Pages

ஞாயிறு, 21 மார்ச், 2010

ழி என்றோருதேசம்

இருக்கிறது. MD என்று எல்லோராலும் அன்புடன் (!!!???) அழைக்கப்படும் எம். தர்மா சர்வாதிகாரியாக கோலோச்சும் தேசம். அன்று அவனுக்கு அதிர்ச்சி. அவன் தேசத்தில் அரசிடம் இல்லாத 8G தொழில் நுட்பத்துடன் புரட்சி வர இருக்கிறதாம். உளவுத்துறையின் செய்தி இது. MD ஐ உலுக்கி எடுக்கிறது. அந்த தொழில் நுட்பத்தில் அனுப்பப்படும் செய்திகள் உளவுத்துறையால் தொடக்கூட முடியவில்லை. உளவுத்துறை தலைவன் நிஜமாகவே ஆடிப்போய் இருந்தான். யாழினி என்ற பெண்தான் இந்த புரட்சிக்காரர்களுக்கு தலைவி என்றும், அவள் கையில் இருக்கும் நூதன தொலைபேசி அளவிலான கம்ப்யூட்டர் சகல சக்தி வாய்ந்தது என்றும் - அவள் அதில் பிறப்பிக்கும் ஆணைகளை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் தயாராக இருப்பதாவும் MD இடம் சொன்னான்.அவன் தேசத்தில் உழைப்பாளிகள் வெறும் பொம்மைகள்தான் - சரியல்ல - ரோபோக்கள்தான். இந்த காலத்தை போல பல தலைவர்கள் இல்லை. ஒரு சிறு குழு அதிகார வர்க்கம். மற்றவர்கள் சொன்னதை செய்யும் வேலைக்காரர்கள். பிரான்சு தேச புரட்சியின்போது மூன்று எஸ்டேட்டுகள் - மக்கட்பிரிவுகள் இருந்ததாக படித்திருப்பீர்கள். அவர்கள் செல்வந்தர்களான ஆளும் வர்க்கம், மத ஆச்சாரியர்கள் மற்றும் 98 சத சாதாரண மக்கள். ஆனால் இங்கு 2 சத பண முதலைகள் 98 சத சாதாக்கள். இந்த புரட்சி முயற்சியை முறியடிக்க வேண்டும் என முடிவு செய்தான். தனது உயர் மட்ட குழுவை கூட்டினான். தொழில் நுட்ப அதிகாரி அழகு எங்கே என்றான். அவனை இரண்டு நாட்களாக காணவில்லை என உளவுத்துறை செயலர் சொன்னது எங்கோ தவறு நடப்பதை உணர்த்தியது. குழுவில் எத்தனை பேர் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் - என்பது அவன் கேள்வியானது. இந்த புரட்சி மட்டும் வந்துவிட்டால் - அவன் நிலை அழிந்துவிடும். அவன் அந்த குழு கூட்டத்தை முடிக்கும் முன் கொஞ்சம் வரலாறு ---------பதிமூன்றாம் நூற்றாண்டில் வளமையாக இருந்த நாடுதான். அதன் பின்னர் முன்னூறு ஆண்டுகளுக்கு குறுநில மன்னர்களின் சண்டையில் சிறிது பொலிவிழந்தது. அடுத்த முன்னூறு ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமான அந்நிய தேச படையெடுப்புகள். ஒரு அந்நிய நாட்டிடம் பின்னர் முழுமையாக அடிமைப்பட்டது. பிறகு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திர போராட்டம் தீவிரமாகி நூற்றாண்டின் மத்தியில் சுதந்திரம் பெற்றது, பின்னர் பல அரசியல் குழுக்கள் உருவாகின. அந்த அரசியலில் இருந்த ஒவ்வொரு குழுவுக்கும் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே குறிக்கோளானது. சுதந்திரம் பெறும்போது இருந்த தியாக மனப்பான்மை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் மறைந்து போனது. அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுக்கு வந்த வழமையான பள்ளி கல்வியறியா சில அரசியல் வாதிகளுக்கு ஏழை மக்களின் மீது அதீத பாசம் இருந்தது. அவர்களுக்கு கல்வியறிவை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் வறுமை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் யோசிக்க வைத்ததை உணர்ந்து, பிள்ளைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கினார்கள்.அடுத்து வந்தவர்கள் அந்த இலவச உணவை சீர் செய்து விரிவாக்கினார்கள். திட்டங்கள் நிறையவே பலன் தந்தன. படிப்பறிவு வளர்ந்தது. அதே நேரத்தில் வளர்ந்த - ஆதரவின்றி வளர்ந்த - தொழில் முன்னேற்றம் - இந்த படித்த இளைஞர்களுக்கு உதவியது. பொருளாதார முன்னேற்றம் இந்த இலவசங்கள் தொடர உதவியது. அதன் பிறகு, 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வினை ஆரம்பமானது. தேவைக்காக இலவசங்கள் என்பது போய் - தேர்தலுக்காக இலவசங்கள் என்று ஆனது. மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு உடை இருப்பிடம். முதலில் உணவில் ஆரம்பித்த இலவசம், அடுத்து உடையில் தொடர்ந்தது. பின்னர் இருப்பிடம். அதுவும் முடிந்து, இலவசத்தின் அடுத்த பரிமாணம் ஆரம்பமானது. அது வசதிகளை வாரி வழங்க தொடங்கியது. அடிப்படை கட்டுமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய அரசு, இலவச டி வி செட்டுகளையும் ரேடியோ கணினி எனவும் தர ஆரம்பித்தது. இதற்கு அடிப்படை காரணம் மக்களின் அறியாமை என்பதை ஆளும் வர்க்கம் அறிந்திருந்தது. இந்த இலவசங்கள் கீழ்த்தட்டு மக்களை அடையும் முன், அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் அதில் வகையான பகுதியை அபகரித்து அனுபவித்தார்கள். இலவசத்தில் திளைத்து உழைப்பை மறந்த ஒரு கூட்டம் உருவானது. அன்றைய பொருளாதார சூழல் அதற்கு ஏதுவாக இருந்தது. நாட்கள் நகர - அடிப்படை கட்டுமான பணிகள் இல்லாததால் தொழில் வளர்ச்சி தேக்கம் உருவானது. அல்லது சூழ்நிலை உருவாக்கியது. அரசே நடத்திய சாராய கடைகளில் வருமானம் குறைந்தது. குடிக்க விருப்பம் இல்லாமல் இல்லை - அதற்கு ஏற்ற வருமானம் இல்லாததால். ஆனால் அடுத்து வந்த அரசுகள் இலவசத்தை தொடரவும் புது இலவசம் அறிவிக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அரசின் கடன் சுமை தாங்க முடியாததாக இருந்தது. திறமையான அதிகாரிகள் அரசு வேலையை விடுத்து - தனியார் வேலைக்கும் அடுத்த நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள். இலவசத்தில் திளைத்தவ்ர்களுக்கும் - இயந்திரத்தில் பணி செய்வோருக்குமான பொருளாதார இடைவெளி மிக அதிகமானது. ********சரி நமது ழி தேசத்தில் என்னமோ நடக்கிறது. அதை பார்த்துவிட்டு வரலாற்றுக்கு திரும்புவோம். யாழினியின் மின் அறிக்கை அனைத்து பொலிட் பீரோ அங்கத்தினர்களையும் உடனே தலை நகர் வர அழைத்திருந்தது. அவளின் அன்பு காதலன் அழகு உடன் இருந்தான். 3.1.31 இல் மாற்றம் வரவேண்டும். இந்த அரசு இயந்திரத்தை செயல் இழக்க செய்கிறோம். இது பதினைந்து நிமிடங்களில் நடக்க வேண்டும். அனைத்து கம்ப்யுட்டர்களும் செயல் மாறி நமது கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அரசின் வானொலி தொலைகாட்சி அத்தனையும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இராணுவ தலைவர்கள் ஒருமணி நேரத்த்தில் மாற்றப்படுவார்கள். புதிய குடியரசை நாம் அமைக்கிறோம் எனறாள். அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யம் அனைவரையும் ஒரு மந்திரத்தில் கட்டுப்பட்ட நிலையில் வைத்திருந்தது. மக்கள் அனைவரும் ஒருசேர ஆமோதித்தார்கள். அழகு யாழினியை முத்தமிட்டான் - அதை அனுமதித்த யாழினி - அடுத்த நிமிடம் அவனை சிறைப்படுத்த சொன்ன போது - அரங்கம் அதிர்ந்தது. அவளின் காரியதரிசி கார்த்திக் உடனே செயல்பட்டார். வரலாறு அங்கேயே நிற்கிறதே. அதை பார்ப்போம்.*******இருபத்தோராம் நூற்றாண்டின் மூன்றாம் பத்தாண்டுகள் அந்த தேசத்தில் பதற்றமானதாக இருந்தது. புதிதாக வந்த அரசு இலவசங்களை தொடர முடியாது திண்டாடியது. அவை ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டன. அரசு இலவசத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட கும்பல் அது கிடைக்காத போது வேலை தேட தொடங்கியது. கிடைக்காததால் திருடத்தொடங்கியது. உழைக்கும் நடுத்தர வர்க்கம் அடிமட்ட நிலைக்கு போனது. தடி எடுத்தவன் பிழைத்தான். ஒரு பெரிய சிக்கலான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டது. முதலீடாக போடவேண்டிய பணம் பதுக்கப்பட்டது. எதிர்காலம் குறித்த பயம் என்பது போய், நாளை உயிரோடு இருப்போமா என்றே தெரியாத நிலை வந்தது.கலவரங்கள் தொடர்கதையாக, இராணுவம் அழைக்கப்பட்டது. மேஜர் எம். தர்மா இரும்புக் கரம் எடுத்து வலம் வந்தான். கொன்று குவிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2009/10 இல் சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலையை விஞ்சி இருந்தது. அரசு தலைவர்களையும் அவன் கூண்டோடு அழித்தான். கலகக்காரர்கள் மீது பழி போட்டான். அரசை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ஒரு பய சூழல் உருவானது. MD வணங்க வேண்டியவனான். பண முதலைகள் அவன் பக்கம் விழுந்தார்கள் அவர்களையும் அவர்கள் பணத்தையும் காக்க, பெருக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. அனைத்து சொத்துக்களும் ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது. 98 சத சாதாரண மக்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள். உணவுக்காக அதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது சிறு குழுவாக உருவானதுதான் யாழினியின் சுதந்திர படை.******MD யின் உயர்மட்ட குழு அடுத்து நடக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆணைகள் பிறப்பித்தது. அரசு ஊடகங்களில் ஒவ்வொரு நிமிடமும் பயங்கரவாதிகள் பற்றி எச்சரிக்கை வந்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டிருந்த மக்களுக்கு அது வெறி ஊட்டியது. யாழினியின் 8 G தொழில் நுட்ப கை பேசிகள் ரகசியமாக அனைவருக்கும் கிடைத்தது. 3.1.31 அன்று MD யின் பிறந்தநாளை அரசு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது. MD குடிப்பதில்லை போதை மருந்துகள் உபயோகிப்பதில்லை. புகையிலை வஸ்துக்கள் தொட்டதுகூட இல்லை. அவனுக்கு போதை என்பது - பாராட்டாக மட்டும் இருந்தது. எல்லோரும் அவனை தெய்வம் என்று, தலைவன் என்று ரட்சகன் என்று - பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் . அவன் அதை அமர்ந்து ரசிக்க வேண்டும். அவன் காதில் இருக்கும் மைக்ரோ ஹெட் போனில், காரில் இருக்கும் வீடியோ திரையில் - எப்போதும் பழைய புதிய பாராட்டு விழாக்கள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அன்று அதிகாலையில் விழா ஆரம்பம் ஆகி விட்டது. பாராட்ட புதுப்புது வார்த்தைகளை தேடி அலைந்த களைப்பு அத்தனை முகங்களிலும் தெரிந்தது. மதிய விருந்து முடித்து ஒரு சிறு இடைவேளை. MD சிறிது கண் அயர்ந்து எழுந்ததும் அவனை பாராட்டி கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது. நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அந்த மண்டபத்தில். உச்ச கட்ட நடனங்கள் ஆரம்பிக்கும் போது - மது கோப்பைகள் வலம் வந்தன. நடன மாதுக்கள் கூட்டத்தில் வலம் வந்தனர். ஒரு அதி பரவச உலகை மறந்த உற்சாகம் - சூழலை மந்தகாசம் ஆக்கி இருந்தது. அந்த மண்டபத்தின் கதவுகள் எப்போது தாழிடப்பட்டன என்பது எவரும் அறிந்திருக்கவில்லை.*********இரவு பதினோரு மணிக்கு மண்டபத்தி அகண்ட திரை தானாக ஓளி பெற்றது. கார்த்திக் கம்பீரமாக பேசிக்கொண்டிருந்தார். MD யின் பதவி பறிக்கப்பட்டதாகவும் - புதிய குடியரசு யாழினியின் தலைமையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் அவள் இன்னும் சிறிது நேரத்தில் ஊடகங்களில் தோன்றுவாள் என்றும் அறிவித்தார். யாழினி தோன்றியபோது - மது மாது போதைகள் அனைத்தும் சுத்தமாக இறங்கி இருந்தது. குடியரசு அறிவிப்பை அவள் செய்தபோது - உண்மையான கொண்டாட்டங்கள் தொடங்கின. மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும் - நொடியில் திருப்பி அழைக்கவும் திட்டங்களை விவரித்தாள். புதுமை தொழில் நுட்பத்தில் - ஒவ்வொருவரும் அரசை நடத்தும் வழி முறைகளையும் அதற்கான பயிற்சி திட்டங்களையும், அதை ஒவ்வொருவரும் கடை பிடிக்கும் கட்டாயத்தையும் விளக்கினாள்இனி ஒரு முறை அந்த மக்கள் தவறு செய்யமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக