யார் கடவுள்
எனது மகள் பள்ளியில் இருந்து ஆர்வமாக ஓடி வந்து தனது கட்டுரைக்கு A+ கிடைத்ததை காட்டி, அப்பா மிஸ் கான்லி ("Bra burning feminism is not needed, when we have earth saving motherhood") - இந்த கால அமெரிக்க மகளிர்போல் மார் கச்சை எரித்து பெண்ணியம் நிரூபிக்க வேண்டியதில்லை, தாய்மையை எல்லா இடங்களிலும் காண்பிப்போம் - என எழுதியதை மிகவும் சிலாகித்து எல்லோருக்கும் படித்து காட்டினாள் என்றாள். அவள் பாட்டியின் அபூர்வ தாய்மை அவளுக்கு நானா சொல்லித்தரவேண்டும்?1985 எனது கடைசி தம்பியை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சேர்த்து ஆறு மாதம் ஆகி இருந்தது. எனது பெரிய தம்பியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை - மாயூரத்தில் இருந்து நான் சென்னை வந்து கொண்டிருந்தேன். ஏதோ தோன்றியது - கிளம்பிவிட்டேன், முன் அறிவிப்பின்றி. மாலை ஆறு மணியிலிருந்து மூன்று தந்தி அடித்திருக்கிறான் என்னை வர சொல்லி. காலை நான் அங்கு சேர்ந்தபோது, பாண்டியன் எனது பெரிய தம்பி அடக்க முடியாத அழுகையோடு இருந்தான். லிம்போ ப்ளாஸ்டிக் லுகேமியா - இரத்த புற்றுநோய் பற்றி நான் நிறைய தேடித்தேடி படித்தேன் அந்த ஆறு மாதங்களில். நினைத்தாலே இனிக்கும் பல முறை பார்த்திருந்தேன். சர்வேஸ் நிச்சயம் பிழைக்க மாட்டான் என முடிவு செய்திருந்தேன். அதற்கு மனதளவில் என்னை தயார் செய்திருந்தேன். அவன் அப்போது ICU வில் இருப்பதை தாங்க முடியவில்லை. சனியன்று சாதாரணமாக இருந்த வயிறு ஞாயிறு மாலை 72 இன்சு வீங்கி இருந்தது. தங்கை அவள் குடும்பம் வந்து பார்த்து சென்றது. அவள்தான் எல்லா உதவிகளும் செய்து கொண்டிருந்தாள். எங்கள் தந்தை ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிழைச்சுக்குவானா என்று மட்டும் நொடிக்கு நூறுதரம் கேட்டுக்கொண்டிருந்தார்.டாக்டர் மைத்ரேயன் (தற்போது அ தி மு க - MP) - நிலைமையின் தீவிரத்தை என்னை அழைத்து சொன்னபோது திங்கள் காலை 8 மணி. டாக்டர் சாகர் (இப்போதும் அங்கு இருக்கிறார் என நினைக்கிறேன்) - தம்பி கவலை படாதே கடவுள் இருக்கிறான் என்றார். டாக்டர் மைத்ரேயன் - இப்போதே வேண்டுமானாலும் நீங்கள் எடுத்து செல்லலாம் - தாம்பரத்தில் ஐஸ் ஏற்பாடு செய்கிறோம் என்றபோது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு நிமிடம் என்று அனுமதி கேட்டு அப்பாவிடம் போனேன். அவரிடம் இருந்து அழுகை மட்டுமே வந்தது. பாண்டியன் சர்வேசின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தனியனாய் உணர்ந்தேன் - இல்லை அம்மா இருக்கிறார்கள் - அவர்களிடம் சென்று டாக்டர் இப்படி சொல்கிறார் என்றேன். அவன் அருகிலேயே காலம் கழித்த அம்மா சொன்னார்கள் - "அழாதேடா குழந்தை - அவன் சரியாகிவிடுவான். இப்போ எல்லாம் அவனை கூட்டி செல்ல கூடாது. டாக்டர் கிட்ட சொல். இப்பதான் சாந்தா அம்மா வந்தாங்க - அவன் பிரச்சினை சொன்னங்க. ஒண்ணும் பயப்பட வேண்டாம். " அதை வேத வாக்காக எடுத்து கொண்டேன். எனக்கு தாயிற் சிறந்த கோயில் இல்லை.டாக்டர் மைத்ரேயனிடம் சென்றேன். "அவனுக்கு உயிர் தர முடியாவிட்டாலும் அமைதியான சிரமம் அற்ற மரணம் தாருங்கள். அவன் உயிர் பிரியும் வரை இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது" என்றேன். அவர் புன்னைகைத்தார்.பத்து மணி இருக்கும், ஏதோ கான்பெரென்ஸ் இருக்கும்போல் - அனைத்து டாக்டர்களும் மாயமானார்கள். அம்மா மட்டும் சர்வேசிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். மலம் ஜலம் நின்று ரொம்ப நேரம் ஆகி இருந்தது. நர்ஸ் வந்து அதுவெல்லாம் நின்றுவிட்டால் அவ்வளவுதான் என்று பயமுறித்தி சென்றாள். அம்மா அவனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.மூன்று மணி இருக்கும் அவன் 100 மில்லி மூத்திரம் போனான். பேசினான்.நான்கு மணி - சாந்தா அம்மா வந்தார்கள் - சர்வேஸ் எப்படி இருக்கே என்றார்கள் - நல்ல இருக்கேன் டாக்டர் நீங்க எப்படி இருக்கீங்க என்றான். அவன் ஜலம் கழித்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அவனுக்கு ஒரு ஊசி போட்டுவிட்டு வெளியில் சென்றவுடன் - நான் ICU வுக்கு செல்லாமல் அவர்களை பார்த்துகொண்டிருந்தேன். வரவேற்பு அறையில் இருந்த வேங்கடவனுக்கு அவர்கள் நன்றி சொல்லி கை கூப்பி இருந்தார்கள். அம்மா!!!!!அடுத்த இருபது நாட்கள் அவன் ICU வில் இருந்தான். ICU வில் பட்டாசு வெடித்து பார்த்து இருக்கிறீர்களா? தீபாவளி வந்தது. சாந்தா அம்மாவே வாங்கிவந்து தந்தார்கள். சர்வேஸ் மத்தாப்பு கொளுத்தினான் அங்கு. ICU வில்.ஆயிற்று 25 வருடம் - சாந்தா அம்மாவையும் மறக்க முடியாது. மைத்ரேயனையும் சாகரையும் மறக்க முடியாது.ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் - இப்போது 35 வயதில் நலமாக இரண்டு குழந்தைகளோடு இருக்கிறான் சர்வேஸ்.அம்மாவிடம் அன்று கேட்டேன் - அது எப்படி நீ வணங்கும் தெய்வம் மட்டும் உனக்கு பதில் அளிக்கிறது என்று?"புண்ணாக்கு - அன்று எனக்கு தெரிந்ததைத்தான் செய்தேன். சாந்தா அம்மா சொன்னாங்க அவனுக்கு நினைவு தப்பியதும் அழைத்து போங்கள் என்று. நான் அவனிடம் பேசிக்கொண்டு இருந்தேன், நினைவு தப்பாமல் இருக்க. கடவுளை அழைக்க எனக்கு நேரம் எங்கே இருந்தது என்று"நீயே கடவுள் அம்மா உனக்கு எதற்கு இன்னொரு கடவுள்.
யூத்புல் விகடனில் வந்த அனுபவக் கட்டுரை
மகளிர் தின ஸ்பெஷல்
http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/nividitatamil050410.asp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக