பூமிகா
யூத்புல் விகடனில் வந்த கதை.
- நிவேதிதா தமிழ்
உயரினங்களின் ஐந்தாம் பரிமாண பெருவெளியின் தலை நகரம். நான்காம் பரிமாணமான காலத்தையும் உள்ளடக்கியது. நமது கோள் போன்ற முப்பரிமாண உலகங்களின் முக்காலத்தையும் கருத்தரித்து, உருக்கொடுத்து, வாழ்வித்து அழிக்கும் தொழில் செய்யும் உயரினங்கள் வாழும் வெளி.
பூமிகாவின் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருந்தான் மாயன். அது நகரத்தின் மத்தியில் இருந்த பிரபல அடுக்கு மாடியின் மூன்றாம் தளத்தில் இருந்தது. அடித்தளத்தில் சூரி. அடுத்த தளத்தில் புதன். அதற்கு அடுத்த தளத்தில் தேவதை வீனஸ். அதற்கு மேல் மாயனின் அன்புக் காதலி பூமிகாவின் அலுவலகம். அவர்களின் கால அலகுகள் நமக்கு எட்டாதவை. அவர்களின் ஒரு மணித்துளி நமது பல நூற்றாண்டுகள்.
மாயன், பூமிகாவின் வருடாந்திர செய்திறன் ஆய்வுக்காக வருகிறான். சென்ற வருடம் வந்த போது அவள் படைத்து இயக்கிக் கொண்டிருந்த டைனோசர்கள் அவனை மிரள வைத்திருத்தது. மாயன் அங்கு தோன்றியபோது பூமிகா வந்திருக்கவில்லை. அவளின் காரியாலயன் பூமிகாவின் அறையை திறந்தான். அகண்ட நாற்பரிமாண திரை விரிய, மாயனின் நான்கு கைகளும் வேகமாக செயல் இயங்கியது.
அதி வேகமாக சுற்றிக்கொண்டிருந்த கோள்கள் நிதானமாகின.
கால பரிமாணத்தின் புள்ளியை பல நிலைகளில் நிறுத்தி நிகழ்வுகளையும், அவற்றின் வீரியத்தை கணிப்பது அவன் நோக்கம். அவன் கண்ட முதல் காட்சி - அணுகுண்டால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓடும் காட்சி. அடுத்து சிலுவைப்போர். அடுத்ததும் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். மத்திய ஆசியாவில், மும்பையில் அயோத்தியில், அமெரிக்காவில்...
அடுத்து அவன் கண்டது அவனை அழவைத்தது.
பசியில் இறக்கும் எதியோப்பிய சிறார்கள்.
பெண் என்பதால் கொல்லப்படும் தமிழ்க் குழந்தைகள்.
அடுத்து அவன் பார்க்க நேர்ந்ததோ அதைவிட கொடுமை... இலங்கையின் இனவழிப்பு.
இவர்களின் இன விருத்தி? சந்தோஷ சுகிப்புகளின் வாசல்கள் - நரகல் வெளியேறும் வழியின் அருகில்.
அவனின் கார் வண்ணம் ரத்த சிகப்பானது படிப்படியாக.பூமிகா உள்ளேவர அவனது தேக அனலை அவளால் உணர முடிந்தது.
"பூமிகா - என்ன இது? இவற்றில் எங்காவது புத்திசாலித்தனம் என்று ஒன்று இருக்கிறதா? தன் பிறப்பை அறியாதவர்கள் தன்னை படைத்தவனை அறிந்ததாக சொல்லி அதன் பெயரால் தனது இனத்தை கொல்கிறார்கள். அதற்கு மேல் ஆயிரம் சொல்லி இனத்தையே வேரருக்கிறார்கள். என்ன படைப்பு இது?"
"அது... வந்து..."
"உனது வேலையில் ஒரு துளியும் புத்திசாலித்தனம் இல்லை. மன்னித்துவிடு. உன்னை வேலையில் இருந்து விடுவிக்க நினைக்கிறேன்."
"நீங்கள் ஒரு பாதி மட்டும் பார்த்து முடிவெடுக்கிறீர்கள்."
"நீ காட்டேன் பார்க்கலாம்"
அவள் காலச் சக்கரத்தை மெல்ல சுழற்றினாள் - அமைதியான அந்த பூமி ஒரே நாடாக இருந்தது. மத சின்னங்கள் ஆலயங்கள் எல்லாம் கண் காட்சி பொருளாக இருந்தது. சரித்திரத்தில் இருந்து உருவான கடவுள் சரித்திரமாகி இருந்தான். மனிதர்கள் சகமனிதனை கடவுளாக பார்த்தார்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தான் மனிதன்.
"பூமிகா - ஏமாற்றாதே. மனிதனின் தற்போதைய நிலை என்ன?"
அவள் மீண்டும் கால சக்கரத்தை சுழற்ற - தன்னை படைத்தவனுக்கு (ளுக்கு?) நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள் - அமெரிக்கர்கள். பேயை விரட்ட பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள் சைனாகாரர்கள். மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செய்பவர்கள் அமைதியாக தெரிந்தார்கள்.
"கல்வி எப்படி?"
"உலகிலேயே எல்லோரும் விரும்பும் கல்வி இது." பூமிகா அந்த அமெரிக்க பள்ளியை சொடுக்கினாள்.
அந்த குரு, " We must know that the theory of evolution alone does not exist. There are people like me who believe in Intelligent Design," என்றாள்.
"பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல - நாம் அனைத்தும் அறிந்த ஆண்டவரால் படைக்கப்பட்டவர்கள் - என்ற தத்துவமும் உள்ளது. அதை நான் நம்புகிறேன்."மாயனின் செந்நிறம் மாறியது.
"நிகர் அற்ற செயல் திறன் - பரிணாம வளர்ச்சி அடிப்படைக்கு உனது பங்களிப்பு."
அவனின் கையொப்பம் முடிந்து, விடை பெரும் தழுவலில் காதல் சொன்னான் - சொன்னாள் - சொன்னார்கள்.
*
To read in Vikatan
http://youthful.vikatan.com/youth/Nyouth/nivethithathamizh30122009.asp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக