Pages

செவ்வாய், 8 ஜூன், 2010

ஷிவ் நவீன்

ஷிவ் நவீன்

அந்த கிரகம் சுய ஒளியுடன் இருந்தது. பால்வெளியின் விளிம்பில். சிறிய குடிலில் இருந்து திருச்சடையன் வெளியில் வந்தார். அவர் நடையில் வயது காரணமான சிறு தள்ளாட்டம் இருந்தது. அவர் மனைவி அபிராமி கோபமாக எதிரில் வந்தாள். தெருவில் மழலைகள் விளையாடிக்கொண்டிருந்தன.
"என்ன காலையிலேயே கிளம்பிவிட்டீர்கள். எத்தனை வயதானாலும் விளையாடல்தானா?"
"என்ன செய்வது தேவி? பதினான்கு உலகுகள் படைத்துவிட்டேன். பதினாலாம் உலகில் இன்று செண்பக பாண்டியனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற வழமையான சந்தேகம் வந்து விட்டது. அவனுடன் சிறிது விளையாடி செம்மொழி வளர்க்க வேண்டும். கீரனை மீண்டும் எரிக்க வேண்டும்."
"இரண்டு பிள்ளைகள் பதினாறு பேரக் குட்டிகள். இன்னும் நாடகம் நடத்த நீங்கள் செல்ல வேண்டுமா?"
"என்ன தேவி இப்படி கேட்கிறாய். அவர்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கிறதா? நீ கேட்ட இந்த கேள்வியை அவர்கள் யாராவது இதுவரை கேட்டார்களா?"
"உங்களிடம் கேள்வி கேட்பவரை நெற்றி கண்ணால் பார்ப்பதை நிறுத்தினால் கேட்பார்கள்."
"என்ன உளறுகிறாய்?"
"கோபம் விடுங்கள். நேற்று கூட ஷிவ் கேட்டான். தாத்தா எப்போது ரிடையர் ஆவார் என்று. அவன் புத்திசாலித்தனத்தில் உங்களை உரித்து வைத்திருக்கிறான். அவனிடம் இந்த பதினாலாவது பூமியை தாருங்கள். வருங்காலம் பிள்ளைகளுடையது. பொறுப்பை அளித்தால்தானே அவர்கள் திறமை புரியும்"
"சரி அவனை வரச்சொல்"
அபிராமி ஷிவ் நவீனை அழைத்தாள்.
"நவீன்... தாத்தா உன்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்". அபி முகத்தில் பெருமிதம் இருந்தது.
"சொல்லுங்கள் தலைவரே" - தாத்தாவுக்கு தலைவர் என்று அழைப்பதுதான் பிடிக்கும்.
"ஷிவ் - பதினான்காம் பூவுலகில் செண்பக பாண்டியனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற சந்தேகம் வழமைபோல் வந்திருக்கிறது. இன்று தருமியுடன் கீரனுடன் பாண்டியனுடன் விளையாட அங்கு செல்ல கிளம்பினேன். உனது பாட்டி எனை தடுத்து உன்னை அனுப்ப சொல்கிறாள். உனது எண்ணம் என்ன?"
"இதற்கு மட்டுமா...... அல்ல?"
"இதை நீ சரியாக செய்து முடித்தால் - அந்த பூமி உனது."
"அப்படியானால் சரி"
"இந்தா எனது செய்யுள் - பொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி..."
"தாத்தா நான் செல்ல வில்லை. நீங்களே செல்லுங்கள்."
"தேவி .. நான் சொல்லவில்லை. இவர்களுக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை என்று."
"பக்தர்களின் குறையை எந்நேரமும் கேட்கும் நீங்கள், ஷிவ் சொல்வதையும் கேட்கலாமே."
"வயதானேலே மரியாதை குறைகிறது. சொல்லப்பா."
"தாத்தா மன்னிக்க - தலைவரே - என்னிடம் பொறுப்பு தருவதானால் நான்தான் முடிவு எடுப்பேன். நீங்கள் யுகம் யுகமாக செய்வதை நானும் செய்ய வேண்டுமானால் - நான் எதற்கு?"
"சரி அப்பா - உனது விருப்பம்போல் செய்"
ஷிவ் பொது தேர்தலில் ஜெயித்த கட்சி தலைவனின் நடையில் சென்றான்.
"ஒரு உலகை பாழ் படுத்தி விட்டாய் தேவி" என்றார் சடையன்.
"பார்க்கலாம்" என்றாள் அபி.
அந்த கோவிலில் தருமி புலம்பிக்கொண்டிருந்தான்.
"ஆயிரம் பொண்ணாச்சே ஆயிரம் பொண்ணாச்சே"
ஷிவ் பிரசன்னமானார்.
"தருமியே மன்னரின் சந்தேகம் தீர்க்கும் பாட்டு வேண்டுமா? அதை நான் உனக்கு தருகிறேன்." என்றார்.
தருமியின் புலம்பல் நிற்கவில்லை. தர்கங்கள் முடிந்து பாட்டோடு தருமி அரசவை சென்றான்.
செண்பக பாண்டியன் அரியணையில்.
"எனது செந்தமிழ் சங்கம் தீர்த்து வைக்காத சிக்கலை தீர்க்க வந்த தருமியே - சொல்லுங்கள்" என்றான்.
"மன்னா ... நானே இயற்றி வந்த பாடல். படிக்கிறேன் கேளுங்கள் ...
செந்தமிழ் வளர்க்க சங்கம் போதாது
பைந்தமிழ் வளர பல்கலை போற்று
முடிமணம் அறிய மருத்துவம் வளர்த்து
கணிதம் இருந்தாலும் கலைக்கலாம் உன்மயக்கம்."
செண்பக பாண்டியன் துடித்து எழுந்தான்.
"தருமியே உனது பாட்டு ஒரு தெளிவை தந்தது. கொண்டுவாருங்கள் பொற்கிழியை"
கீரன் எழுந்தார். "நிறுத்துங்கள் மன்னா." என்றார்.
"இந்த பாட்டை நீர்தான் இயற்றிநீரா?"
தருமி உளற .... அனைவரும் சிரிக்க. அவன் மீண்டும் கோவிலில் .....
"புறப்பட்டு என்னோடு", என இறையனார் முன் செல்ல ....
"எவன் என் பாட்டில் குற்றம் கண்டவன்?", நவீனின் சீற்றம் சிவாஜியின் நடிப்பைவிட அதிகம் இருந்தது.
"நான் கீரன். மரியாதையாக பேசுங்கள்."
"என்ன குற்றம் கீரனே... சொல்லிலா பொருளிலா?"
"சொல்லில் இல்லை. பொருளிலும் இல்லை"
"பின்னர்?"
"மன்னரின் சந்தேகத்திற்கு பதில் இல்லையே?"
"பின்னர் எப்படி பொருளில் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டீர்?"
"மீன் கேட்பவனுக்கு ... மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது உமது செய்யுள்."
"அது தவறா?"
"நிச்சயமாக. வர்ணங்கள் இருக்க வேண்டும். சாதிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னன் கூந்தலை முகர்ந்துகொண்டு நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு நல்லாட்சி செய்வான்."
"நக்கீரா நன்றாக என்னை பார்." - நவீனின் நெற்றிக்கண் திறக்க - கீரன் மன்னன் மன்னனின் தேவி அனைவரும் எரிந்தனர்.
அமைச்சர் குழு ஆலையம் நோக்கி விரைந்தது. தொழுதது.
நவீன் பாண்டியனையும் கீரனையும் தேவியையும் பதின்மூன்று லோக சுற்றுலா அழைத்து சென்றான். சாதி சங்க பிரச்சினைகளையும் அது இல்லாத மேல் நாட்டு தொழில் புரட்சிகளையும் காட்டினான்.
மெய்ஞானம் சுடர்விடும் நாட்டில் - ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவாது - என்று அறிவியல் சுடர்விட்ட நாட்டில் - கருமேகம் வரல் ஆகாது.
அந்த பதினான்காவது உலகில் - தமிழ் உலக மொழி ஆக அறிவியல் உறுதுணை ஆனது.
"பார்த்தீர்களா? நம் பேரனை?" எனறாள் அபி.
"உம்ம்ம்ம்" - என்ற கிழவனின் கண்களில் தெரிந்தது பெருமிதம்.

1 கருத்து:

  1. கிழவனின் கண்களில் தெரிந்த பெருமிதம் ,வாசித்த எங்கள் கண்களுக்கும் இடம் மாறியது. நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு