா இல்லையான்னு கேக்கிறான்."
" ஊம்னு ஒரு வார்த்தை சொல்லு ஒரே தட்டு. மகனோட தங்கப்பல்ல கொண்டாந்துடறேன்." "உன்கிட்ட சொன்னேனே கெளதம் கிட்ட கேக்கணும்".
"அவரைப் பாக்கவா போறே? நானும் பாக்கணும்" ஆட்டோவ நிறுத்தினான்.
"அம்மா எப்படி இருக்கிறாங்க?"
"இருக்காங்க. அக்கா எது பண்ணாலும் சரி. நான் பண்ணா தப்பு. எரிச்சலா வருது ராப்" .
" நான் வேணா அம்மாகிட்ட பேசவா?"
"வேணாம் சாமி. நீ போனதடவ பேசினதுல இருந்துதான் தொல்லையே ஜாஸ்தியாச்சு. கெளதம் கிட்ட கேக்கணும்."
"என்ன பத்தியே கேட்டுகிட்டிருக்கே உன்னோட வேலை எப்படி போய்கிட்டிருக்கு?"
"என்னமோ தெரியலை நிவி. எத பண்ணாலும் தப்பாவே போகுது. ஒரு marketing project கூட சக்சஸ் ஆகல. அதான் கெளதம் கிட்ட பேசலாம்னு" .
"சரியா போச்சி நீயும் என்ன மாதிரி புலம்பல்தானா?"கெளதம் வீட்டு வாசலிலேயே ஒரு குளிர்ச்சி.
" ஹாய் - வாங்க வாங்க" கெளதம் சொல்லறதே இனிமை.
"எப்படி இருக்கீங்க?" "என்னத்த சொல்ல. அழுதுட்டு போலாம்னு வந்தேன் கெளதம். இந்த புது மேனேஜர் ஒரே தொல்லை"
"Oh. let us talk. மொதல்ல இந்த ஜூஸை குடிங்க." கெளதம் கிட்ட பிடிச்சதே இந்த அமைதிதான். எதுக்கும் உணர்ச்சி வசப்படாம மெதுவா காது கொடுத்து கேக்கிற குளுமை.கொஞ்ச நேரம் சினிமா பேசினோம்.
"OK - இப்ப சொல்லு." எல்லாத்தையும் கொட்டினேன். பொறுமையா கேட்டார். அவர் ஒரு வார்த்தை சொல்லறதுக்கு முன்னாடியே ஏதோ மனசு லேசான மாதிரி இருந்தது. ஒரு வேளை - யாரும் நான் பேசறத கேக்காததுதான் என் பிரச்சனையோ?
"நிவி நீ சொல்றதுல இருந்து என்ன புரியுதுனா - நீ செஞ்ச வேலையில அவர் தப்பு சொல்லல சரியா?"
" சரி. ஆனா நான் செய்யாத வேலைய ஏன் செய்யலைன்னு கேக்கிறப்போ - என்னமோ நான் வேலை செய்யாம OB அடிச்சிண்டிருக்க மாதிரி ஒரு தொனி இருக்கே."
"இப்படி பாரேன். உனக்கு 20 வேலை இருக்குன்னு வச்சிக்க. இந்த வாரத்துல நீ முடிக்கணும்னு நினைச்சிருக்க. சரியா?"
"சரி"
"எத முதல்ல செய்வே எத அடுத்து செய்வே?"
"இது என்ன கேள்வி? ஈஸியா இருக்கறதா முதல்ல முடிச்சுட்டு அடுத்து எடுத்துன்னு பாப்பேன்." "எது அவசியம்னு பாக்க மாட்டியா?"
"எனக்கு அவசியம்னு தெரிஞ்சா உடனே பண்ணிடுவேன். எல்லாத்த பத்தியும் எனக்கு எப்படி தெரியும்"
"அப்படின்னா ஒன்னு செய். எப்போல்லாம் உனக்கு எது அவசியம்னு தெரியலையோ அப்போல்லாம் மேனேஜர் கிட்ட போ. இருக்கிற வேலைகள்ல எத முதல்ல பண்ணனும் எத அடுத்து பண்ணனும்னு கேட்டுக்க. அப்போ பிரச்சினை இருக்காதில்ல?"
"இது அவர தொல்லை பண்ற மாதிரி இல்ல?"
"நிச்சயமா இல்ல. இப்போ நீ பண்றதுதான் தொல்லை. Try பண்ணிப்பாறேன்."
"புரியுது கெளதம்"
"prioritization பத்தி சொல்றே. சரியா?" என்றான் ராப்.
"கரெக்ட். அது தெரியல்லன்னா கேட்டுக்கிறது தப்பில்ல" "அப்புறம் உன் வேலையெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு ராப் ?"
"இந்த ஆறு மாசமா ஒரு ப்ராஜெக்ட் கூட சக்சஸ் ஆகல கெளதம். எங்க தப்பு பண்றேன்னே தெரியல. "
"ஆனா ரொம்ப பிசியாதான இருக்க"
"ஆமாம். நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா கை நழுவி போயிடுது"
"நீ சரியா திட்டமிடலன்னு நினைக்கிறேன்."
"நல்லா யோசிக்கிறேன் கெளதம். " "செயல்படுத்தும்போது - சரியா செய்யறேன்னு நினைக்கிறாயா?"
"இப்பதான் அதை யோசிக்கிறேன்"
"இனி இப்படி பண்ணு" "உன்னோட மார்கெடிங் மீட்டிங் முன்னாடி ஒரு பேப்பர் எடு. அதுல பெரிசா ஒரு "T" போட்டுக்க. அந்த "T" க்கு மேல யாரை பாக்க போறே எப்போ ஏன் - முக்கியமா என்ன எதிர்பார்க்கிற - இரண்டாவதா என்ன எதிர்பார்க்கிறன்னு எழுத்து."T" யோட இடது பக்கத்துல உன்னூட எல்லா சிந்தனைகளையும் எழுதிக்க. அதாவது இந்த நெடுக்கு கோட்டுக்கு இடது பக்கம். வலைப்பக்கத்துல அந்த யோசனைகள முக்கியத்துவத்துக்கு ஏத்த மாதிரி வகைப்படுத்து. பிறகு மீட்டிங் போ. முடிந்த பின்னாடி - அடுத்து என்ன செய்யனும்னு கீழ எழுதிக்க. உன்னோட டைரியிலயோ கணினியிலயோ போட்டு வச்சி தொடர் வேலை செய்." இந்த இடத்துல கெளதம் படம் வரைஞ்சி அழகா விளக்கினார்.
"கெளதம் - இத நான் கூட செய்யலாம்னு இருக்கேன்"
"செய் நிவி. நிச்சயமா உதவும்"
ராப் "வாவ்" என்று மட்டும் சொன்னான். ஆனால் ஏதோ சிந்தனையிலேயே இருந்தான்.
"என்ன ராப் - என்ன யோசனை பண்ற?"
" இந்த மாதிரி நான் முயற்சி பண்ணலைதான். ஆனா என் பிரச்சினை வேற மாதிரியோன்னு தோணுது. இன்னிக்கி நான் பாத்த அதிகாரி 2:50 க்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்தான். உள்ள போனதும் உங்களுக்கு 10 நிமிடம் தரேன் அதுக்குள்ளே முடிச்சிக்குங்க என்றான்.ஆனா நான் எனது ப்ரீப் கேஸ் எடுத்து கேட்லாக் எடுக்குறதுக்கு முன்னாடியே அவனோட பொண்ணு செஸ் விளையாடறது பத்தியும் அவளோட டென்னிஸ் திறமை பத்தியும் கணக்குல அவ புலியா சிங்கமா தெரியலைன்னும் கத சொல்ல ஆரம்பிச்சுட்டான். அவன் கதைய முடிக்கும்போது மணி 3:15. நான் என்னதான் நீ சொன்ன "T" போட்டு போனாலும் டீ குடிச்சிட்டு போனாலும் இவன மாதிரி ஆளுங்ககிட்ட வேலைக்கி ஆகும்னு நினைக்கிற? எனக்கு கிடைக்கிற ஆளுங்க - உம் என்னத்த சொல்ல."
"இது ஒரு அருமையான வாய்ப்பு ராபர்ட். டேல் கார்நிகி படிச்சிருக்கியா?"
"இல்ல கெளதம்"
"போகும்போது நினைவுபடுத்து. தரேன். நீ முதல்ல ஒரு Channel அதாவது அவர் மனசுக்குள்ள போறதுக்கு வழி உருவாக்கிக்க. அப்புறம் பிசினஸ் தானா நடக்கும். நீ பேசினாதான் வேலை நடக்கும்னு இல்ல. அடுத்தவுங்கள பேசவிட்டு கவனித்தாலும் நடக்கும் - நான் இங்க கேட்டாலும் என்ற வார்த்தை உபயோகப்படுத்தல. கவனிக்கணும். Improve your Listening skills. அடுத்த தடவை போகும்போது அவர் மகளைப் பத்தி நீ முதல்ல கேளு. முடிஞ்சா ஒரு விநோதமான கவர்ச்சியான செஸ் போர்டு வாங்கிப்போ. T ய மறந்திடாத."
"கெளதம் நீ எனக்கு மேனேஜரா இருந்திருக்கணும்." ராபர்ட் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. நான்தான் குழம்பினேன்.
"கெளதம் பேசினா பரவாயில்லை. நீ சொல்லற மாதிரி வேலைக்காகும். என்னோட சிடுமூஞ்சி மேனேஜர் இருக்கானே - ஒரு கொட்டேஷன் தயார் பண்ணனும்னா நான் இருபது கோப்புகளை பாக்கணும். மொத்தமா ஒரு நாலு மணி நேரமாவது வேணும். ஆனா அரை மணி நேரத்துல கேபின விட்டு மூச்சி இறைக்க ஓடி வருவான். என்னாச்சு பண்ணிட்டியான்னு. மானம் போவும் தெரியுமா?"கெளதம் புன்னகைத்தார். அது குழந்தை தனது ஷூவை மாற்றி போடும்போது தாய் சிந்தும் புன்னகை போல இருந்தது. நிச்சயமாக ஏளனம் இல்லை.
"உன்னோட மேனேஜருக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கும்? ஐ மீன் மேனேஜராக? எத்தனை இடத்தில் மேனேஜராக வேலை பார்த்திருப்பார்?"
"அவர் வயசு 50 க்கு கிட்ட இருக்கும். மேனேஜராக இது ஐந்தாவது இடம். சீனியர் மேனேஜராக வந்திருக்கிறார்."
"அப்படி இருக்கும்போது - அவரது எதிர்பார்ப்பு அதாவது அரை மணியில் ஒரு கொட்டேஷன் - சரின்னு நான் நினைக்கிறேன். நீ பண்றதுதான் சரியான வழின்னு நீயா ஒரு முடிவுல இருக்க. நாளைக்கு அவர்கிட்ட பேசு. முரளி நீங்க அரை மணி நேரத்துல எப்பவும் கொட்டேஷன் எதிர்பார்க்கிறீங்க ஆனா எனக்கு நாலு மணி நேரம் ஆகுது. நான் எப்படி நீங்க எதிர்பார்க்குற மாதிரி அரை மணியில பண்ணறதுன்னு எனக்கு வழிகாட்டுங்க - Guide me please - அப்படீன்னு கேளு. நிச்சயம் வழி கிடைக்கும். யாராவது அவருக்கு அரை மணி நேரத்துல பண்ணி தந்து இருக்கலேனா அவர் எதிர்பார்க்க மாட்டாரு."
"நிச்சயமா முடியாது கெளதம்." எனக்கு மூக்கிற்கு மேல் கோபம் கொப்பளித்தது.
"நீ கணினியிலதானே கொட்டேஷன் தயார் பண்றே?"
"ஆமாம்"
"நீ சொன்ன இருபது கோப்புகளும் கணினியில இருக்குதானே?"
"அது இல்ல. கோப்புகள் தனி பைலில்தான் - அதாவது பேப்பரில்தான்" சொல்லும்போதே எனக்கு ஏதோ பொறி தட்டியது. ஆமாம் இது எல்லாத்தையும் எக்ஸ்செல்ல போட்டா அஞ்சே நிமிஷத்துல பண்ணிடலாம் இல்ல? எனது நிலமைய நினைச்சி நானே சிரிச்சுகிட்டேன்.
"நிவி என்ன சிரிக்கிற?"
"இல்ல கெளதம் - இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேணாம். நான் பாத்துக்கிறேன்."
"அம்மா எப்படி இருக்காங்க நிவி"
"ஒ - நல்ல இருக்காங்க" சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டேன். ராப் சிரித்தான். கெளதம் பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக நானே ஆரம்பித்தேன்.
"இல்ல கெளதம். ராப் கிட்ட அம்மாவை பத்தி குறை சொல்லிண்டு வந்தேன். அதான் சிரிக்கிறான்"
அப்போ கெளதம் கிட்ட வேலை பார்க்கிற முத்து பதட்டமாக பைக்கை நிறுத்திவிட்டு ஓடிவந்தான். "சார் இ 4 ல ஒரு விபத்து சார். நம்ம ஜெர்மன் மெஷின் லாக் ஆயிடிச்சி சார். மாணிக்கம் கைல அடி சார்"இது ஒரு பதட்டமான தருணம். அமைதியா பிரார்த்தனை பண்ற சர்ச்சுல அரைகுறை உடையோட ஒரு பொண்ணு திடீர்னு நடுவுல ஒய்யாரமா வரும்போது எல்லோரும் பாதிரியாரை கவனிக்கிற மாதிரி நானும் ராபர்ட்டும் கெளதம் மேல கண் பதிச்சோம்.கெளதம் நிதானமா எழுந்தார். என்ன அடி யாருக்காவது உயிர் ஆபத்தா என விசாரித்தார். மாணிக்கத்தை மருத்துவமனைக்கு அழைத்து போகவும் இயந்திரத்தை நிறுத்தவும் ஒரு பணியாளரை அழைத்து நாளைய ஷிப்மெண்ட் 8 மணி தாமதாகும் என்றும் தனித்தனியாக உத்தரவுகள் தந்தார். முத்துவிடம் பதட்டபடவேண்டாம் எனவும் தான் 10 நிமிடத்தில் அங்கு இருப்பதாகவும் சொன்னார். முத்துவின் பதட்டம் காணாமல் போனது. அவனும்தான்.
நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். ஞாபகமாக டேல் கார்நிகி புத்தகத்தை - ராப் கேட்கவில்லை - கொடுத்தார்.அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியேறும் போது - நிச்சயம் அடுத்த வாரம் பார்க்கலாம் என சொன்னது மட்டும் காதில் இனித்தது.