Pages

வியாழன், 28 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன். யூத்புல் விகடனில் வந்த கதை

ஆயிரத்தில் ஒருவன்.

யூத்புல் விகடனில் வந்த கதை.

- நிவேதிதா தமிழ்

இப்போது அடுத்த அமெரிக்க ப்ராஜெக்ட்.
மென்பொருள் எழுதுபவன் நான். திறமையான வேலைக்காரன். நிறைய படிப்பவன். குணம்... அவ்வளவு நல்லவன் இல்லை என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். நான்கு பெண்களிடம் பழகி, பின்னர் அவர்களைப் பிடிக்காததால் விலகி இருக்கிறேன். அதற்கு மரபணுவோ அல்லது பின்-நவீனத்துவ எழுத்தாளர்களின் பாதிப்பாகவோ கூட இருக்கலாம்.
அலுவலக ப்ராஜெக்டா? அதை விடுங்கள். எனது சொந்த ப்ராஜெக்ட் ஒன்று இருக்கிறது. ஓர் அமெரிக்க பெண்ணை மணந்து, ஒரு வருடமாவது அவளோடு வாழ வேண்டும். பிடித்திருந்தால் தொடரலாம். அழகான அமெரிக்க பெண் என்பது முக்கியம்.
திட்டங்களை பல கோணங்களில் ப்ரோக்ராம் செய்ததில், விமானப் பயணம் அவ்வளவாக அசதியாக இல்லை. கோடை காலம் என்பதால் சிகாகோ அவ்வளவு குளிரவில்லை. சனிக்கிழமை இரவும், ஞாயிறும் மந்தமாகப் போனது. திங்களன்று காலை லிசாவை சந்தித்தேன்.
எனது இரண்டு வார விதவிதமான கற்பனைக் கன்னிகளைவிட தூக்கலான அழகி. 72 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் ஏற்றம் கண்டிருந்தது, ஸ்கர்ட். கட்டி வெண்ணெய்க் கால்கள். வெள்ளை உடம்புக்கான பூனைக் கண்கள் இல்லை. அழகிய கருவிழி.தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றாள்.
நான் வேண்டிக்கொண்ட 'பருவத மலை புளியாங்கோட்டை சாமியார்' என்னைக் கைவிடவில்லை. பழம் நழுவி பாலில் விழுந்து, அதுனழுவி தேனில் விழுந்தும் ஆயிற்று. அதுவும் நழுவி வாயில் விழ வைக்க வேண்டும். உனக்குத்தான் அனுபவம் இருக்கே ராசா... 'விடாதே' என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக் கொண்டேன். ஆறு மாதம் இருக்கிறதே!
*****
தமிழ்மணியை பார்த்ததுமே எனக்குப் பிடித்திருந்தது. அவன் பெயரை உச்சரிப்பதுதான் சிரமம். தமில் என்று அழைக்கச் சொன்னான். அவன், 'லிசா' எனும்போது அந்தக் கண்களில் லேசான கிறக்கம் தெரியும். முதல் நாளே அசத்திவிட்டான்.
நான் ஆயிரம் வரிகளுக்கு மேல் எழுதி இருந்த மாட்யூல், நினைத்தபடி இயங்கவில்லை. அதை சரி செய்யுமாறு அவனைக் கேட்டிருந்தேன். இரண்டு நிமிடங்கள் கண்ணை அதில் ஓடவிட்டவன், ஒரு நொடியில் அதை அழித்துவிட - நான்கு நாள் வேலை - பதற்றமானேன். நான்கு வரிகள் எழுதினான். கம்பைல் செய்து ஓட விட்டான். கட்டி அணைத்துப் பாராட்டினேன். நான்கு மாதத்துக்கு முன் இவனை பார்த்திருந்தால், டேவிட் என் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டான்.
*****
இந்த இரண்டு மாதத்தில் லிசாவின் மனதில் ஓரளவு இடம் பிடித்து விட்டேன் என நினைக்கிறேன். இன்று நியவோ லியோன் மெக்சிகன் ரெஸ்டாரண்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தாள். அலுவலகத்தில் இருந்து நேராக சென்றதால், எனது டாமி பஹாமாஸ் உடைகளுக்கு வேலை இல்லை.
அவளுடைய அம்மா ப்ளோரிடாவில் இருப்பதாக சொன்னாள். அடுத்து, டேவிட் என்ற பாய் ஃப்ரெண்டுடன் வசிப்பதாக சொன்னபோது, இதுவரை உச்சத்தில் இருந்த எனது ரோலர் கோஸ்டர் சடாரென இறங்கியது. அவன் அதிர்ஷ்டக்காரன் என்றபோது, பெரும்பாலான அமெரிக்க பெண்களைப் போலவே அவன் ஒரு "டாஷ் டாஷ்" (கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்புக) என்றாள்.
"நீ ஒரு இரண்டு மாதம் முன்பே வந்திருக்க வேண்டும். அவனை வீட்டுக்கே அழைத்திருக்க மாட்டேன்," என்று அவள் சொன்னபோது இதமாக இருந்தது.
"இப்போது அவனுக்கு 'டாடா' சொல்வாயானால், நான் ரெடி," என்று சிரித்தேன்.
அவள் ஏதோ ஜோக் கேட்டது போல் நகைத்தாள்.
ம்... இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும் என நினைத்துக்கொண்டேன்.
டேவிடின் செய்து வரும் 'மதம்' சம்பந்தமான ஆராய்ச்சிகள் தான் தன்னை முதலில் கவர்ந்ததாகச் சொன்னாள்.
இந்தியர்களில் பெரும்பாலானோரும் தான் தான் பெரிய ஞானி என நினைப்போமே. எனக்கு தெரிந்த, தெரியாத தத்துவங்களை உளற... அவளோ ரசித்துஜ் கேட்டாள்.
"டேவிடுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஞாயிறன்று மதியம் வாயேன். ஒரு இந்திய உணவகம் செல்லலாம், டேவிடுடன்," என்றாள்.
*****
'நான் தமில்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் இந்து மதம் பற்றி நிறைய தெரிந்தவன் என்று லிசா சொல்லி இருந்தாள். நிறைய பேசினோம். மேம்போக்காக சிலவற்றை அறிந்திருந்தான். பிரச்சிநோபநிஷத்தின் கேள்வி - பதில்களை லேசாகத் தொட்டதும் அதிர்ந்து போய்விட்டான்.
ஆனால், 'புளியங்கொட்டை சாமியாரை'ப் பற்றி அவன் சொன்னது அபூர்வமாகவே இருந்தது. அவர் வயது இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலாம். 'ஹான்காக் மாதிரியா?' என்றேன். 'இல்லை அவர் உடல்களை சட்டை மாற்றுவது போல் மாற்றிக் கொள்வார்,' என்றான். அந்த மகானை, அவர் வாழும் தேசத்தை பார்க்க ஆவல் பொங்கியது.
*****
டேவிட்டை என்னமோன்னு நினைத்தேன். நிஜமாகவே ஜித்தனாக இருந்தான். நமக்கு ஜாவா சர்ட்டிபிகேட் வாங்கவே தாவு தீர்ந்து போய்விட்டது. இதில் உபநிஷத் படிப்பதெல்லாம் முடியிற காரியமா? இவனுக்கு சரியான ஒரு ஆப்பும், லிசாவை லவட்ட ஒரு திட்டமும் உடனடியாக உருவானது.
புளியங்கொட்டை சாமியாரை வேண்டிக்கொண்டேன். இவனை அங்கு அழைத்துச் சென்று, அவரிடம் சிஷ்யனாக சேர்த்துவிட வேண்டும். இவன் உபநிஷ ஆராய்ச்சி பண்ணட்டும்; நான் லிசாவுடன் பிப்ரவரியில் இங்கு வந்துவிட்டால்..?
ஹா.. ஹா.. ஹா..
*
"இந்த ஜனவரியில் இந்தியா செல்கிறேன். என்னோடு வாங்களேன்... உங்கள் ஆராய்ச்சியும் முடியும்; புளியங்கொட்டை சாமியார் எனக்கு நன்றாக தெரியும்," என்றேன். சொன்னவுடன் அவரை வேண்டிக்கொள்ள ஆரம்...
அதற்குள், "தமில் உன்னுடன் நரகத்துக்கு வரவும் தயார்," என்றாள் லிசா.
அடுத்த ஒருமணி நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்ய வேண்டும் என முடிவு செய்தது, புளியங்கொட்டை சாமியாரின் கருணை தவிர வேறு என்ன?
முதல் பத்தியில் நழுவிய பழம் வாயில் விழுந்தேவிடும்.
******
லிசாவோடு இந்தியா செல்வது, எதோ சொர்க்கத்துக்கு காதலியுடன் செல்வது போல் இருந்தது. ஒரே தொல்லை... அவள் மடியில் கட்டியிருக்கும் இந்த பூனை டேவிட்.
அன்று பர்வத கிரியில் ஏற, லிசா சிரமப்பட்டாள். டேவிட் அவளை கண்டுகொள்ளாமல் கேமிராவை நிரப்பிக் கொண்டிருந்தான். அவளை அணைத்து அழைத்துச் செல்லும் அந்த மணித்துளிகள் நீடிக்காதா என்று ஏங்கினேன்.
புளியங்கொட்டை சாமியாரை வணங்கி, இவர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் அமெரிக்க ஆங்கிலத்தில் உபநிஷதம் பற்றி விளக்கியது, டேவிடை அசத்தியது. அவர் பார்வை மட்டும் லிசா மீதே இருந்தது, எனக்கு உறுத்தியது. லிசா என் காதருகே வந்து, 'இவன் பார்வை சரியில்லை... நான் கோவில் சிற்பங்களை பார்க்க வேண்டும்,' என்றாள்.
அவள் போன அடுத்த நிமிடம் அந்தப் பூனை அங்கு வந்தது. பலவீனமாக அவர் காலடியில் படுத்தது. இரண்டு மணி நேர உபதேசத்துக்கு பிறகு டேவிட், புளியங்கொட்டை சாமியாரின் வயதை கேட்டான்.
அவர் சிரித்துக்கொண்டார்.
"உடம்புக்குதான் வயது. என் ஆன்மாவுக்கு இல்லை," என்றார்.
"அது சரி, உடம்பை விட்டதும் உயிர் என்ன செய்ய முடியும்?" டேவிட்டின் குரலில் எகத்தாளம் இருந்தது.
"இந்தப் பூனை இப்போது இறக்கப் போகிறது. என்னால் அதை மீண்டும் எழவைக்க முடியும்," என்றார்.
இதுவரை அவரை குருவாக மதித்து மரியாதை காட்டிக்கொண்டிருந்த டேவிட், இப்போது வேறு விதமாக தெரிந்தான். என் காதில் லிசா சொன்னது, அவனுக்கும் கேட்டிருக்க வேண்டும்.
"சரி உன் ஆன்மாவை தருகிறாயா?" என்று டேவிட்டை சாமியார் கேட்டபோது... அப்படி ஏதாவது செய்துவிட்டால் விபரீதமாகிவிடப் போகிறது என்று டேவிட்டை தடுக்க நினைத்த என் மனத்தை, 'இவன் பூனையாகிவிட்டால் நமக்கு லிசா கிடைப்பாளே,' என்ற நப்பாசை தடுத்தது.
"நான் சொல்வதை சொல்," என்றார்.
சொன்னான் டேவிட்.
ஒரு ஒளிப் பிழம்பு அவன் உடலில் இருந்து பூனை உடலில் புகுந்த போது, புளியங்கொட்டை சாமியாரின் உடலில் இருந்தும் ஒரு ஒளிப்பிழம்பு எழுந்து, டேவிட் உடலில் புகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை.
டேவிட் (புளியங்கொட்டை?!) என் அருகில் வந்து, "இது யாருக்கும் தெரியாது. தெரியக்கூடாது. தெரிந்தது, உன்னை எலியாக்கி அந்த பூனைக்கு விருந்து வைத்துவிடுவேன்," என்றான்.
அதன் பிறகு, அவர்களை வழியனுப்பி வைத்தது, வெளியே சொல்ல முடியாத வேதனைங்க.
*ஒரு வருடம் கழித்து, லிசாவிடமிருந்து இ-மெயில் வந்தது. அதில் டேவிட்டை அளவின்றி புகழ்ந்து தள்ளியிருந்தாள்.
"டேவிட்டின் கனவு, பால் பிரவுன் போன்ற எழுத்தாளனாவது. இப்போது நிறையவே சாதிக்கிறார், தமில். இந்தியா சென்று திரும்பியதில் இருந்து மிகப்பெரிய மாற்றம், தமில். குடிப்பதில்லை. என்னை உள்ளங்கையில் தாங்குகிறார். அவர் எழுத்துக்கள் என்னை பெருமைப்பட வைக்கின்றன. உன்னால்தான் இந்த மாற்றம். மிக மிக நன்றி."
இந்த மெயிலை பார்க்க பார்க்க, என் வயிறு எரியுமா இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக